Published : 23 Mar 2019 05:30 PM
Last Updated : 23 Mar 2019 05:30 PM

அரசியல் களம்: இட ஒதுக்கீடு முழக்கம் மட்டும்தானா?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவோம் என வீராவேசமாகப் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முழங்குகிறார்கள். இந்த முழக்கம் ஒவ்வொரு தேர்தல்களிலும் முக்கியக் கருப்பொருளாக உள்ளது. ஆனால், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டுவருவோம் எனக் கூறும் கட்சிகள், தேர்தல் காலங்களில் தங்களுடைய வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு இடம் தருவதே அதிசய நிகழ்வாக  இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வெளியிட்டிருக்கும் வேட்பாளர் பட்டியலும் இதைத்தான் உறுதி செய்கிறது.

உலக அளவில் உள்ள நாடாளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்த ஆய்வுப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 193 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில்  இந்தியா 149-வது இடத்தில் உள்ளது என்பதே நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் உள்ள பெண்களின் எண்ணிக்கை வெறும் ஒன்பது சதவீதம்தான் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெண்களின் குறைவான பிரதிநிதித்துவம்தான் அவர்களுடைய பிரச்சினைகளைச் சீரமைத்து மாற்றுக் கொள்கைகளை வகுக்க அரசியல் தளத்தில் விவாதிக்க முடியாமல் உள்ளது. பெண்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக சானிட்டரி நாப்கின்களுக்கு  12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டபோது அதை எதிர்த்து எழுந்த குரல்கள் மிகக் குறைவு என்பதையும் நாம் இதனுடன் இணைத்தே பார்க்க வேண்டும்.

நாற்பதில் பெண்களுக்கு எத்தனை?

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து இரண்டு திராவிடக் கட்சிகளும் எதிர்கொள்கின்றன. 40 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் மிகவும் சொற்பம். அஇஅதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டாலும் ஒரேயொரு தொகுதியில் மட்டுமே பெண் வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது.

ஆனால், ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் சார்பில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியுள்ளார். மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 41 சதவீதம்  இடம் அளித்திருக்கிறது. மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் மேற்கு வங்கத்திலிருந்துதான் அதிகமான பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

தமிழகத்தில் ஆளும் கட்சிதான் பெண்களுக்குப் போதுமான இடம் தரவில்லையென்றால் எதிர்க்கட்சியான திமுக போட்டியிடவுள்ள 20 தொகுதிகளில் தென் சென்னை, தூத்துக்குடி ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும்தான் பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல் கட்டமாக வெளியிட்டுள்ள 184 பேர் கொண்ட பட்டியலில் 21 பேர் மட்டுமே பெண்கள். இவர்களில் பலர்  ஏற்கெனவே கடந்த தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பாஜக போட்டியிடும் ஐந்து தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே பெண் வேட்பாளரை அறிவித்திருக்கிறது. 

தனித்துப் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வெளியிடப்பட்ட முதல்கட்ட அறிவிப்பில் மத்திய சென்னையில் ஒரு பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.

வெறும் பேச்சு மட்டும்தானா?

சென்னையில் நடைபெற்ற கல்லூரி மாணவிகளுடனான கலந்துரையாடலில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். மாணவிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தங்களுடைய கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டைக் கட்டாயம் அமல்படுத்தும் என்றார்.  ராகுலின் பேச்சு மாணவிகள்

மத்தியில் பலத்த கரவொலியைப் பெற்றது. ஆனால் அக்கட்சி வெளியிட்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 35 பேரில்  நால்வர் மட்டுமே பெண்கள். தமிழகத்தில் போட்டியிடும் எட்டுப் பேரில் ஒருவர் மட்டுமே பெண்.

பெண்களுக்கான 33 சதவீத இட ஓதுக்கீட்டை வலியுறுத்தி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடத்தும் இடதுசாரி கட்சிகள்கூட வேட்பாளர் தேர்வில் பெண்களுக்குப் போதுமான முக்கியத்துவம் தரவில்லை.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாடு முழுவதும் 65 இடங்களில் போட்டியிடுகிறது. அவற்றில் பத்து இடங்களில் மட்டுமே பெண் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் போட்டியிடும் 15 தொகுதிகளில் இரண்டை மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கியிருக்கிறது.

அரசியல்படுத்துவது அவசியம்

அரசியலில் பெண்களின் பங்களிப்பு வேண்டும் என ஆண்டாண்டு காலமாக வலியுறுத்தப்பட்டுவருகிறது. ஆனால், பெரும்பாலான கட்சிகளில் பெண்களுக்கு மகளிர் அணியில் மட்டும்தான் பொறுப்புகள் வழங்கப்படுகின்றனவே தவிர கட்சியின் பொதுக் குழு, செயற்குழு போன்றவற்றில் பெண்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை.

மேலும்,  மகளிர் அணியில் உள்ள பெண்களைக்கூட, கட்சியின் முக்கியப் பிரமுகர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் இனிப்புகளை வழங்கவும் தேர்தல் வெற்றியின்போது நடனமாடவும் மட்டுமே சில கட்சியினர் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்ற விமர்சனத்தையும் புறக்கணிக்க முடியாது.

“கல்வி, வேலை போன்றவற்றில் வாய்ப்புகள் கிடைக்காத காலத்திலேயே பல பெண்கள் அரசியல் களத்தில் திறம்படச் செயலாற்றியுள்ளனர் என்பது வரலாறு. ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் இருக்கும் நம்முடைய நாட்டில்தான் பெண்களை இரண்டாம்பட்சமாகப் பார்க்கும் போக்கு நிலவுகிறது. இந்த ஆணாதிக்க மனநிலையால்தான் அரசியல் கட்சிகள் பெண்களைத் தேர்தல் காலங்களில் வேட்பாளர்களாக நிறுத்தத் தயங்குகின்றன” என்கிறார் சமூகச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜீவசுந்தரி.

சமூக மாற்றத்துக்கான திறவுகோல்

உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய பிறகுதான் பல பெண்கள் அரசியல் தளத்தில் முகம்காட்டத் தொடங்கினார்கள். பெண்கள் வெற்றிபெற்றாலும் அவர்களுடைய பெயரைச் சொல்லி அவர்கள் வீட்டு ஆண்கள் அந்தப் பதவியை அனுபவித்துவருகிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது. ஆனால், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திப் பல பெண்கள் சிறந்த அரசியல் ஆளுமைகளாக வரத்தொடங்கினார்கள் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். சமையலறைக்குள் மட்டுமே முடங்கிவிடாமல் பெண்களைக் காலத்துக்கு ஏற்றாற்போல் அரசியல்படுத்த வேண்டியது கட்சிகளின் கடமை.

“பெண்களை வெறும் காட்சிப் பொருளாகப் பிரதிநிதித்துவப்படுத்தாமல் மகளிர் அணி, மாதர் அமைப்புகளில் உள்ள பெண்கள் அரசியல் பழகக் கற்றுதர வேண்டியது அவசியம். ஒரு வேளை மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால் அதன் பிறகு எல்லாத் தேர்தல்களிலும் அரசியல் கட்சிகள் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். அதற்குப் பெண்களும், கட்சிகளும் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்” என்கிறார் ஜீவசுந்தரி.

அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருந்தாலும் உள்ளாட்சியில் தொடங்கி தேசிய அளவிலான அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளைப் பெண்கள் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பெண்களுக்குக் கல்வி அளிப்பது ஒரு சமூகத்தையே முன்னேற்றும் என்றால் அவர்களை அரசியல்படுத்துவது சமூக மாற்றத்துக்கான திறவுகோலாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x