

ஆண், பெண் இருவருக்குமே உடற்பயிற்சி அவசியம். மாறிவரும் வாழ்க்கை முறையும் உணவு முறையும் இதை உணர்த்துகின்றன. நாற்பது வயதைக் கடப்பதற்கு முன்னரே பல பெண்களுக்கு மூட்டுவலி வந்துவிடுகிறது. படிகளில் ஏறி இறங்குவதற்குள் மூச்சு வாங்கியபடி சோர்வாக உட்கார்ந்துவிடுகின்றனர்.
சிறிது தொலைவு நடந்தாலே கால் வலியால் அவதிப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் தவிர்க்கத் தினமும் நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். வீட்டுவேலைதான் கணக்கில்லாமல் செய்கிறோமே என்றால், அவையெல்லாம் உடற்பயிற்சி கணக்கில் வராது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டு வேலைகளுக்கு நேரம் ஒதுக்குவதைப் போல உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.
வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளுடன் சிலர் ஜிம்முக்குச் சென்றும் வொர்க் அவுட் செய்கிறார்கள். உடல் இளைப்பதில் பெண்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அதை உணர்ந்து தற்போது பல ஜிம்களில் பெண்களுக்கெனத் தனியாக நேரம் ஒதுக்கத் தொடங்கியுள்ளனர்.
“திரையுலகில் நாயகிகளுக்கு ஃபிட்னஸ் மிகவும் முக்கியம். உடல் எடை கொஞ்சம் அதிகரித்துவிட்டாலே படவாய்ப்புகள் குறையத் தொடங்கிவிடும். எப்போதுமே ஒரே மாதிரியான உடல் எடையைப் பராமரிப்பதும் கடினம். படப்பிடிப்புகளுக்கு இடையே உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது சவாலானது” என்கிறார் நடிகை அஞ்சலி.
நேரம் ஒதுக்குவோம்
கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தினமும் மூன்று மணி நேரம் இதற்காக ஒதுக்கிவிடுகிறார். உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என்று உடலைக் கச்சிதமாகப் பேணிவருகிறார்.
“ரொம்ப குறுகிய காலத்தில் 14 கிலோ எடையைக் குறைத்தேன். பார்த்தவர்கள் பலருமே ஆச்சரியப்பட்டனர். சிலர் இதெல்லாம் சாதாரணம் என நினைக்கலாம். ஆனால், இது எளிதல்ல. கடுமையாகப் பயிற்சி எடுக்கிறேன்.
என்ன ஷூட்டிங் இருந்தாலும் தினமும் கண்டிப்பாக மூன்று மணி நேரம் ஜிம்மில் இருப்பேன். சில நாட்கள் ரொம்ப டென்ஷன் இருந்தால் கூடக் கொஞ்சம் நேரமாவது வொர்க்-அவுட் பண்ணுவேன். அம்மா பல நாட்கள், ‘நீ ஏன் வீட்டுக்கு வர்ற... ஜிம்மிலேயே தங்கிட வேண்டியதானே’ என்று திட்டுவார்.
எடையைக் குறைக்க உடற்பயிற்சி மட்டும் போதாது. உணவுக் கட்டுப்பாடும் அவசியம். இரண்டில் ஒன்றை விட்டாலும் எடை குறையாது. நான் புரோட்டீன் டயட்டைக் கடைப்பிடிக்கிறேன். அரிசி, இனிப்பு, கார்போஹைட்ரேட், எண்ணெய் உணவு போன்றவற்றைச் சாப்பிடவே மாட்டேன். கோழி, மீன், முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றைச் சாப்பிடுவேன். காய்கறிகளை நிறையச் சாப்பிடுவேன். அவற்றில் கிழங்கு வகைகளை மட்டும் தொட மாட்டேன். தினமும் கண்டிப்பாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்பது டயட் விதி.
ஒரு இட்லி அதிகமாகச் சாப்பிட்டுவிட்டேன் என்று மறந்துபோய் உடற்பயிற்சியாளரிடம் சொல்லிவிட்டால் போதும். கூடுதலாக ஒரு மணி நேரம் வொர்க் அவுட் செய்யச் சொல்லிவிடுவார். அதனாலேயே அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுவேன்.
உங்களுக்கு எவ்வளவுதான் மன அழுத்தம், டென்ஷன் இருந்தாலும் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். புத்துணர்வாக உணர்வீர்கள். ஒன்றரை ஆண்டுகளாக இதைத்தான் கடைப்பிடித்துவருகிறேன்” என்று உற்சாகமாகச் சொல்கிறார் அஞ்சலி.