

தோழியால் மருத்துவரானவர்
எலிசபெத் பிளாக்வெல், அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவர். பெண்களின் மருத்துவக் கல்விக்கான முன்னோடி அவர். 1821-ல் இங்கிலாந்தில் பிறந்து 1830-ல் நியூயார்கில் குடும்பத்துடன் குடியேறினார்.
பள்ளிக்கூடம் நடத்தினார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் டியூஷன் எடுத்தார். மகளிர் உரிமைக்காகப் போராடினார். பிரச்சாரங்களில் பங்கேற்றார். உடல் நலம் குன்றி மறைந்த தோழியின் பிரிவு தந்த பாதிப்பால் மருத்துவம் பயின்றார்.
பெண் என்பதால் முதலில் நிராகரிக்கப்பட்ட அவர், இறுதியாக நியூயார்க் ஹோபர்ட் கல்லூரியில் படித்து, 1849-ல் மருத்துவப் பட்டம் பெற்றார். நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றினார். பல கட்டுரைகளை எழுதினார். பெண்களின் உடல், மன வளர்ச்சி குறித்துப் புத்தகம் எழுதினார். லண்டன் மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1910-ல் 89-வது வயதில் மறைந்தார். அவரது 198-வது பிறந்தநாளைக் கொண்டாடும்விதமாக பிப்ரவரி 7 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.
பின்வாங்கிய தேவசம் போர்டு
சபரிமலை தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்தத் தீர்ப்பு தவறானது என்று கூறி அதை முதலில் சீராய்வு செய்யக்கோரி திருவாங்கூர் தேவசம் போர்டு மனுதாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பாக வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி ஆஜரானார். திவிவேதி தனது வாதத்தில், “சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைவது தவறல்ல.
சபரிமலையில் பெண்கள் நுழைவுக்கு எதிராகப் பழக்க வழக்கங்கள் இருந்ததாக வரலாற்று ஆவணங்கள் எதிலும் ஆதாரம் இல்லை. அதனால், அதைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறோம். பெண்கள் நுழைவை எதிர்ப்பது சம உரிமைக்கு எதிரானது. சம உரிமைதான் அரசியலமைப்பின் முக்கிய நோக்கமே. சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம்” என்று கூறினார்.
மடிந்த மற்றுமொரு பெண்
தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியாவை அதே ஊரைச் சேர்ந்த துணை இயக்குநர் எஸ்.ஆர்.பாலகிருஷ்ணன் காதலித்து மணந்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சென்னை ஜாபர்கான்பேட்டையில் அவர்கள் வசித்துவந்தனர். பாலகிருஷ்ணன், தனது மனைவியின் பெயரில் சினிமா கம்பெனி ஆரம்பித்து 2010-ல் ‘காதல் இலவசம்’ என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார். அதில் சந்தியாவே கதாநாயகியாக நடித்தார்.
இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. சமீபத்தில் ஏற்பட்ட குடும்பச் சண்டையில் மனைவியை பாலகிருஷ்ணன் கொன்று, உடலை வெவ்வேறு இடங்களில் வீசியதாகக் காவல் துறை தெரிவிக்கிறது. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டுக் கொன்றுவிட்டதாக முதலில் சொன்ன பாலகிருஷ்ணன், பிறகு தான் மனைவியைக் கொல்லவில்லை என்று கூறியிருக்கிறார்.
ஆடை சுதந்திரமா, அடிமைத்தனமா?
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத்தந்த ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ படத்தின் பத்தாவது ஆண்டையொட்டி நடந்த விழாவில் ரஹ்மானுடைய மகள் கதீஜா பங்கேற்றார். விழாவில் அவர் முகத்தை முழுவதுமாக மறைக்கும்விதமாக மேலங்கியை அணிந்திருந்தார். அதைப் பார்த்த பலரும் ரஹ்மானைப் பிற்போக்குச் சிந்தனைகொண்டவர் என விமர்சித்தனர். சமூக வலைத்தளங்களிலும் அது குறித்த விவாதம் வைரலானது.
தன் தந்தை தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, “என் தந்தையின் வற்புறுத்தலால்தான் நான் இப்படி உடையணிகிறேன் என்றும் அவர் இரட்டை நிலைப்பாடு கொண்டவர் என்றும் பலர் எழுதியிருக்கின்றனர். வாழ்வில் நான் எதைத் தேர்ந்தெடுக்கிறேன் என்பதற்கும் என் பெற்றோருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மேலங்கியை அணிவது என் தனிப்பட்ட தேர்வு. அவரவருக்கு விருப்பமானதை அணியும் உரிமை அனைவருக்கும் உண்டு. எதையும் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் அவசரப்பட்டுத் தீர்ப்பு எழுதாதீர்கள்” என கதீஜா விளக்கம் அளித்திருக்கிறார்.
பத்திரிகை ஒன்றுக்காக எடுக்கப்பட்ட தன் மூன்று குழந்தைகளின் படங்களை இன்ஸ்டாகிராமில் ரஹ்மான் பகிர்ந்திருக்கிறார். அதிலும் கதீஜா புர்கா அணிந்திருக்கிறார். கதீஜா விளக்கம் அளித்தபோதும், ‘பிற்போக்குத்தனத்தை விரும்பி ஏற்கிறேன் என்பது எப்படிச் சரியாகும்? புர்காவே அடிமையின் சின்னம்தானே’ என்ற விமர்சனங்களும் எழுந்தன.
சடங்கால் பிரிந்த உயிர்
மாதவிடாய் காலத்தில் பெண்களைத் தீட்டாக பார்க்கும், ‘சாவ்படி’ என்ற வழக்கம் நேபாளத்தில் இப்போதும் உள்ளது. அந்த வழக்கத்தின்படி, பெண்கள் மாதவிடாய் நாட்களில் அசுத்தமானவர்களாகக் கருதப்படுவார்கள். அப்போது அவர்கள் தனி குடிசையிலோ மாட்டுக்கொட்டகையிலோதான் தங்க வேண்டும். இந்த நடைமுறையை நேபாள அரசு 2017-ல் தடைசெய்தது. இந்தச் செயலில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனையும் 3,400 நேபாள ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், இன்றும் கிராமப் பகுதியில் இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த மாதம் நேபாளத்தில் ஒரு தாயும் அவருடைய இரு மகள்களும் இதனால் உயிரிழக்க நேரிட்டது. இந்த நிலையில், கடந்த வாரம், பார்வதி (21) மாதவிடாய் காரணமாகத் தனிக்குடிசையில் வைக்கப்பட்டார். ஜன்னல்களற்ற குடிசையில், கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் இரவு நேரத்தில் குளிர் தாங்க முடியாமல் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து உள்ளார். அதனால் ஏற்பட்ட புகையால் மூச்சுத் திணறி இறந்துவிட்டார்.