பெற்றோரின் பேரன்பு: அவன் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்

பெற்றோரின் பேரன்பு: அவன் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்
Updated on
2 min read

மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் குறித்தும் அவர்களின் பெற்றோரது நிலை குறித்தும் பிப்ரவரி 10 அன்று வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் இடம்பெற்ற ‘பெற்றோரின் பேரன்பு’ கட்டுரையைப் படித்ததும் என் மகன் குறித்தும் எழுத வேண்டும் என்ற உந்துதலில் இந்த அனுபவத்தை எழுதுகிறேன்.

எனக்கு 61 வயது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நிலையையும் வலியையும் உணர்ந்தவள் நான். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பிறகு 1980-ல் மகன் பிறந்தான். அவன் பிறந்த சந்தோஷத்தில் ‘ஆனந்த்’ என்று அவனுக்குப் பெயர் வைத்தோம். அந்த ஆனந்தம் நீண்ட நாள் நீடிக்காது என்று அப்போது எங்களுக்குத் தெரியாது. 

பிறந்தபோது நன்றாக இருந்தவனுக்கு எட்டு மாதம் ஆனபோது கடுமையான காய்ச்சல் வந்தது. மருத்துவமனையில் சேர்த்தோம். டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அவனுக்கு மூளை வளர்ச்சிக் குறைபாடு உள்ளது என்று சொல்லிவிட்டனர். கடும் காய்ச்சலுடன் அவனுக்கு வலிப்பும் வந்துவிட்டது. இந்தக் காலத்தில் உள்ளதுபோல அப்போதெல்லாம் ஸ்கேன் செய்யும் மையங்கள் அவ்வளவாக இல்லை.

அதன் பிறகு அவனைத் தூக்கிக்கொண்டு போகாத மருத்துவமனையில்லை; வேண்டாத தெய்வமில்லை. நான் சொந்த தாய்மாமனைத் திருமணம் செய்துகொண்டதால்தான் என் மகனுக்கு இந்தப் பாதிப்பு என்றார்கள். ஆனால், முதலில் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளும் நன்றாகத்தானே இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. அவனுக்கு இந்தக் குறைபாடு இருப்பது தெரியவந்ததிலிருந்து நானும் கணவரும் வெளியே எந்த  விசேஷத்துக்கும் சென்றதில்லை. ரொம்ப அவசியம் என்றால் கணவர் மட்டும் சென்றுவிட்டு வருவார்.

ஆனந்தால் ஓரளவு சுவரைப் பிடித்துக்கொண்டு நடக்க முடியும். ஆனால், நீண்ட நேரம் அவனால் நிற்க முடியாது. அவனுக்கு எல்லாமே படுக்கையில்தான். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இவன் இப்படியிருப்பதால் இரண்டு பெண் குழந்தைகளின் திருமணம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்றுக்கூடப் பயந்தோம்.

ஆனந்துக்கு மெலடிப் பாடல்களைக் கேட்கப் பிடிக்கும். ரேடியோவில் பாட்டு ஒலித்தால் வேகமாகத் தவழ்ந்து வந்து ரேடியோவின் முன்னால் அமர்ந்து கைத்தட்டிக்கொண்டு ரசிப்பான். எங்களுடைய சக்திக்கு மீறி அவனுக்கு மருத்துவம் பார்த்தோம். ஒன்பது மாதம் வயிற்றிலும் 18 ஆண்டுகள் இடுப்பிலும் சுமந்த என் மகனை அவனுடைய 19 வயதில் இழந்தோம்.

டிவியில் ‘அஞ்சலி’ படம் போட்டால் என் மகனைத்தான் நினைத்துக்கொள்வேன். மகள்கள் இருவரும் திருமணம் முடிந்து குழந்தைகளுடன் நலமாக இருப்பது மட்டுமே எங்களுக்கு இருக்கும் சிறு ஆறுதல். தற்போது மருத்துவத் துறை வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால், இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலையில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அதிலும் பெண் குழந்தைகளின் நிலை மிகக் கொடுமை. மனவளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்குப் பெற்றோரைத் தாண்டி சமூகத்தின் அரவணைப்பும் அரசின் ஆக்கபூர்வமான அணுகுமுறையும் தேவை.

- ராகினி வாசுதேவன், கூடுவாஞ்சேரி.

‘பெற்றோரின் பேரன்பு’ கட்டுரையில் குறிப்பிட் டிருப்பதுபோல் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை வளர்ப்பது வார்த்தைகளில் சொல்ல முடியாத கஷ்டம்தான். எங்கள் வீட்டிலும் 23 வயதில் மகன் கார்த்திகேயன் உள்ளார். 1995-ம் ஆண்டிலிருந்து அவனைக் கவனித்துவருகிறோம். இதை எழுதும்போது கண்ணீரை அடக்க முடியவில்லை.

- சு. ஆயத்தாரணம், கந்தர்வக்கோட்டை.

நான் சிறுமியாக இருந்தபோது பக்கத்துத் தெருவில் உள்ள ஷீபாவின் வீட்டுக்கு விளையாடச் செல்வேன். அவளுக்கு ஒரு அண்ணன் இருப்பதாகச் சொல்லியிருந்ததால், எங்கே எனக் கேட்டேன். பழைய துணியில் கிடத்தப்பட்டிருந்த குழந்தையைக் காட்டினாள். அருகில் சென்று பார்த்தபோது அது குழந்தையில்லை எனப் புரிந்தது. கைகளும் கால்களும் குச்சியாக நீண்டிருக்க, தலையைச் சரித்தபடி பார்த்த அவனை அண்ணன் என நம்ப முடியவில்லை.

அவ்வப்போது கையை ஆட்டுவதும் சத்தமிடுவதுமாக இருப்பான். ஆரம்ப நாட்களில் அவனை வேடிக்கை பார்ப்பது பிடித்திருந்தது. பிறகு அது பழகிய பிறகு அவனை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அவனைத் தாண்டிக்கொண்டு ஓடுவதும் விளையாடுவதுமாக இருப்போம். ஆனால், அவனுடைய அம்மா மட்டும், அவனிடம் ஏதாவது பேசியபடி இருப்பார். அவனுக்குப் புரியுமா எனத் தெரியாது. ஆனால், அம்மா நடந்து சென்றால்  மட்டும், அவன் தலை திருப்பிப் பார்ப்பான்.

அவர் ஏதாவது சொன்னால் லேசாக சிரிப்பதுபோல் தெரியும். அவனை மடியில் வைத்தபடி சோறூட்டுவார். அன்று நடந்தவற்றையெல்லாம் சொல்வார். சில நேரம் எனக்கு எரிச்சலாகக்கூட இருக்கும். ஏன் இவன் இப்படி எச்சில் வழிந்தபடி படுத்தே கிடக்கிறான் எனத் தோன்றும். ஒரு நாள் பள்ளி  முடிந்து வந்தபோது ஒரு மூட்டையில் வறட்டியைக் கட்டிவைத்திருந்தார் அம்மா.

எதற்கு இவ்வளவு எனக் கேட்டபோது ஷீபாவின் அண்ணன் இறந்துவிட்டதாகவும்  அவனை எரியூட்டத்தான் அது என்று சொன்னார். அதன் பிறகு ஷீபாவின் அம்மாவின் குரல் முன்புபோல் அந்த வீட்டில் ஒலிக்கவில்லை. இது நடந்து 30 ஆண்டுகள் இருக்கும். கடந்த வாரம் வெளியான ‘பெற்றோரின் பேரன்பு’ கட்டுரை பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. அந்தக் கட்டுரையைப் படித்தபிறகு ஷீபாவின் அம்மா என் மனத்துக்குள் விஸ்வரூபம் எடுத்து நின்றார். அவரைப் போன்ற பெற்றோரால்தான் சிறப்புக் குழந்தைகளின் வாழ்க்கை ஓரளவுக்கேணும் உயிர்ப்புடன் இருக்கிறது.

- தேவி, சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in