

இந்தியாவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ என்ற ஆவணப்படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதைத் தட்டிச்சென்றது. மாதவிடாய் குறித்து இந்தியக் கிராமங்களில் நிலவும் மூடநம்பிக்கைகளை மையமாக வைத்து எடுக்கப் பட்டிருக்கிறது இந்தப் படம். இந்தியாவைச் சேர்ந்த குனீத் மோங்கா தயாரிப்பில், ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண் இயக்குநர் ராய்க்கா ஸெட்டாப்ச்சி (25) இதை இயக்கியிருக்கிறார்.
இதில் மலிவு விலை நாப்கினைத் தயாரித்த கோயம்புத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தமும். உத்தரப்பிரதேசத்தில் கதிகெரா கிராமத்தைச் சேர்ந்த சினேகா என்ற பெண்ணும் நடித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹபூர் கிராமத்தில் மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகள் அதிகம். இந்த உண்மை நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஹபூர் கிராமப் பெண்கள் மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளால் எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள், எப்படி இந்த மூடநம்பிக்கைகளிலிருந்து வெளிவருகிறார்கள், எப்படி மலிவு விலை நாப்கினைத் தயாரித்து, பயன்படுத்துகிறார்கள் போன்றவை இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
இன்றைக்கு சானிட்டரி நாப்கின்களுக்கு மாற்றாகத் துணி நாப்கின், மாதவிடாய் குப்பி, டாம்பூன்ஸ் போன்றவை முன்வைக்கப் படுகின்றன. ஆனால், இந்தியாவில் 12 சதவீதப் பெண்கள்தாம் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆயிரக்கணக்கான கிராமங்களில் தற்போதும் மாதவிடாய் நாட்களில் பெண்களைத் தனிமைப்படுத்தப்படுவதும், அவர்களுக்குச் சுகாதாரமான முறையில் சானிட்டரி நாப்கின்கள் அறிமுகப்படுத்தப்படாமல் இருப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்தியக் கிராமங்களில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, 26 நிமிடங்களில் இந்தப் படம் விவரிக்கிறது. கோவை, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. மாதவிடாய் மீதான மூடநம்பிக்கைகளிலிருந்து இந்தியச் சமூகம் வெளிவர வேண்டும் என்பதை ஆழமாகப் பதிவுச் செய்துள்ள இளம் இயக்குநருக்குப் பாராட்டுகள்.