என் பாதையில்: சைஸ் ஜீரோ

என் பாதையில்: சைஸ் ஜீரோ
Updated on
1 min read

சில வாரங்களுக்கு முன் படித்த செய்தி என்னைக் கலங்கவைத்துவிட்டது. அம்மா, அப்பா, இரண்டு குழந்தைகள் என மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்திலிருந்து திடீரென அம்மா காணாமல் போனார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அந்தப் பெண்ணின் உடல் பருமனாக இருந்ததால் உடல் இளைத்து அழகாக மாற வேண்டுமென சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்.  அதன் உச்சகட்ட விளைவாகச் சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அழகாக மாற வேண்டும் என்பதற்காக உயிரையே  விலையாகக் கொடுத்திருக்கிறார்.

அழகின் இலக்கணம்?

இதை வெறும் செய்தி என நினைத்துக் கடந்துவிட முடியவில்லை. முன் எப்போதையும்விடத் தற்போது பெரும்பாலான பெண்கள் புற அழகுக்கு  முக்கியத்துவம் தரத் தொடங்கியிருக்கிறார்கள். சிலை போன்ற வடிவும் மெலிந்த இடையும் வில் போன்ற புருவங்களும் கார்மேகக் கூந்தலும் பெண்ணுக்கான இலக் கணங்கள் எனப் பெண்களே நம்பத் தொடங்கியதன் விளைவே தெருக்கள்தோறும் அழகு நிலையங்கள் முளைத் திருக்கின்றன.

காட்சி ஊடகங்களும் தங்கள் பங்குக்குப் பெண்ணைப் போகப் பொருளாகக் காட்சிப்படுத்துகின்றன. திரைப்படங்கள், விளம்பரங்கள் போன்றவற்றில் தொடங்கி சின்னதொரு நிறுவனத்தில் வரவேற்பாளராகப் பணிபுரிவதுவரை ஒல்லியான, சிவப்பான பெண்ணைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். காலம் காலமாக இந்தச் சமூகத்தில் ஊறியிருக்கும் அழகு குறித்த சிந்தனையின் வெளிப்பாடுதான் இது.

அலங்கரித்துக்கொள்வது தங்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது என்று பெண்களின் வாயிலாகவே சொல்லவைத்த வகையில் நுகர்வு கலாச்சாரமும் பன்னாட்டு நிறுவனங்களும் வெற்றிபெற்றிருக்கின்றன. அழகு சாதனப் பொருட்கள் மட்டுமே கோடிக்கணக்கில் விற்பனையாகின்றன. ஒவ்வொருவரும் அவரவர் பணிக்கு ஏற்ப தங்களை அழகுபடுத்திக்கொள்ள நினைக்கின்றனர். முடிந்தவர்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்தால் முடியாத பெண்கள் நூறுகளில் செலவு செய்கின்றனர்.

அழகுச் சிறை

இப்படி ஆரோக்கியம் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுப் புற அழகு முதலிடத்தில் இருப்பது கவலையளிக்கிறது. இதைப் பற்றிப் பேசினால்கூடப் பொறாமையில் பேசுவதாகவே சில பெண்கள் நினைப்பது, அவர்கள் மனத்தில் மலிந்திருக்கும் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நச்சுக்கள், ரசாயனங்கள் போன்றவை கலக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் என்பதையும் பல பெண்கள் உணர்வதில்லை. தோற்றமும் நிறமும் இயற்கை; அதை எதனாலும் மாற்ற முடியாது என்பது புரிந்தும் அழகு சாதனப் பொருட்களின் பின்னால் செல்கின்றனர். மற்றவர்களைப் போல் அழகுபடுத்திக்கொள்ள முடியவில்லையே என மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்களும் அதிகம். 

திறமையும் செயல்பாடுமே அடையாளம் என் பதைப் பெண்கள் உணரவிடாமல் இந்தச் சமூகமும் ஊடகங்களும் தடுத்து வைத்திருக்கின்றன என்றால் சில பெண்கள் தாங்களாகவே விரும்பி அழகுச் சிறையில் அடைந்துகொள்கின்றனர். உடல் இளைப்பதும் ஆரோக்கியமாக இருப்பதும் வரவேற்கத்தக்கவையே. ஆனால், உயிருக்கே உலை வைக்கும் சிகிச்சை முறைகள் தேவையா? தெளிந்த சிந்தனையையும் நேர்கொண்ட செயல்பாடுகளையும்விடவா முகப்பூச்சுகள் நமக்கு அழகைத் தந்துவிடும்?

- ஜான்சிராணி அப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in