

நான் எப்போதும் வாடிக்கையாகக் கரும்புச் சாறு குடிக்கும் கடையின் உரிமையாளர் பிளாஸ்டிக் ஸ்டிராக்களுக்குப் பதிலாகப் பப்பாளித் தண்டு, ஆமணக்கு இலைத் தண்டு போன்றவற்றைப் பயன்படுத்திவருகிறார். இவரது கடை, நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியில் சாலையோரத்தில் இருக்கிறது. அவரது இந்த முயற்சியைப் பழச்சாறு விற்பனை செய்கிற அனைவரும் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும்.
- சுந்தர் ஈஸ்வரன், முக்கூடல், நெல்லை.
வளையல்களில் இருந்து பிளாஸ்டிக் ஒழிப்பைத் தொடங்கியிருக்கிறேன். கண்ணாடி வளையல்கள், கவரிங் வளையல்கள், தங்க வளையல்கள் என மாற்றி மாற்றி அணிகிறேன். ஃபிரிட்ஜில் வைக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களுக்கு விடைகொடுத்துவிட்டேன். பிளாஸ்டிக் வாளிகளுக்குப் பதில் பரணில் தூங்கிக்கொண்டிருந்த பித்தளை அண்டா, செம்பு ஆகியவற்றைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன்.
பூ வாங்க பிளாஸ்டிக் கவர்களுக்குப் பதிலாகப் பனையோலைப் பெட்டி கைகொடுக்கிறது. மஞ்சள் பையோடுதான் கடைக்குச் செல்கிறோம். பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அரசு தடைவிதித்த பிறகுதான் பிளாஸ்டிக் பொருட்கள் நம்மை எந்த அளவுக்கு ஆட்கொண்டிருக்கின்றன என்பது புரிந்தது. பிளாஸ்டிக்கைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழ்வோம்.
- ஆர். சாவித்ரி, அம்மாபாளையம், சேலம்.
மீதமாகும் உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டு குப்பைத் தொட்டியில் போட்டால் ஆடு, மாடு போன்ற வாயில்லாத ஜீவன்கள் பிளாஸ்டிக் பையையும் சேர்த்தே விழுங்கிவிடுகின்றன. அதனால் அவற்றை இலையில் வைத்துக் கட்டி, அவை உண்பதற்கு ஏதுவாக வைத்துவிடுவேன்.
பிளாஸ்டிக் கவரைப் பிரிக்கும்போதே அதில் ஸ்டேப்ளர் பின் இருக்கிறதா எனப் பார்த்து முதல் வேலையாக அவற்றை நீக்கிவிடுவேன். கடைகளுக்குச் செல்லும்போது பொருட்கள் வாங்கும் அளவுக்கு ஏற்ற வகையில் பைகளை எடுத்துச் செல்வோம். பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்பதற்குக் குழந்தைகளையும் பழக்கி விட்டேன்.
பால் பாக்கெட்டை வாங்கி வந்ததுமே பாலைப் பாத்திரத்துக்கு மாற்றிவிடுவேன். சமையலறையில் பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழித்து, எவர் சில்வர், பித்தளைப் பாத்திரங்களுக்கு இடமளித்து விட்டேன். பிளாஸ்டிக் பயன்பாடு இல்லை என்பது கொஞ்சம் பெருமையாகவும் இருக்கிறது!
- ஆர். ஜெயந்தி, மதுரை.
பிளாஸ்டிக் ஒழிப்பில் என் பங்கு பிளாஸ்டிக் ஒழிப்புக்கு உதவும் வகையில் நீங்கள் பின்பற்றும் நடைமுறைச் செயல்பாட்டைத் தகுந்த ஒளிப்படங்களுடன் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். மின்னஞ்சலும் அனுப்பலாம். உங்கள் ஆலோசனை இயற்கையைப் பாதுகாப்பதுடன் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும். |