வானவில் பெண்கள்: மதுமிதா சொன்ன பதில்

வானவில் பெண்கள்: மதுமிதா சொன்ன பதில்
Updated on
1 min read

பெண் குழந்தைகளுக்குத்  தற்காப்புப் பயிற்சி முக்கியம் என்பதைத்தான் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் நமக்கு உணர்த்துகின்றன. குழந்தைகள், சிறுமிகள் எனத் தொடங்கி வயது முதிர்ந்த பெண்களும் பல்வேறு வகையான பாலியல் தொந்தரவுக்கு ஆளாக நேரிடுகிறது. சிறு வயதிலிருந்தே குத்துச்சண்டை பயிற்சியெடுத்துக்கொண்டால் அதில் சாதிப்பதோடு தற்காப்புக்கும் குத்துச்சண்டையைப் பயன்படுத்தலாம் என்கிறார் மதுமிதா.

சென்னையில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கியம்  படித்துவரும் மதுமிதாவுக்கு எட்டாம் வகுப்பு படித்தபோது குத்துச்சண்டை மீது ஆர்வம் பிறந்துள்ளது. 2014-ல் நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்றதுதான் தனது முதல் போட்டி அனுபவம் என்கிறார். முதல் போட்டியிலேயே வெண்கலப் பதக்கம் வென்றாலும், அந்தப்  போட்டியில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண்கள் கலந்துகொண்டது  மதுமிதாவுக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது.

vanavil-2jpgright

எனவே, குத்துச்சண்டைப் பயிற்சியை விடாமல் தொடர வேண்டும் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டே உடல்நலக் குறைவு ஏற்பட, பயிற்சியைத் தொடர முடியாத நிலை. அதிலிருந்து தேறிவந்தவர் குத்துச்சண்டையோடு  குங்பூ போட்டிகளிலும் களமிறங்கித் தங்கம் வென்றுள்ளார்.            

முன்னுதாரண அம்மா

இதுபோன்ற விளையாட்டுகளில் பெண் குழந்தைகள் பங்கேற்றால் ஆண் தன்மை வந்துவிடும், குழந்தை பிறப்பதில் பிரச்சினை வரும் என்றெல்லாம் சொன்னவர்களுக்கு, குத்துச்சண்டையில் வென்ற தங்கத்தையே பதிலாக்கியுள்ளார் மதுமிதா.

மத்திய  காவல் படையில் பணிபுரியும் அம்மாதான் தனக்கு முன்னுதாரணம் என்கிறார் மதுமிதா. “போட்டியில் கலந்துகொள்ளப் பணம் தேவைப்படும். பள்ளிகளில் தரும் ஊக்கத்தொகையை என் அம்மா வாங்க மாட்டாங்க. தனியா வாழும் என் அம்மா யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் கடுமையான  சூழ்நிலைகளையும் மனவலிமையோடு  கடந்துவந்தாங்க.

அம்மாவோட இந்த வலிமைதான் போட்டிகளில் நான் ஜெயிச்சே ஆகணும்னு ஊக்கம் தரும். பெண்களுக்குக் கல்வி எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல் தைரியமும் தற்காப்புக் கலைப் பயிற்சியும் முக்கியம்” என்கிறார்.

தன் பயிற்சியாளர் மனோஜுக்கும் இந்த வெற்றியில் பங்கு இருப்பதாக மதுமிதா குறிப்பிடுகிறார். சென்னையில் உள்ள ஸ்பிட் ஃபயர் அகாடமி மூலம்  குத்துச்சண்டைப் பயிற்சி அளித்துவரும் மனோஜ், பெண் குழந்தைகள் ஏதாவதொரு தற்காப்புக் கலையைப் பயில்வது அவசியம் என்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in