

பொழுதைப்போக்க ஓவியம் வரையத் தொடங்கிய தர்ஷனா பஜாஜ், இன்று ஓவியத்தையே தன் அடையாளமாக மாற்றியிருக்கிறார். காணக் கிடைக்காத இயற்கைக் காட்சிகளை நமக்குக் காட்சிப்படுத்துகிறது அவரது தூரிகை.
கவின் கலையில் முதுகலைப் பட்டதாரியான தர்ஷனா பஜாஜ், குடும்பத்தின் முதல் தலைமுறை ஓவியர். “பொழுதுபோக்காகப் படம் வரைந்தால் அதை அனைவரும் ஆதரித்து ரசிப்பார்கள். ஆனால், அதை ஒரு தொழிலாகத் தேர்ந்தெடுக்கும்போது வாழ்க்கையில் எப்படி ஜெயிக்கப் போகிறாய் என்று கேட்பார்கள். ஆனால், என்னுடைய குடும்பத்தினர் அப்படிக் கேட்கவில்லை. என் விருப்பத்தை ஆதரித்தார்கள். அந்த ஆதரவுதான் என்னை இதுவரை ஏழு ஓவியக் கண்காட்சிகளைத் தனியாக நடத்த உத்வேகம் அளித்தது” என்கிறார் உற்சாகமாக.
ஓவியர்கள் இளங்கோ, தட்சணாமூர்த்தி ஆகியோரிடம் ஓவியப் பயிற்சி பெற்றுள்ளார் தர்ஷனா. 15 ஆண்டுகளாக ஓவியத் துறையில் இயங்கிவரும் இவர் ஆயில், வாட்டர் கலர், செமி ஆயில், பேஸ்டல் ஆகியவற்றை மையப்படுத்தி ஓவியங்களை வரைந்துவருகிறார்.
“பொதுவாக ஓவியர்கள் என்றாலே பார்த்ததை அப்படியே வரையக் கூடியவர்கள் என்பார்கள். பார்க்கும் காட்சியை அப்படியே படம்பிடிப்பதைவிட அதில் தன்னுடைய கற்பனையை ஒன்றிணைப்பதில்தான் ஒரு ஓவியரின் திறமை அடங்கியிருக்கிறது.
எனக்கு ஒரு சில காட்சிகள் பிடித்தாலும் அவற்றை வரையும்போது எந்தவித முன்யோசனையில்லாமல் தோன்றும் காட்சிகளைச் சேர்ப்பதுதான் என் பாணி” என்கிறார் தர்ஷனா.