

பரத நாட்டியத்தின் பெருமையையும் உன்னதத்தையும் உலகம் முழுவதும் பரப்பிய நாட்டிய மேதை டி.பாலசரஸ்வதியின் நூற்றாண்டை 2018-ல் தொடங்கி மிகவும் சீரிய முறையில் கொண்டாடி வந்தது டாக்டர் வி.ராகவன் நிகழ்கலைகள் மையம். 2019 பிப்ரவரி 9, 10 ஆகிய இரண்டு நாட்களில் நூற்றாண்டு நிறைவு விழாவை மையத்தின் நிர்வாக அறங்காவலரும் பாலசரஸ்வதியிடம் நாட்டியம் பயின்ற மூத்த மாணவிகளில் ஒருவருமான நந்தினி ரமணி நேர்த்தியாக ஒருங்கிணைத்தார்.
முதல் நாள் விழாவில் நாட்டியாச்சார்யா டி.கே.கல்யாணசுந்தரமும் பிரபலப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராமும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பாலசரஸ்வதியின் நாட்டிய மேதைமையைச் சிறப்பித்துப் பேசினர். அதோடு, நந்தினி ரமணி எழுதி சங்கீத நாடக அகாடமி பதிப்பித்த ‘T.BALASARASWATI – BALA’ என்னும் நூலையும் வெளியிட்டனர்.
நாட்டிய சமாராதனம்
பாலசரஸ்வதியின் முதன்மை மாணவிகளான ப்ரியம்வதா சங்கர், நந்தினி ரமணி, கே போர்ஷின் மற்றும் பல்வேறு நாட்டிய ஆசான்களிடம் பயின்ற லீலா சாம்சன், மீனாக்ஷி சித்தரஞ்சன், நர்த்தகி நடராஜ், ஷோபனா பாலசந்திரன், திவ்யா கஸ்தூரி உள்ளிட்ட 14 நடனக் கலைஞர்கள், கனம் கிருஷ்ணய்யர் போன்ற பிரபல சாகித்யகர்த்தாக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதங்களுக்கு நாட்டியம் ஆடியது, குறுங் கவிதையைக் காட்சிப்படுத்தியதுபோல் புதுமையாக இருந்தது.
கலைகள் சங்கமித்த கருத்தரங்கம்
இரண்டாம் நாள் நிகழ்வில் ‘கலா கோச’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்து. பரத நாட்டியம் சார்ந்த கலைப் பொக்கிஷங்களைப் பாதுகாத்து நெறிப்படுத்தி, தொகுத்து ஆவணப்படுத்தும் முயற்சிகளைக் குறித்து நான்கு பேச்சாளர்கள் அளித்த கருத்து வடிவமாக அது அமைந்தது.
‘ஸ்ருதி’ இதழின் நிர்வாக ஆசிரியர் எஸ்.ஜானகி, கர்னாடக இசைப் பாடகி சௌம்யா, கலை விமர்சகர் ஆசிஷ் கோகர், கலை விமர்சகர் மற்றும் திரைப்படங்கள் குறித்த ஆவணங்கள், இசைத் தட்டு சேகரிப்பாளரான ஏ.கே.ரங்கா ராவ் ஆகியோரின் கருத்துகளும் அவை சார்ந்த படத் தொகுப்புகளும் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளித்தன.
தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைகள் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் பிரமிளா குருமூர்த்தி, நந்தினி ரமணி எழுதிய ‘பாலா - சில நினைவலைகள்’ என்ற புத்தகத்தை வெளியிட, பாலசரஸ்வதியின் குடும்பத்தைச் சேர்ந்த நாட்டியக் கலைஞர் உமா வாசுதேவன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
முழுக்க முழுக்க பாலசரஸ்வதியின் கலையைப் பிரதானப்படுத்தி அதன் மேன்மையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பதையே முதன்மை நோக்கமாகக்கொண்டு தொடங்கப்பட்ட நூற்றாண்டு விழாவின் நிறைவு விழாவும் அந்த மேதையின் கலையைப் போற்றும் எண்ணற்றவர்களின் நெஞ்சிலும் நிலையான இடத்தைப் பிடித்திருக்கும்.