

உணவையும் உறக்கத்தையும் தியாகம் செய்தால்தான் தேர்வை நன்றாக எழுத முடியும் எனப் பல மாணவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஆரோக்கியமான உணவும் போதுமான உறக்கமுமே நினைவாற்றலைப் பெருக்கித் தேர்வைச் சிறப்பாக எழுத உதவும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
தேர்வு நேரத்தில் மட்டும் இரவெல்லாம் கண்விழித்துப் படிப் பது அல்லது அதிகாலை தொடங்கி தேர்வு அறைக்குள் செல்லும்வரை படிப்பது எனப் புத்தகப் புழுவாகச் சிலர் மாறி விடுவார்கள். அதேபோல் பலர் தேர்வு நேரத்தில் பள்ளிக்குச் சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகக் காலை உணவைத் தவிர்த்துவிடுவார்கள். இதனால் மாணவர்கள் உடனடியாகக் களைத்து
விடுவதுடன் படித்தவற்றை நினைவு படுத்தி எழுதுவதில் சிரமம் உண்டாகும். மேலும், சில பெற்றோர் தேர்வு நேரத்தில் பிள்ளைகள் துரித உணவைக் கேட்டால் என்றைக்கோ ஒருநாள்தானே எனப் பிள்ளைகள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். இதனால், அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைசுற்றல் போன்றவை ஏற்படலாம்.
ஏலக்காய் தண்ணீர்
தேர்வு நேரத்தில் மாணவர்கள் குறைவாகவோ அதிகமாகவோ சாப்பிடுவது உடலுக்குக் கேடு என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ப்ரீத்தி ராஜ். “சரிவிகித உணவே குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் நினைவாற்றலைப் பெருக்கவும் உதவும். தேர்வு நேரத்தில் வெந்நீரில் ஏலக்காயையும் சீரகத்தையும் போட்டுக் கொதிக்கவைத்துக் குடிப்பது உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும். தேர்வு நாட்களில் மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் குழந்தைகளுக்கு இந்தக் குடிநீரை கொடுத்தால் நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருப்பார்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் மூன்று லிட்டர் தண்ணீர் அவசியம். தேர்வு நேரத்தில் மாணவர்கள் பொதுவாகப் பதற்றத்துடன் இருப்பார்கள். இது வயிற்றில் அமிலச் சுரப்பைத் தூண்டும். இதைத் தடுக்க காலையில் டீ, காபிக்கு முன்பு ஒரு டீஸ்பூன் சுத்தமான நெய்யைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். டீ, காபிக்குப் பதிலாகச் சூடான பால், சத்துமாவுக் கஞ்சி போன்றவற்றைக் கொடுக்கலாம்” என்கிறார் ப்ரீத்தி.
நால்வகை உணவு
காலை உணவில் நான்கு வகையான உணவு இருக்க வேண்டும். ஒன்று சாமை, வரகு, ராகி, கம்பு ஆகிய தானியங்களை மாவாக அரைத்து, அவற்றைத் தோசை மாவுடன் சேர்த்து தோசையோ இட்லியோ செய்து கொடுக்கலாம். அதனுடன் நான்கு அல்லது மூன்று வகையான காய்கறிகளைப் போட்டு வைக்கப்பட்ட சாம்பாரைக் கொடுக்கலாம். அல்லது தட்டைப் பயறு, கொண்டைக்கடலை போன்றவற்றைப் போட்டுச் செய்த சுண்டல் குழம்பையோ தேங்காய், பொட்டுக்கடலை சேர்த்து அரைத்த சட்னியையோ கொடுக்கலாம்.
காலையில் கீரையைச் சமைக்க முடியாதவர்கள் கொத்தமல்லி, கறிவேப் பிலை, புதினா போன்றவற்றை அரைத்துத் தோசை, சப்பாத்தி மாவுடன் கலந்து செய்து கொடுக்கலாம். காலையில் உணவுடன் எதாவது ஒரு பழத்தைக் கொடுக்கலாம். தேர்வெழுதி முடித்து வெளியே வந்ததும் சாப்பிடுவதற்காக மாதுளை முத்துக்களைக் கொடுத்து அனுப்பலாம். “ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கும். மேலும், தேர்வு எழுதும்போது உண்டாகும் அச்ச உணர்வு மட்டுப்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். படித்தவற்றை நினைவுபடுத்தி எழுத முடியும்” என்கிறார் ப்ரீத்தி.
கலவை சாதம் வேண்டாம்
மதிய உணவுக்கு பிரியாணி, புளி சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் போன்ற கலவை சாத வகைகளைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதில் மூன்று கைப்பிடி சாதம், காய்கறிகள் போட்டுவைக்கப்பட்ட சாம்பார், பொறியல் அல்லது அவியல் கொடுக்கலாம். இல்லையென்றால் காலையில் வைத்த சுண்டல் குழம்பைக் கொடுத்து அனுப்பலாம். முட்டை, மீன் குழம்பு போன்றவற்றையும் கொடுக்கலாம். பொரித்த மீனைவிட மீன் குழம்பு நல்லது. அதேபோல் மட்டன், பீஃப் போன்ற எளிதில் செரிமானம் ஆகாத உணவைத் தேர்வு நாட்களில் தவிர்க்க வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டுவிதமான பழங்கள், மூன்று விதமான காய்கறிகளைச் சாப்பிடுவது நல்லது.
மாலை வீட்டுக்கு வந்ததும் உடனடியாகப் படிக்கச் சொல்லி குழந்தைகளை வற்புறுத்தக் கூடாது. குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் அவர்களைத் தூங்கவிட வேண்டும். தூங்கி எழுந்தவுடன் கொழுக்கட்டை, பச்சைப்பயறு சுண்டல், பனங்கற்கண்டு சேர்த்த பால் பாயசம் போன்றவற்றைக் கொடுப்பது நல்லது. அல்லது கேழ்வரகு மாவில் முருங்கைக் கீரையைச் சேர்த்துப் பிசைந்து அடை செய்து கொடுக்கலாம்.
சர்க்கரையைத் தவிர்ப்போம்
சர்க்கரை உடலில் அதீத உற்சாகத்தை உருவாக்கிப் படிப்பில் கவனம் செலுத்தவிடாமல் செய்துவிடும். விளையாடும் ஆசை அதிகரிக்கும். மாலை உணவுக்குப் பிறகு நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டு வருவது மன அமைதிக்கு வழிவகுக்கும்.
சீக்கிரமாகத் தூங்கிவிடுங்கள்
“உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால்தான் நல்லபடியாகப் படிக்க முடியும் என்பதை மாணவர்களும் பெற்றோரும் இந்தத் தேர்வு நேரத்தில் உணர்ந்து செயல்படுவது நல்லது” என்கிறார் ப்ரீத்தி ராஜ்.