சூழல் காப்போம்: என்றும் வாடாத காகிதப்பூ

சூழல் காப்போம்: என்றும் வாடாத காகிதப்பூ
Updated on
2 min read

எங்கேயும் எப்போதும் என்  கையில் மஞ்சள்பையோ திருமணங்களில் கொடுக்கப்படும் தாம்பூலப்பையோ இருக்கும். அரசு என்னதான் ஞெகிழி ஒழிப்புக்குத் தடைவிதித்தாலும், நம் ஒவ்வொருவரின் தன்னெழுச்சியான பங்களிப்பு இல்லாமல் எந்த அறிவிப்பும் வெற்றியடையாது. நான் அரசு ஊழியர் என்பதால் எனக்கு இதில் கூடுதல் பொறுப்பு இருப்பதாகவே உணர்கிறேன்.

முன்பெல்லாம் நான் பணிக்குச் செல்லும்போது வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையும் மளிகைப் பொருட்களையும் வாங்கும்போது கடையில் பிளாஸ்டிக் பை இருக்கிறதா எனக் கடைக்கார்களிடம்  அனிச்சையாகக் கேட்பேன்.

ஆனால், அரசின் இந்த அறிவிப்புக்குப்பின் எனது அலுவலகக்  கைப்பையில் அலுவலகக் கோப்புகளுக்கு இடையில்  மஞ்சப்பையும் நிரந்தர இடம்பிடித்ததுவிட்டன. வீட்டிலும் பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. உலகில் எந்தவொரு மாற்றத்தைக் கொண்டுவர விரும்பினாலும் நாம்தான் அதன் தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டும்  என்ற சிந்தனையே இந்த மாற்றத்துக்குக் காரணம்.

- நா.ஜெசிமா ஹுசைன், திருப்புவனம்புதூர்.

பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானதுமே எனக்கு தேசபக்தி அதிகமாகிவிட்டது. உள்ளத்தின் ஆழத்தில் இருந்துதான் இதைச் சொல்கிறேன். இந்த நாட்டுக்கு என்னால் ஆன உதவியைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்ததுமே, கன்னாபின்னாவென்று நிறைய யோசனைகள் உதித்தன. அவற்றைச் செயல்படுத்தவும் தொடங்கினேன்.

 பிளாஸ்டிக் மேஜை விரிப்புகள், பிளாஸ்டிக் திரைச்சீலைகள் எல்லாம் துணியாக மாறின. வீட்டில் அலங்காரப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பூக்கள், காகிதப்பூக்களாக மாறின. இந்தக் காகிதப்பூக்கள் என் கைவண்ணத்தில் மலர்ந்தவை!

வரவேற்பரையின் மேற்கூரையில் நாற்புறமும் சரம்சரமாகத் தொங்கிக்கொண்டிருந்த பிளாஸ்டிக் மீன்கள் அப்புறப்படுத்தப்பட்டு அங்குக் காகித மலர்கள் ஆட ஆரம்பித்தன. சுவரிலும் காகிதப்பூக்கள்தாம் வாசம் செய்கின்றன. பிளாஸ்டிக் கம்மலுக்குப் பதிலாகப் பட்டு நூல் கம்மல்களைப் பயன்படுத்துகிறேன்.

எனக்குத் தைக்கத் தெரியாவிட்டாலும் ஆர்வக்கோளாறால் நான் தைத்த கவுன் ஒன்று ஒரு முறைகூடப் பயன்படுத்தப்படாமல் அப்படியே இருந்தது. அதன் மேல் பாகத்தை மட்டும் வெட்டியெடுத்துப் பையாக மாற்றி, என் கைப்பைக்குள்  வைத்துவிட்டேன். வெளியில் செல்லும்போது பொருட்கள் வாங்க அதுதான் கைகொடுக்கிறது. நானே செய்தது என்பதால் ஊக்கத் தொகையாக மகிழ்ச்சியும் கிடைக்கிறதே!

சமையலறையில் பிளாஸ்டிக் தட்டில் வீற்றிருந்த எண்ணெய்க் குடுவை, காகிதத் தட்டுக்குக் குடிபெயர்ந்திருக்கிறது. கண்ணாடிப் பாத்திரங்களையும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன். கறி வாங்க எவர்சில்வர் டப்பாக்கள் தயார்.

ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும்போதுதான் பிளாஸ்டிக் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக்கொண்டு வருவது புரிந்தது. அதிலிருந்து நாம் மெதுவாக மீண்டு வந்துகொண்டிருப்பது சற்றே ஆறுதல் தருகிறது.

- ஜே.லூர்து, மதுரை.

பிளாஸ்டிக் ஒழிப்பு அறிவிப்புக்கு முன்பிருந்தே எங்கள் வீட்டில் கூடுமானவரையில் பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம். எண்ணெய் வகைகளுக்கு எவர்சில்வர் தூக்கு, மசாலாப் பொருட்கள், குழம்புப் பொடிகள், ரசப் பொடி, காபித் தூள், தேயிலை போன்றவற்றுக்குக் கண்ணாடி பாட்டில்கள்தாம். அவற்றைச் சற்றுக் கவனமாகத்தான் கையாள வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை நினைவில்வைத்துச் செயல்பட்டால் கவனம் தானாக வந்துவிடும். கல் உப்புக்கு ஜாடி.

எங்கள் வீட்டில் இருக்கும் இரண்டு இருசக்கர வாகனங்களில் எப்போதும் சணல்பையும் துணிப்பையும் இரண்டு இருக்கும். காய்கறித் தோல், பழங்களின் தோல் போன்றவற்றைத் தனியே சேகரித்து உரமாக்கிவிடுவேன். எங்கள் ‘லேடீஸ் கிளப்’ உறுப்பினர்களும் பிளாஸ்டிக் ஒழிப்பில் உறுதியாக இருப்பதால் எங்கள் பகுதி விரைவில் பிளாஸ்டிக் இல்லாப் பகுதியாகிவிடும்!

- இந்திராணி பொன்னுசாமி, சென்னை.

பிளாஸ்டிக் ஒழிப்பில் என் பங்கு

பிளாஸ்டிக் ஒழிப்புக்கு உதவும் வகையில் நீங்கள் பின்பற்றும் நடைமுறைச் செயல்பாட்டைத் தகுந்த ஒளிப்படங்களுடன் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். மின்னஞ்சலும் அனுப்பலாம். உங்கள் ஆலோசனை இயற்கையைப் பாதுகாப்பதுடன்  மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in