

புரியும் மொழியில் பேசுங்கள்
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா குறித்து கடந்த புதன் அன்று மாநிலங்களவையில் விவாதம் நடந்தது. அதில் பேசிய கனிமொழி, “நான் பெரியார் மண்ணில் இருந்து வந்துள்ளேன். எங்களுக்குச் சமூக நீதிதான் முக்கியம். சாதியால் புறக்கணிக்கப்பட்ட மக்களை முன்னுக்குக் கொண்டுவர, முதன்முதலாக இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததே நீதிக்கட்சிதான். அந்த இட ஒதுக்கீடும் இதுவும் ஒன்றல்ல.
தற்போது பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இட ஒதுக்கீட்டின் அடிப்படைக்கே முரணானது. இது சட்டத்துக்கு எதிரானது. காலம் காலமாகச் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்கும் பொருட்டுக் கொண்டுவரப்பட்டதே இந்த ஒதுக்கீடு. ஆனால், அதைப் பறிக்கவே இந்தப் புதிய இட ஒதுக்கீடு வருகிறது” என்றார்.
கனிமொழி பேசிக்கொண்டு இருக்கும்போதே துணை சபாநாயகர், “உங்கள் நேரம் முடிந்துவிட்டது” என்று இந்தியில் கூறினார். கனிமொழி பேசுவதை நிறுத்தாமல், “எனக்குப் புரியக்கூடிய மொழியில் பேச முடியுமா?” எனக் கேட்டார். அதன்பின் துணை சபாநாயகர் அதையே ஆங்கிலத்தில் சொன்னார்.
பெண் என்றால் இளக்காரமா?
ர ஃபேல் போர் விமானம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதில் சொல்ல முடியாமல் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குப் பின்னால் பிரதமர் ஒளிந்துகொண்டிருக்கிறார் என்ற கருத்தை ராகுல் காந்தி முன்வைத்தார். புதன்கிழமை ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்திலும் இதே கருத்தை மீண்டும் கூறினார். தேசியக் கட்சியின் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி இப்படியொரு கருத்தைச் சொன்னது, தேசிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியது. விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குடும்பப் படங்களின் நாயகி
கலையால் ஆசிர்வதிக்கப்பட்ட யாஸ்மின் அகமது, 50 ஆண்டுகளே வாழ்ந்தார். மலேசியாவில் 1958-ல் பிறந்த அவர் அரசியலையும் உளவியலையும் படித்துப் பட்டம் பெற்றார். படிக்கும் காலத்தில் அவர் புளுஸ் பாடகியாகவும் பியோனா இசைக் கலைஞராகவும் இரவுகளில் வலம்வந்தார். 1982-ல் விளம்பரப் படத் துறையில் நுழைந்தார். அதன்பின் நிகழ்ந்தவை எல்லாம் வரலாறு. ‘பெட்ரோநாஸ்’ நிறுவனத்துக்காக அவர் எடுத்த விளம்பரப் படம் அவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுக்கொடுத்தது. 2002-ல் முதல் திரைப்படத்தை (Rabun) எடுத்தார்.
2007-ல் அவரது மூன்றாவது படமாக முக்ஷின் வெளியானது. குழந்தைகளின் உலகை நெகிழ்ச்சியுடன் விவரித்த அந்தத் திரைப்படம் அவருக்குச் சர்வதேச அங்கீகாரத்தையும் விருதுகளையும் பெற்றுக்கொடுத்தது. அவருடைய திரைமொழி அலாதியானது. குடும்பக் கதைகளைச் சிக்கலற்ற எளிய மொழியில், யதார்த்தமாக அபரிமித காதலோடும் பரிவோடும் விவரிக்கும் திறனே அவரது தனிச்சிறப்பு.
2009-ல் ஒரு விழாவில் பங்கேற்றபோது, தலையை மேஜைமீது சாய்த்து, கைகளால் முகத்தைத் தாங்கியபடி மூச்சற்றுப்போனார். அவர் ஐந்து திரைப்படங்களே எடுத்துள்ளார். அவரது 57-வது பிறந்த நாளையொட்டி ஜனவரி 7 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.