Last Updated : 17 Feb, 2019 09:21 AM

 

Published : 17 Feb 2019 09:21 AM
Last Updated : 17 Feb 2019 09:21 AM

வானவில் பெண்கள்: முன்னெச்சரிக்கையாக ஒரு முதலுதவிப் பயிற்சி

சிறு காயத்துக்குக் களிம்பு தடவி, கட்டுப்போடுவது, தீப்பட்ட இடத்தைத் தண்ணீரால் கழுவுவது போன்றவற்றைத்தான் பலரும் முதலுதவி என நினைத்துக்கொண்டிருக்கிறோம். வீட்டில் உள்ள குழந்தை தெரியாமல் தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்துவிட்டாலோ நடந்து செல்லும் வழியில் யாராவது சுவசிக்க திணறுதல், வலிப்பு, மாரடைப்பு என ஏதோவொன்றால் பாதிக்கப்பட்டாலோ வாகன விபத்தில் சிக்கிக்கொண்டாலோ நாம் என்ன மாதிரியான முதலுதவி சிகிச்சையை மேற்கொள்வோம்? இந்தக் கேள்விக்கான பதிலைப் பயிற்சியாகவே தருகிறார் சென்னையைச் சேர்ந்த கலா பாலசுந்தரம்.

அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலாலும் மக்களின் அவசரத்தாலும் கவனமின்மையாலும் விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. அதுபோன்ற நேரத்தில் பலர் கண்டும் காணாமல் சென்றுவிடுவதுண்டு. மனிதநேயம் கொண்ட சிலரோ அவசர ஊர்திக்குத் தகவல் தெரிவித்துவிட்டுக் காத்திருப்பார்கள். அடிபட்ட ஆரம்ப நிமிடங்கள் மிக முக்கியமானவை. அப்போது தரப்படும் முதலுதவி, பாதிக்கப்பட்ட நபரின் உயிரைக் காக்கும் கேடயமாகவும் அமையக்கூடும்.

பேருக்குப் பயிற்சி

ஐ.டி. துறையில் 25 ஆண்டு கால அனுபவம் கொண்டவர் இவர். முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி அளிப்பதற்காக 2006-ல் நண்பர்களுடன் இணைந்து ‘அலர்ட்’ என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதில் தற்போது 30 பேர் தன்னார்வலர்களாகப் பணியாற்றிவருகின்றனர். இவர்கள், பள்ளி - கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டுநர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர் எனப் பலருக்கும் முதலுதவி பயிற்சி அளித்துவருகிறார்கள்.

இதுவரை 75,000-க்கும் மேற்பட்டோருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார் கலா. ‘‘20 ஆண்டுகளுக்கு முன் நான் ஐ.டி. துறையில் வேலை செய்துகொண்டிருந்தபோது அலுவலகமே காட்டுக்குள்தான் இருக்கும். சாலைகள்  மோசமாக இருக்கும். அடிக்கடி விபத்து ஏற்படும். விபத்தில் சிக்கியவரைச் சுற்றிப் பலர் நின்றுகொண்டிருப்பார்கள். ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு என்னவிதமான முதலுதவியை செய்ய வேண்டும் எனத் தெரியாமல் ஆம்புலன்ஸ் வரும்வரை காத்திருப்பார்கள்.

ஏன் இப்படிக் காத்திருக்கணும் என யோசிப்பேன். நானும் அந்த இடத்தில் இருந்திருந்தால் இப்படித்தான் கையறு நிலையில் நின்றிருப்பேன் என உணர்ந்தேன். அப்போதுதான் அவசர உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என முடிவெடுத்தேன். நானும் என் நண்பர்களும் முதலுதவிப் பயிற்சி பெற்றோம்” என்கிறார் கலா பாலசுந்தரம்.

வீட்டுக்கு ஒருவர்

விபத்து நேர்ந்ததுமே முதலுதவி சிகிச்சை தெரிந்தவர்கள் யாராவது அருகில் இருந்தால் பாதிக்கப்பட்டவருக்கு உரிய முறையில் உதவ முடியும். இதனால்தான் ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் கட்டாயம் முதலுதவி பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும் என இந்த அமைப்பினர் வலியுறுத்துகின்றனர்.

“அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குக்கூட முதலுதவிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், நம்  நாட்டிலோ ஏதாவது ஆபத்து என்றால்கூட ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு போதிய அளவில் மாணவர்களிடம் ஏற்படுத்தப்படவில்லை” என்கிறார் கலா.

இலவசப் பயிற்சி

சென்னை நீலாங்கரையில் உள்ள இவர்களுடைய பயிற்சி மையத்தில் தமிழகத்தின் முன்னணி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களும் முதலுதவிப் பயிற்றுநர்களும் பயிற்சி அளிக்கின்றனர். “சாதாரண மக்களும் முதலுதவி பயிற்சி குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நாங்கள் உருவாக்கியுள்ள பயிற்சிக் கையேடு இந்தியன் மெடிக்கல் அசோசியேஷனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவப் பயிற்சி வீரர்களுக்கும் நாங்கள் முதலுதவிப் பயிற்சி அளித்துள்ளோம்.

முதலுதவிப் பயிற்சிக்கூடத்தை அமைத்திருப்பதால் செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு மணி நேரம் இலவச முதலுதவிப் பயிற்சி அளித்துவருகிறோம். சிறு தொகையைக் கட்டணமாகப் பெற்று இரண்டு நாள் பயிற்சியும் அளிக்கிறோம்” என்கிறார் கலா பாலசுந்தரம்.

முதலுதவி சிகிச்சைப் பயிற்சிக்காக ‘அலர்ட் வாய்ஸ்’ என்ற செயலியை இவர்களது தொண்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது. முதலுதவி சிகிச்சைப் பயிற்சி பெற்றவர்கள் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு அருகில் இருந்தால் இந்தச் செயலி மூலம் அவர்களைத் தொடர்புகொள்ள முடியும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவ முடியும்.

“தற்போது இந்தச் செயலி பரிசோதனையில் உள்ளது. இன்னும் சில மாதங்களில் கூகுள் ப்ளே ஸ்டாரில் யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்” என்கிறார் கலா பாலசுந்தரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x