நம்பிக்கை முனை: முன்னேற உதவும் மூன்று வழிகள்

நம்பிக்கை முனை: முன்னேற உதவும் மூன்று வழிகள்
Updated on
2 min read

பெண்கள், ஆண்களுக்கு நிகராகப் பல்வேறு துறைகளில் வேலை செய்தாலும் அந்தத் துறையில் அடுத்தடுத்த நிலைகளுக்கு முன்னேறும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. உலகில் உள்ள நாடாளுமன்றங்களில் பெண்களின் எண்ணிக்கை 13 சதவீதம்தான். தொழில் துறையில் 16 சதவீதத்தினர் பெண்கள்.

அவ்வளவு ஏன் இந்தியாவில் கடைசியாகப் பெண் ஒருவர் பிரதமராகப் பதவியேற்று சுமார் 40 ஆண்டுகள் ஆகின்றன. அனைத்துத் துறைகளிலும் பெண்கள் நுழைந்துவிட்டாலும் ஏன் பெண்களால் வெற்றியாளர் களாக இருக்க முடிவதில்லை, இதை எப்படிச் சரிசெய்வது என்பது குறித்து ஃபேஸ்புக் முதன்மைச் செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பெர்க் தெரி வித்துள்ள மூன்று கருத்துகள் முக்கியமானவை.

பணியிடங்களில் பெண்கள் தங்களை முன்னிறுத்திக்கொள்வது அவசியம். பெண்கள் பெரும்பாலும் தங்கள் திறமையைத் தாங்களே அங்கீகரிப்பதில்லை. பணியிடங்களில் தங்களுக் காகப் பேசுவதில்லை. இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற ஓர் ஆய்வின் முடிவில் முதன் முறையாக வேலைக்குச் செல்லும் ஆண்களில் 57 சதவீதத்தினர் தங்கள் ஊதியம் இவ்வளவு இருக்க வேண்டும் என உயர் அதிகாரிகளிடம் விவாதிக்கிறார்கள் எனத் தெரியவந்திருக்கிறது.

ஆனால், பெண்களில் வெறும் ஏழு சதவீதத்தினர் மட்டுமே ஊதியம் குறித்து விவாதிக்கிறார்கள். பெண்கள் தங்கள் பணியிடத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் தீவிரமான முடிவுகளை எடுக்கத் தயங்குகிறார்கள். அதேபோல் திருமணமாகி குழந்தைகள் உள்ள ஆண்களில் மூன்றில் இருவர் அலுவலக உயர் பதவிகளில் உள்ளனர். பெண்களிலோ ஒரு பங்கு மட்டுமே அந்த நிலைக்கு உயர்கின்றனர்.

யாருடைய வெற்றி?

ஆண்கள் தங்கள் வெற்றியைத் தங்கள் தனிப்பட்ட வெற்றியாகவே கருதுகின்றனர். ஆனால், பெண்களோ தங்களின் வெற்றியை அனைவரின் உதவியால் பெற்றதாகக் குறிப்பிடுகின்றனர். முதலில் பெண்கள் தங்களின் வெற்றியைத் தாங்களே கொண்டாடக் கற்றுக் கொள்ள வேண்டும். பெண்கள் தங்களுடைய உழைப்புக்கு ஏற்ற பதவி உயர்வை அடைய முயல வேண்டும். நாற்காலியில் கம்பீரமாக அமர கற்றுக்கொள்ள வேண்டும். அலுவலகம் சார்ந்த எல்லாச் சூழ்நிலைகளிலும் தங்களின் கருத்தைத் தெரிவிக்கவும்  கையை உயர்த்தவும் பழகிக் கொள்ள வேண்டும்.

வீட்டு வேலை உயர்வானது

பெண்கள் வீட்டைவிட அலுவலகங்களில்தான் அதிக நேரம் உழைக்கிறார்கள். எனினும்,  கணக் கெடுப்பின்படி பெண்கள் ஆண்களைவிட இருமடங்கு அதிகமாக வீட்டு வேலை செய்கின்றனர். மூன்று மடங்கு அதிகமாகக் குழந்தை வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். காலம் தோறும் தொடரும் சிக்கலான பிரச்சினை இது. இந்தச் சமூகம் ஆண்களே அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற அழுத்தத்தைக்  கொடுக்கிறது.

அப்படியே சில ஆண்கள் வீட்டு வேலை செய்தாலும் அவர்களைப் பெண்களே விநோதமாகப் பார்க்கிறார்கள். இருவரும் வேலைசெய்யும் வீடுகளில் விவாகரத்து பெறுவோரின் சதவீதம் குறைந்துள்ளது. ஆணோ பெண்ணோ யார் வீட்டு வேலை செய்தாலும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

வேலையை விடக் கூடாது

பெண்கள் தங்களின் வாழ்க்கை குறித்த முடிவை மிகவும் முன்கூட்டியே எடுத்து விடுகிறார்கள். அதேபோல் அவர்கள் வேலையையும் அவ்வளவு சவாலானதாகத் தேர்ந்தெடுப்ப தில்லை. பெண்கள் தங்கள் வேலையைச் சவாலானதாகவும் மதிப்பளிக்கக் கூடியதாகவும் தேர்ந்தெடுக்க வேண்டும். திருமணத்துக்குப் பிந்தைய எதிர்காலம் குறித்துத் திட்டமிட பயப்பட வேண்டும். அதற்காக வேலையை விட்டுவிட வேண்டும் என்ற முடிவை முன்பே எடுக்கக் கூடாது.

அனைத்துத் துறையிலும் பெண்கள் நுழையும் இந்தக் காலத்தில்தான் 50 சதவீதப் பெண்கள் தங்கள் பதவி உயர்வு குறித்துச் சிந்திக்காமல் உள்ளனர்.  ஆனால், எதிர்காலத்தில் அது தானாக நடக்கும். உலகில் உள்ள சரி பாதி நிறுவனங்களும் சரி பாதி உலகமும் என்றைக்குப் பெண்களால் இயங்குகிறதோ அன்றுதான் இந்த உலகம் சிறப்பானதாக மாறும்.ஷெரில் சாண்ட்பெர்க்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in