Last Updated : 30 Mar, 2019 05:47 PM

 

Published : 30 Mar 2019 05:47 PM
Last Updated : 30 Mar 2019 05:47 PM

வண்ணங்கள் ஏழு 48: பொதுச் சமூகத்துக்கும் உதவும் தாய்மடி!

உலகில் எல்லா உயிரினங்களும் ஒன்றுதான். எல்லா உயிரினங்களையும்விட மகத்தானவனாக மனிதன் தன்னை நினைத்துக்கொள்வதிலும் அதன் பொருட்டு இயற்கையின் உயிர்ச் சங்கிலியை அறுக்கும் வேலைகளைச் செய்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உலகில் வாழ்வதற்கு மனிதனுக்கு இருக்கும் உரிமை மரங்கள் முதலான எல்லா உயிரினங்களுக்கும் உண்டு. இதை வெறும் பேச்சாக மட்டுமில்லாமல், தன்னுடைய ‘தாய்மடி’ அறக்கட்டளையின் மூலம் செயல்படுத்திவருகிறார் சேலத்தைச் சார்ந்த திருநங்கை தேவி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் ஜெயலலிதாவுக்குப் போட்டியாக ‘நாம் தமிழர்’ கட்சி சார்பில் போட்டியிட்டவர் இவர்.

கைவிட்ட திருநங்கைகள்

“மகிளா காங்கிரஸின் பொதுச் செயலாளராகத் திருநங்கை அப்சரா ரெட்டி நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றால் இதற்கெல்லாம் முன்னோடியாக ஒரு மாநிலக் கட்சி தன்னுடைய வேட்பாளராக என்னை நிறுத்தியதைச் சொல்லலாம்.

ஜெயலலிதாவுக்கு எதிராக நிற்கிறேன் என்றவுடன் எனக்கு ஆதரவாகத் திருநங்கைகள் அமைப்போ தனிப்பட்டவர்களோ யாரும் பிரச்சாரம் செய்யவில்லை. அந்தத் தொகுதியில் நூற்றுக்கும் அதிகமான திருநங்கைகள் இருக்கின்றனர். ஆனால், அந்தத் தேர்தலில் நான் 2,500 வாக்குகள் பெற்றேன்.

திருநங்கைகள் சிலர் எனக்கு வாக்களித்திருக்கலாம். அதையும் தாண்டி பொது மக்கள் பலர் எனக்கு வாக்களித்தது, நான் திருநங்கைச் சமூகத்துக்கு மட்டுமல்ல; பொதுச் சமூகத்துக்கும் உரியவள்தான் என்பதை எனக்கு உணர்த்தியது” என்கிறார் தேவி.

vannam-2jpgதேவி

மூன்றாம் பாலினம் என்னும் ஒரே குடையின்கீழ் எல்லோரும் சேர்வதன் மூலம்தான் திருநங்கைகளுக்கான உரிமைகளைப் பெற வேண்டும் என்பதில் தேவி தீர்மானமாக இருக்கிறார்.

“தேவியாக இருந்த நான் இப்போது கோப்பெருந்தேவியாக மாறியிருக்கிறேன். பிளஸ் ஒன் வரை படித்தேன். ஆதரவற்ற வர்களுக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணத்தோடே வளர்ந்தேன். ‘தாய்’ போன்ற தன்னார்வ அமைப்பில் பணியாற்றிக்கொண்டே பழங்குடி மக்களின் உரிமைகளை அரசிடம் இருந்து பெற்றுத்தரும் பணிகளையும் செய்துவந்தேன்.

அதன்பின் எனக்குச் சொந்தமான இடத்தில் காப்பகம் கட்டி, ‘தாய்மடி’ அறக்கட்டளையைத் தொடங்கி, ஆதரவற்ற முதியோர் 42 பேரைப் பராமரித்துவருகிறேன்” என்னும் தேவி, திருநங்கைச் சமூகத்தினருக்கு மட்டுமே உதவும் திருநங்கையாக இல்லாமல் பொதுச் சமூகத்தில் இருப்பவர்களுக்கும் உதவுகிறார்.

பசுமைப் புரட்சி

இந்தச் சமூகப் புரட்சியோடு பசுமைப் புரட்சியையும் செய்துவருகிறார் தேவி. மூன்றரை ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்கிறார். தங்களுக்குத் தேவையான காய்கறிகளையும் தானியங்களை பயிரிடுகின்றனர். நாட்டுப் மாடுகள் வளர்ப்பின் மூலம் வேண்டிய அளவு பாலையும் பெறுகின்றனர்.

மகளிர் அமைப்பில் இருப்பவர்கள் வழங்கும் ‘ஒரு பிடி அரிசி’யைக் கொண்டு ‘அமுதசுரபி’ திட்டத்தைச் செயல்படுத்துகின்றனர். இதில் சேரும் அரிசியைக் கொண்டு ஆதரவற்ற வர்களுக்கான உணவைச் சமைக்கின்றனர். ஏழைகளுக்கும் வயதான வர்களுக்கும் மூத்த திருநங்கைகளுக்கும் அந்த உணவைக் கொடுத்து உதவுகின்றனர்.

நீர் மேலாண்மை

நீர் மேலாண்மை மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கொண்டு நீர் ஆதாரங்களான கண்மாய், ஓடை போன்றவற்றைச் சீர்படுத்தும் வேலைகளையும் தேவி செய்துவருகிறார்.

‘தாய்மடி’ அறக்கட்டளைக்குத் தமிழகம் முழுவதும் உறுப்பினர்களைச் சேர்த்து வருகின்றனர். இந்த அறக்கட்டளையின் மூலம் தமிழகம் முழுவதுமே ஆதரவற்றவர்களைப் பராமரிப்பதற்கான ஒரு திட்டத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டிருக்கின்றனர்.

மரமல்ல வரம்

வறட்சிக் காலத்திலும் மக்களுக்குப் பல வகையிலும் உதவுவது பனை. அதனால்தான் அதைக் கொண்டு அளிக்கப்படும் பயிற்சி திட்டத்துக்கு ‘பனை வரம்’ எனப் பெயர் வைத்ததாகச் சொல்கிறார் தேவி. “இந்தத் திட்டத்துக்கு செல்வராமலிங்கம் என்பவரைப் பொறுப்பாளராக நியமித்திருக்கிறேன். அதன் மூலம் பல்வேறு பனைப்பொருட்களைச் செய்வதற்கான பயிற்சிகளை அளித்து வருகிறோம்.

மாறுமா பொதுப்புத்தி?

திருநங்கைகளிடையே கடை கேட்பது (பிச்சை எடுப்பது), பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்றவை மாறிவருகின்றன. திருநங்கை என்றாலே பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்ற முன் தீர்மானத்தை சமூகம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

என்னைத் தூற்றிய சமூகமே என்னை ‘தேவி அம்மா’ என்று அழைக்கிறது. காரணம், என்னைப் புறக்கணித்த சமூகத்தை நான் புறக்கணிக்கவில்லை. என்னால் முடிந்ததை பொதுச் சமூகத்துக்குத் தொடர்ந்து செய்துவருகிறேன். உழைக்கவும் படிக்கவும் தயாராக இருக்கும் திருநங்கைகளுக்கு உதவ இந்தத் ‘தாய்மடி’ எப்போதும் தயாராக இருக்கிறது” என்கிறார் கோப்பெருந்தேவி தாய்மையுடன்! (தொடர்புக்கு: 63809 02985)

vannam-3jpgright

சிங்கப்பூரிலிருந்து ஒரு காந்தக் குரல்!

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மெல்லிசைக் குழுக்களில் பாடுவதற்கே மிகவும் போராட வேண்டிய சூழல் இருந்தது. வாய்ப்புத் தேடுபவர் எந்தத் துறையைச் சேர்ந்த பிரபலமாக இருந்தாலும் அவ்வளவு எளிதாக மேடையில் ஏறி மைக் பிடித்துவிட முடியாது. கூப்பிடும் போதெல்லாம் பயிற்சிக்கு வர வேண்டும்.

ஒவ்வொரு பாடலையும் அதற்கான சரியான ஸ்ருதியிலும் தாளத்தோடும் பாடவேண்டும். ஆண்டு முழுவதும் ஒரேயொரு பாடலைத்தான் அறிமுகமாகும் பாடகருக்கு வழங்குவார்கள். ஆனால், இன்றைக்குச் சிரமப்படாமல் அப்படிப்பட்ட வாய்ப்புகளைப் பெறுவதற்கு காணொலி சமூக வலைத்தளங்கள் காரணமாக இருக்கின்றன.

‘கண்டாங்கி.. கண்டாங்கி.. கட்டி வந்த பொண்ணு’ என்னும் பாடலை ஷாக்ஷி ஹரேந்திரன் தன் நண்பர் ஸ்டான்லியுடன் பாடி அதை யூடியூபில் பதிவிட்டார். ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றிருக்கும் அந்தப் பாடலின் வெற்றி, அவர்களை சிங்கப்பூரிலிருந்து ‘கலர்ஸ் தமிழ்’ தொலைக் காட்சி நடத்தும் ‘சிங்கிங் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கெடுக்க வைத்திருக்கிறது.

இதில் என்ன விசேஷம் என்றால், இருவருமே ஆண் குரலிலும் பெண் குரலிலும் மாற்றி மாற்றிப் பாடியிருப்பதுதான். இரு குரலில் பாடும் திறமையோடு வெளிப்பட்டிருக்கும் ஷாக்ஷி, திருநங்கை.

“எனக்கு மூன்று சகோதரிகள். என்னுடைய முதல் அக்கா பாடுவதில் நிறைய என்னை ஊக்கப் படுத்தினார். இரண்டாவது அக்கா நன்றாகப் பாடுவார். அவர் மூலமாகத்தான் பாடுவதில் இருக்கும் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு, பாட ஆரம்பித்தேன். அவர்தான் என்னைப் பொழுதுபோக்காகப் பாடுவதிலிருந்து, அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார். சிங்கப்பூரில் ‘வசந்தம்’ தொலைக்காட்சி நடத்திய போட்டியில் முதலில் பங்கெடுத்தேன். பயம் விலக வேண்டும் என்றுதான் அதில் பங்கேற்றேன். அதில் எனக்குக் கிடைத்த வரவேற்புதான் தொடர்ந்து பாடுவதற்குத் தூண்டியது.

‘ராம் லீலா’ படத்தின் ஒரு பாடலைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடி யூடியூபில் வெளியிட்டிருந்தேன். அதைப் பார்த்து நண்பரானார் ஸ்டான்லி. அவருடைய பெயரிலிருக்கும் மூன்று ஆங்கில எழுத்து களையும் ஹரேந்திரன் பெயரில் இருந்து இரண்டு எழுத்துகளையும் சேர்த்து, ‘ஸ்டாரி டியோ’ என்னும் பெயரில் நாங்கள் பாடிய ‘கண்டாங்கி’ கவர் வெர்ஷனுக்குக் குவிந்த ஆதரவு எங்களை சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வரவைத்திருக்கிறது.

ஒரு தமிழ்ப்படம் உட்பட மூன்று படங்களில் நடித்து வருகிறேன். இது தவிர மலேசியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்காகப் பாடிய ‘முதல் கனவு’ என்ற இசை ஆல்பம், ஆப்பிள் ஐ டியூனில் பிரபலமாகி இருக்கிறது” என்று சொல்லும் ஷாக்ஷியின் குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்க, அவரோ ஷ்ரேயா கோஷலின் தீவிர ரசிகையாம்.

(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x