சூழல் காப்போம்: சணல் பை பரிசு

சூழல் காப்போம்: சணல் பை பரிசு
Updated on
2 min read

பொதுவாக வீட்டுக்குவரும் பெண்களுக்குத் தாம்பூலம் வைத்துத் தருவது சிலரது வழக்கம். அதில்  ரவிக்கைத் துணியும் அடக்கம். ஆனால், அதைப் பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை. அதற்குப் பதில் சணல் பைகளைக் கொடுக்கலாம். என் மகள் திருமணத்தின்போது தாம்பூலப் பைகளுக்குப் பதிலாக சணல் பைகளைக் கொடுத்தோம். இந்தப் புது முயற்சியைப் பலர் பாராட்டினார்கள்.

தற்போது வீட்டுக்கு வரும் பெண்களுக்கு சணல் பைகளைக் கொடுக்கிறோம். அவர்களும் அதை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர். ஏதோ என்னால் ஆன சிறு முயற்சி. இந்தப் பரிசைக் கொடுக்கும்போது பிளாஸ்டிக்கைத் தவிர்க்கச் சொல்லி வலியுறுத்துவேன்.

- பிருந்தா ரமணி, மதுரை.

துணிக்கடைகளில் பெரிய அட்டைப் பெட்டியில் துணியை வைத்துக் கொடுப்பார்கள். பல மாதங்கள் உழைக்கக்கூடிய அந்தப் பெட்டிகளைத் தூக்கியெறியாமல் சமையலறையில் எண்ணெய் தூக்கு, லைட்டர், அஞ்சரைப் பெட்டி ஆகியவற்றை வைக்கப் பயன்படுத்தலாம். அதேபோல் அட்டைப்பெட்டிகளைப் பிரித்து அடுப்படி சுவரில் ஒட்டி வைப்பதன் மூலம் சுவரில் எண்ணெய் படிவது குறையும். இதன் மூலம் என் சமையலறையில் பிளாஸ்டிக் கவரின் பயன்பாடு குறைந்துள்ளது. பிளாஸ்டிக் குப்பைகளின் பயன்பாட்டை அன்றாட வாழ்வில் இருந்து தவிர்ப்போம்.

- அ. மது அமல்ராஜ், பாபநாசம், தஞ்சாவூர்.

plastic-3jpg100 

சமையலறை டப்பாக்களை மாற்றும் எண்ணம் இருந்தது. அப்போதுதான் ஞெகிழியில்லாத் தமிழகத்தை உருவாக்க அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது. வீட்டில் ஞெகிழிப் பயன்பாடு அதிகமுள்ள இடங்களில்  சமையலறை முதன்மையானது. காரணம் காலையில் அவசரமாகச் சமைக்கும்போது எந்தப் பொருள் எந்த டப்பாவில் உள்ளது என அவசரத்தில் கண்டுபிடிக்க முடியாது.

டப்பாவில் உள்ள பொருட்களைப் பார்த்தவுடனே தெரியும்வகையில் இருக்க பிளாஸ்டிக் டப்பாக்கள்தாம் உதவியாக இருந்தன. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதற்காக எவர்சில்வர் டப்பாக்களுக்கு இடம் கொடுத்தேன். அதில் என்ன சிறப்பு என்றால் என் கணவர் வாங்கி வந்த  சில்வர் டப்பாக்களில் உள்ளிருக்கும் பொருட்கள் வெளியே தெரியும் வகையில் இருந்ததுதான். இதனால் காலையில் சமையல் முடித்து வேலைக்குச் செல்லும் பதற்றம் குறைந்தது.

- சாந்தி சுப்பிரமணியன், திருநெல்வேலி.

அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு அறிவிப்பு வருவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நான் அந்தப் பணியைத் தொடங்கிவிட்டேன். கடைக்குப் போகும்போது பையுடன் சென்று, பிளாஸ்டிக் பை வேண்டாம் என்று மறுப்பதே என் வழக்கம். இதனால் நான் செல்லும் கடையில் இருப்பவர்களே, “மேடம் கவர்  வாங்க மாட்டாங்க” என்று சொல்லும் அளவுக்குப் பிரபலம். என்னுடைய இந்தச் சிறு செயல் அங்கிருக்கும்  ஒரு சிலரையாவது யோசிக்கச் செய்யும் என நினைக்கிறேன்.

என் மாணவர்களுக்கும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இதைப் பற்றி எடுத்துச்சொல்லி பின்பற்றச் செய்வேன். கறி வாங்க தூக்கு, டீ வாங்க பிளாஸ்க், எப்போதும் ஒரு துணிப்பை என என்னால்  இயல்பாக நகர முடிந்தது. ஆனால், திட்டமிடாமல் வாங்கும் உணவுப் பொட்டலம், சாம்பார் கவருக்கு மாற்றுதான் சிரமமாக உள்ளது. இதற்கு ஒரு மாற்று இருந்தால் நன்றாக இருக்கும்.

- கவிதா பஞ்சரத்தினம்.

பிளாஸ்டிக் ஒழிப்பில் என் பங்கு

பிளாஸ்டிக் ஒழிப்புக்கு உதவும் வகையில் நீங்கள் பின்பற்றும் நடைமுறைச் செயல்பாட்டைத் தகுந்த ஒளிப்படங்களுடன் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். மின்னஞ்சலும் அனுப்பலாம். உங்கள் ஆலோசனை இயற்கையைப் பாதுகாப்பதுடன்  மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in