தேர்வு வழிகாட்டி: விடுமுறைக்கும் விதிமுறை உண்டு

தேர்வு வழிகாட்டி: விடுமுறைக்கும் விதிமுறை உண்டு
Updated on
1 min read

தேர்வு முடிந்துவிட்டாலும் தேர்வில் வெற்றிபெறுவோமா, நல்ல மதிப்பெண் எடுப்போமா எனப் பல குழப்பங்களுடன் மாணவர்கள் வீடு திரும்புகிறார்கள். பெற்றோரும் இவர்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை. தாங்கள் விரும்பிய பாடப் பிரிவில் குழந்தைக்கு இடம் கிடைக்குமா, கல்லூரியில் எளிதான இடம் கிடைக்குமா எனப் பலவற்றையும் நினைத்துக் குழம்புவார்கள்.

இதனாலேயே பல மாணவர்கள் விடுமுறை நாட்களைகூட நெருக்கடியாகக் கடக்க வேண்டியுள்ளது. விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழித்தால்தான் தேர்வு முடிவு எப்படியிருந்தாலும் அதைத்  தைரியமாக எதிர்கொள்ள முடியும் என்கிறார் மனநல ஆலோசகர் ஜான்சிராணி.

தேர்வு நாட்களில் குழந்தைகளுடன் செலவிட முடியாத நேரத்தை  விடுமுறை நாட்களில் எப்படிச் செலவிடலாம் எனப் பெற்றோர் திட்டமிடலாம். படிப்பைத் தவிர்த்து மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான திறனை வளர்த்துக்கொள்ளப் பெற்றோர் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

கைவினைப் பொருட்கள் செய்வது, நீச்சல் பயிற்சிக்குச் செல்வது, கவிதை எழுதுவது எனக் குழந்தைகளை உற்சாகத்துடன் செயலாற்ற வைக்கலாம். நாவல், சிறுகதைகளைப் படிக்கும் ஆர்வமுள்ள மாணவர்களாக இருந்தால் அவர்களுக்குத் தனியாக வலைப்பூ உருவாக்கி அதில் எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தலாம்.

வேலைக்கு அனுப்பலாம்

விடுமுறை நாட்களை மூன்றாகப் பிரித்துக்கொண்டு செயல்படலாம் எனக் கூறும் ஜான்சிராணி அதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறார். “விடுமுறை நாட்களிலும் தேர்வு முடிவைப் பற்றி யோசிக்காமல் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இரண்டாவது, முன்புபோல் தற்போது பெரும்பாலான குழந்தைகள் உறவினர் வீடுகளுக்குச் செல்வதில்லை. விடுமுறை நாட்களில்கூட வீடு மட்டும்தான் வாழ்க்கையாக உள்ளது.

vidumurai-2jpgஜான்சிராணி

அதனால், குடும்பத்தினருடன் சில நாட்கள் சுற்றுலா செல்லத் திட்டமிடலாம். அல்லது வீட்டு வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். சிறு ஊக்குவிப்பே குழந்தைகளை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவதற்கான மந்திரம். அதேபோல் விடுமுறை காலத்தில் குழந்தைகளுக்குச் சமையலைப் பழக்கலாம். எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும். வீட்டில் மாடித் தோட்டம் அமைப்பதில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம்.

மேலும், சிக்கனத்தின் அவசியத்தைப் புரிந்துகொள்ள நன்கு அறிமுகமான அலுவலகத்தில் பகுதிநேர வேலைக்கும் அனுப்பலாம். இதனால், நூறு ரூபாயைச் சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது குழந்தைகளுக்குப் புரியும். மூன்றாவது, சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழக் கற்றுத்தர வேண்டும். முதியோர் இல்லங்களுக்கு அழைத்துச் செல்லலாம். பார்வையற்றோருக்குப் புத்தகங்களை வாசித்துக் காட்டச் சொல்லலாம். புத்தக விவாத நிகழ்ச்சிகளுக்கு அனுப்பிவைக்கலாம்” என்கிறார் அவர்.

தேர்வு முடிவு குறித்துக் கவலைப்படாமல் இருந்தால்தான் விடுமுறையைச் சிறப்பாகச் செலவிட முடியும். தேர்வு முடிவு எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் விடுமுறை காலத்தில்தான் மாணவர்களால் வளர்த்துக்கொள்ள முடியும். இதைச் சாத்தியப்படுத்துவதற்குப் பெற்றோரின் அரவணைப்பும் அன்பும் அவசியம்.ஜான்சிராணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in