மாற்றுக் கோணம்: கழிவறையாக மாறும் பேருந்து

மாற்றுக் கோணம்: கழிவறையாக மாறும் பேருந்து
Updated on
1 min read

பொதுக் கழிப்பிடங்கள் என்றாலே பெரும்பாலும் சுகாதாரமற்றுதான் இருக்கின்றன. இதனாலேயே வெளியே செல்லும் பெண்கள் எவ்வளவு நேரமானாலும் பொதுக்கழிவறைகளைப் பயன்படுத்தத் தயங்குகின்றனர். நாள் முழுவதும் இயற்கை உபாதைகளை அடக்கிக் கொள்கின்றனர்.

சுகாதாரமற்ற கழிவறைக்குள் சென்றுவருவதால் ஏற்படுகிற நோய்த்தொற்றைவிடச் சிறுநீரை அடக்கி வைப்பதால் வருகிற நோயே மேல் எனப் பல பெண்கள் நினைக்கிறார்கள். பெண்களின் இந்தப் பிரச்சினைக்கு ஒரு மாற்று ஏற்பாட்டை முன்வைத்துள்ளனர் புனேயைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர்களான உல்கா சதல்கர் ராஜீவ் கெர் இருவரும்.

‘தூய்மை இந்தியா’ என முழங்கும் நம் தேசத்தில்தான் சுகாதாரமற்ற, பற்றாக் குறையான பொதுக் கழிப்பிடங்களால் பத்து லட்சம் பேர் திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழிக்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் மலேரியா, டைபாய்டு, வயிற்றுப் போக்கு போன்ற தொற்று நோய்கள் அதிகமாகப் பரவுகின்றன. அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் ஒன்றான புனேயில் பழைய பேருந்துகளைப் பெண்களுக்கான புதிய கழிவறை களாக மாற்றியுள்ளனர் இந்தத் தொழில்முனைவோர்.

கழிவறையில் இணைய வசதி

இவர்கள் இருவரும் இணைந்து 2016-ம் ஆண்டிலிருந்து பழைய பேருந்துகளை Ti Toilet  என்ற பெயரில் பெண்களுக்கான கழிவறையாக  மறுகட்டமைப்பு செய்து வருகின்றனர். ‘Ti ’ என்றால் மராத்தி மொழியில் ‘அவள்’ என்று பொருள். இந்த நவீனப் பேருந்து கழிவறை பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது புனே நகரில் மட்டும் 12 கழிவறைகள் உள்ளன.

maatrujpgஉல்கா சதல்கர்

இந்தியப் பாணி கழிவறை, மேற்கத்தியப் பாணி கழிவறை, கை கழுவும் இடம், சானிட்டரி நாப்கின், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு காணொலி, இணைய வசதி, தேநீர் கடை என அனைத்தும்  அந்தப் பேருந்துக்குள் உண்டு. மேலும், பேருந்துக்கான மின்சாரம் சூரிய மின்னாற்றல் மூலம் பெறப்படுகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்தப் பேருந்தைப் பயன்படுத்துகின்றனர். இதற்காக ஐந்து ரூபாய் மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

“மக்கள் நெருக்கடி அதிகமுள்ள புனே நகரில் கான்கிரீட் கழிவறைகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. மாதவிடாய் நாட்களில் சுகாதாரமற்ற கழிவறை களைப் பயன் படுத்தவே பல பெண்கள் அஞ்சுகிறார்கள். பல பெண்கள் சிறுநீரை அடக்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். திடீர் உதிரப்போக்கு ஏற்பட்டால் அந்த நேரத்தில் அவர்களின் நிலைமை மிகவும் மோசம்.

இதற்காகத்தான் பழைய பேருந்துகளை நவீனக் கழிவறைக் கூடங்களாக மாற்றினோம். இந்தப் பேருந்துகளைத் தேவைப்படும் இடத்துக்கு நகர்த்த முடியும். ஆனால், ஒரே இடத்தில் இவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதிக்கான அடையாளமாக மாறியுள்ளது” என்கிறார்  உல்கா சதல்கர்.

கார்பரேட் நிறுவனங்களின் (சிஎஸ்ஆர்) உதவியுடன் இதைச் செய்து வருகிறார்கள்.  “நாடு முழுவதும் பொதுக் கழிவறைகள் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. அவை சுகாதாரமாக இருப்பதற்கு அரசும் பொதுமக்களும் பங்களிக்க வேண்டும்” என வலியுறுத்துகிறார்கள் உல்கா சதல்கர், ராஜீவ் கெர் இருவரும். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in