

ஆய கலைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர்கள்கூடக் குழந்தை வளர்ப்பில் கரைகாண முடியாது போலிருக்கிறது. நாளுக்கு நாள் விதவிதமான சிக்கல் களும் புதுப்புதுப் பிரச்சினைகளும் எழுகிற சூழலில் சரியான குழந்தை வளர்ப்பு என்பது கனவாகிவிடுமோ என்ற பயத்தை தன் கட்டுரைகளால் போக்குகிறார் ஜெயராணி.
குழந்தைகள் நம் சொத்து அல்ல; அவர்கள் இந்த உலகத்துக்கு வருவதற்கு நாம் கருவியாகச் செயல்பட்டிருக்கிறோம் என்ற புரிதல் இருந்தாலே குழந்தைகள் மீது அன்பென்ற பெயரில் நாம் செலுத்துகிற ஆதிக்கம் குறைந்துவிடும். ‘அம்பை எய்துவது இயற்கையே! நீங்கள் அல்லர். நீங்கள் வெறும் வில்தான்!’ என்னும் கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளை வைத்துத் தன் வாதத்தை ஜெயராணி தொடங்குகிறார்.
ஆய்வறிக்கைகள், மேற்கோள்கள் எனத் தகவல் களஞ்சியமாக இல்லாமல் தன்னுடைய அனுபவங்களையும் தன் நண்பர்களுக்கு நேர்ந்தவற்றையும் சொல்லி அதன் மூலம் குழந்தை வளர்ப்புக்கான குறிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் வேலையை நம்மிடமே விட்டுவிடுகிறார். அது வாசிப்புக்குச் சுவைகூட்டுவதுடன் மாற்றத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது.
பொறுப்பும் வளர்ப்பும்
மதிப்பெண் வாங்குவதும் திறமைகளை வெளிப்படுத்துவதும் மட்டுமே சரியான குழந்தை வளர்ப்பு எனப் பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.
ஆனால், உணவை வீணடிக்காமல் சாப்பிடுவதில் தொடங்கி சக உயிர்கள் மீது அன்பு செலுத்துவது, பாலினப் பாகுபாட்டைக் களைவது, பதின் பருவச் சிக்கல்களை எதிர்கொள்வது, பாலியல் கல்வியின் அவசியம், பிற்போக்குத்தனமான சமூகக் கட்டமைப்புகளைக் கேள்விக்குள்ளாக்குவது எனப் பல்வேறு தளங்களில் தனது கருத்துகளைப் பதிவுசெய்யும் ஜெயராணி, அந்தக் கட்டுரைகளின் வழியாகவே குழந்தை வளர்ப்பையும் சொல்கிறார்.
குழந்தை வளர்ப்பு என்பது தனித்ததொரு செயலல்ல; நம் அன்றாட வாழ்வுடனும் அதன் அரசியலுடனும் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதைத்தான் இவரது கட்டுரைகள் சொல்கின்றன.
சமூகக் குற்றங்கள் பெருகிவரும் இந்நாளில் குழந்தைகளைச் சமூகப் பொறுப்புடன் வளர்ப்பதன் அவசியத்தை உணர்த்துகின்றன சில கட்டுரைகள். தனி மனித ஒழுக்கமே பல்வேறு தவறுகளைக் குறைக்கும் எனச் சொல்லும் ஜெயராணி, முதலில் பெற்றோர் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்கிறார். புறம் பேசுவது, ஏமாற்றுவது, பொய்சொல்வது, ஊழலில் திளைப்பது, பிற உயிருக்குக் கேடு விளைவிப்பது எனப் பெற்றோரே பல்வேறு தீய செயல்களில் ஈடுபடுவதைப் பார்த்து வளரும் குழந்தைகள் அவர்களைப் போலவே தீயவற்றுக்குப் பழகிவிடுவார்கள்.
பிறகு அவர்களிடம் நன்னெறியைப் போதித்து எந்தப் பலனும் இல்லை. குழந்தைகளை அறிவுள்ளவர்களாக மட்டுமல்ல; பொறுப்புள்ளவர்களாகவும் வளர்க்க இந்தப் புத்தகம் வழிகாட்டுகிறது. குழந்தை வளர்ப்பு என்பது தனி மனிதச் செயல் அல்ல; அது ஒரு கூட்டுப் பொறுப்பு என்பதையும் இந்தப் புத்தகம் உணர்த்தத் தவறவில்லை.
ஆசிரியர்: ஜெயராணி, வெளியீடு: தமிழ்வெளி,
எண் 1, பாரதிதாசன் தெரு, சீனிவாசா நகர், மலையம்பாக்கம், சென்னை-600122.
தொடர்புக்கு: 9094005600. விலை: ரூ.180/-