

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த வேதாங்கி குல்கர்னி (20), இங்கிலாந்தின் போர்ன்மத் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு விளையாட்டு மேலாண்மை படித்துவருகிறார். படித்து முடிப்பதற்குள் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் வேதாங்கியை சைக்கிளில் 159 நாட்களில் 29,000 கிலோமீட்டர் தொலைவு பயணம் செல்ல வைத்தது. இதன் மூலம் குறைந்த நாட்களில் சைக்கிளில் உலகை வலம்வந்த ஆசியாவைச் சேர்ந்த இளம்பெண் என்ற சாதனையை வேதாங்கி படைத்துள்ளார்.
திட்டமிட்டால் ஜெயிக்கலாம்
ஒவ்வொரு காலையும் இவருக்குத் திட்டமிடலோடுதான் புலரும். அன்றைக்குப் பயணம் எந்தத் திசையை நோக்கி என்பதை முடிவெடுத்தபடிதான் படுக்கையைவிட்டு எழுந்ததாகச் சொல்கிறார் வேதாங்கி.
சைக்கிளில் உலகைச் சுற்றிவரும் பயணத்தை 2018 ஜூலையில் தொடங்கினார். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து புறப்பட்டவர் 80 சதவீதப் பயணத்தைத் தனியாகவே மேற்கொண்டுள்ளார். ஒரு நாளைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு சைக்கிள் மிதிப்பதை இலக்காக வைத்துச் செயல்பட்டார். நான்கு மணி நேரம் பயணம் அடுத்த நான்கு மணி நேரம் ஓய்வு எனச் சரியாகத் திட்டமிட்டதால் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நியூசிலாந்து, கனடா, ஐரோப்பா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு வேதாங்கியால் செல்ல முடிந்தது. திட்டமிட்டபடியே டிசம்பர் மாதத்தில் வெற்றிகரமாகப் பயணத்தை முடித்துள்ளார்.
சந்தித்த சவால்கள்
பொதுப் போக்குவரத்து வாகனங்களில் சில மணி நேரம் சென்றாலே நம்மில் பலர் அலுத்துக்கொள்வோம். ஆனால், உலகை சைக்கிளில் வலம்வருவது அதுவும் தனியாக என்பது மாபெரும் சவால். வழியில் என்னவிதமான சிக்கல்கள் காத்திருக்கும், எவற்றையெல்லாம் சமாளிக்க வேண்டும் என்று எதுவும் தெரியாமல்தான் வேதாங்கி பயணம் சென்றார்.
பல நேரம் பயணம் கடுமையாக இருந்துள்ளது. “சில நேரம் நடக்க வேண்டியிருந்தது. அப்போது நடக்காமல் சைக்கிளில் மெதுவாகச் சென்றேன். சில நேரம் பத்து மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை ஐந்து மணி நேரத்தில் கடந்துள்ளேன். இப்படித் திட்டமிட்டுப் பயணம் சென்றதால்தான் இலக்கை எளிதாக அடைய முடிந்தது” என்கிறார் வேதாங்கி.
பயணத்தில் பெரும் சவாலாக இருந்தது குளிர்தான். 20 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலான பல்வேறு வெப்பநிலைகளிலும் தளராது சைக்கிள் ஓட்டியுள்ளார். இதற்குக் காரணம் உணவுதான் எனக் குறிப்பிடுகிறார் வேதாங்கி.
கலோரிகள் நிறைந்த உணவைச் சாப்பிட்டதால் அவரால் குளிரை தாங்கிக்கொள்ள முடிந்தது. பயணத்துக்கான செலவை வேதாங்கியின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். உடற்பயிற்சி, ஊட்டச்சத்து போன்றவற்றுக்குப் பயிற்சியாளர்களும் தன் பெற்றோரும் துணை நின்றதாகக் குறிப்பிடும் வேதாங்கி, மனவலிமை இருந்தால் எத்தகைய சாதனையும் சாத்தியமே என்கிறார்.