

அழகுக் கலையைத் தன் வருமானத்தை உயர்த்தும் தொழிலாக மாற்றிக்கொண்ட சிந்தனைக்குச் சொந்தக்காரர் மோனா ராஜு. சேலம் எம்.டி.எஸ். நகரில் வசிக்கும் இவரின் அடையாளம் விதவிதமான டிசைன்களில் மருதாணி வரைவது. கண்ணிமைக்கும் நேரத்தில் கைகளில் கொடிகளையும், பூக்களையும் படரவிடுவதில் பளிச்சிடுகிறது மோனாவின் திறமை.
சங்க காலத்தில் இருந்தே உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் வல்லமை படைத்த அழகு சாதனப் பொருட்களைப் பெண்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். கார்மேக கூந்தலுக்கு அரப்பும் சிகைக்காயும் பயன்படுத்தியவர்கள், கண்களுக்கு மை தீட்டி மெருகேற்றினார்கள். முகத்துக்குப் பயத்தம் பருப்பும், பாலாடையும் பூசி அழகும் ஆரோக்கியமும் இணைந்த வாழ்வு வாழ்ந்திருக்கிறார்கள். கைகளையும் கால்களையும் அழகுபடுத்துவதில் மருதாணி முக்கிய இடம் வகிக்கிறது.
மருதாணி மகத்துவம்
வட மாநிலங்களில் திருமண வைபோகங்களில் மெஹந்திக்கு என தனி நிகழ்ச்சியே நடக்கும். தமிழகத்தில் வீட்டு விசேஷங்களிலும் பண்டிகை காலங்களிலும் பெண்கள் மருதாணி வைத்து, கைகளை அழகு படுத்திக்கொள்வது வழக்கம்.
மருதாணிக்கு மருத்துவ குணங்களும் உண்டு. நகங்களின் இடுக்குகளில் உள்ள கிருமிகளை அழிக்கக்கூடியது. பாத வெடிப்புகளுக்கும் தீர்வு தரக்கூடியது. மருதாணியின் மகத்துவத்தை நம் முன்னோர்கள் நன்கு அறிந்து வைத்திருப் பதால்தான் மூன்று வயது சிறுமி முதல் 60 வயது மூதாட்டியர்வரை கைகளில் மருதாணி வைத்துக்கொள்கின்றனர். காரணம் மருதாணி, உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. சுபநிகழ்வுகளின் போது பரபரப்புடனும் பதற்றத்துடனும் வேலை பார்ப்பதால், உடல் சூட்டைத் தணிக்கக்கூடிய மருதாணியைக் கைகளிலும் கால்களிலும் வைத்துக் கொள்ளும் பழக்கத்தை முன்னோர்கள் ஏற்படுத்தி யிருக்கிறார்கள்.
“மருதாணியில் இவ்வளவு மகத்துவம் இருப்பதால்தான் டாட்டூ போன்ற வெளிநாட்டு கலாச்சாரம் இறக்கு மதியான பிறகும் இது தாக்குப்பிடித்து நிற்கிறது” என்கிறார் மோனா. கைகளில் வைக்கக் கூடிய மருதாணி அலங்காரத்தில் கல்ச்சுரல் டெகரேஷன், அரபிக் டெகரேஷன் என இரு வகை உண்டு. கைகள் முழுவதும் கலை நயமிக்க ஓவியமாகத் தீட்டப்படும் கல்ச்சுரல் டெகரேஷனை பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். கைகளில் இடைவெளி விட்டு வைக்கக்கூடிய அரபிக் டெகரேஷன், இளம் பெண்களின் விருப்பம்.
வருமானம் தரும் கலை
ரசாயனக் கலவையில் உடனடி சிவப்பைத் தரக்கூடிய பொருட்கள் கலந்திருக்கும். அதனால் அந்த வகை மெஹந்தியைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நலம்.
“சிவப்பு, கருப்பு நிற வண்ணங்களில் மருதாணி உள்ளது. அவரவர் உடல் நிறத்துக்கு ஏற்ற மாதிரி இந்த மருதாணியை வைத்துக்கொள்ளலாம். டாட்டூ விரும்பும் பெண்கள் கழுத்து, முதுகு, கால், கைகளில் மருதாணியை வைத்து, அதன் நடுவே சின்னஞ்சிறு வண்ணக் கற்களை வைத்துக் கொள்வது ஃபேஷனாக உள்ளது” என்று சொல்லும் மோனாவுக்கு அவருடைய நேர்த்தியே வாடிக்கையாளர்களைத் தேடித் தருகிறது.
“திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் பண்டிகை என விசேஷ காலங்களில் பெண்கள் மருதாணி வைத்துக் கொள்கின்றனர். வீட்டை விட்டு வெளியே வேலைக்குச் செல்ல முடியாத பெண்கள் மருதாணி வைப்பதைத் தொழிலாகச் செய்ய லாம். இதன் மூலம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். முகூர்த்த காலங்களில் மருதாணி வைத்துக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இது ஒரு நிரந்தர தொழிலாகவும் இருக்கிறது. வயது வரம்பு இல்லாத தொழிலும் இதுதான். அதனால் பெண்கள் முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ மருதாணி வைக்கும் பணியைத் தாராளமாகத் தொடங்கலாம்” என்கிறார் மோனா ராஜு.
மருதாணி வைப்பதைத் தொழிலாக மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அதில் புதுமைகளைப் படைப்பதும் மோனாவின் திறமைக்கு இன்னுமொரு சான்று. அதை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த 2007-ம் ஆண்டு லிம்கா சாதனை புத்தகத்திலும், 2009ம் ஆண்டு 121 கைகளுக்குத் தொடர்ந்து 24 மணி நேரம் மருதாணி வைத்து கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்திருக்கிறார் மோனா.