பார்வை: மதவாத அரசியலும் பெண்ணுரிமையும்

பார்வை: மதவாத அரசியலும் பெண்ணுரிமையும்
Updated on
3 min read

பெண்ணடிமைத்தனம் தகர்க்க வீரம்செறிந்த போராட்டக்களம் கண்ட கேரள மண்ணில் நாங்கள் அசுத்தமானவர்களா? இல்லை என்பதைப் பறைசாற்றி 50 லட்சம் பெண்கள் பங்கேற்ற வனிதா மதில் (பெண்கள் சுவர்) ஜனவரி 1-ம் தேதி எழுப்பப்பட்டது.

கேரள முற்போக்கு மரபுகளைத் தகர்க்க அனுமதியோம், ஆண்-பெண் சமத்துவத்தை நிலைநிறுத்துவோம் எனக் கூறி 620 கி.மீ. தொலைவுக்கு காசர்கோட்டிலிருந்து திருவனந்தபுரம்வரை ‘பெண்கள் சுவர்’ எழுப்பி வரலாறு படைத்துள்ளனர் கேரளப் பெண்கள்.

பெண்களும் செல்லலாம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வரக் கூடாது என அந்தக் கோயிலின் விதிமுறை இருந்தது. அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் நுழையும் அனுமதியை 2018 செப்டம்பர் 28-ல் உச்ச நீதிமன்றம் வழங்கியது. உடல்ரீதியான காரணங்களைக் காட்டியோ நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள் போன்ற காரணங்களைக் காட்டியோ பெண்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

பெண்களை ஒதுக்கிவைப்பது அவர்களின் கண்ணியத்தை அவமதிப்பது என்றும் அது கூறியுள்ளது. நடைமுறை பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகளை வைத்tது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திசைதிருப்ப முடியாது. சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அரசியல் சாசனத்தின்கீழ் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அனைத்து வயதுப் பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் கட்டாயம் செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, பெண்களுக்கும் ஐயப்பன் கோயிலுக்குள் செல்லும் உரிமை இருக்கிறது என்பதையே உறுதிப்படுத்துகிறது. கோயிலுக்குள் செல்ல விரும்பும் பெண்களைத் தடுக்கக் கூடாது என்பதே தீர்ப்பின் சாராம்சம்.

விசித்திர முரண்

இப்படிப்பட்ட தீர்ப்பு வந்தவுடன் அனைத்து வயதுப் பெண்களும் வரிசையில் நின்று கோயிலுக்குள் சென்றுவிடுவார்களா? இல்லை. ஆனால், செல்ல விரும்பும் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும். இத்தீர்ப்பைக் கேரள அரசு அமல்படுத்தும் என்ற அறிவிப்பு வந்தவுடன், கேரளத்தில் பாஜக, இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தீர்ப்பை அமல்படுத்தவிடாமல் தொடர்ந்து கலவரம் செய்துவருகின்றனர்.

சில பெண்கள் அரசிடம் முறையான அனுமதி பெற்றுக் கோயிலுக்குள் செல்ல முற்பட்டபோது, தடுத்து நிறுத்தப்பட்டனர். மிரட்டுவது, விரட்டியடிப்பது எனத் தொடர்ந்து நடந்துவருகிறது.

அவர்கள், இந்தத் தீர்ப்பு இந்து மத நம்பிக்கைக்கும் பாரம்பரிய மத பழக்கவழக்கத்துக்கும் எதிரானது எனக் கூக்குரலிடுகின்றனர். இத்தனை எதிர்ப்புகளையும் மீறி ஜனவரி 2-ம் தேதி இரண்டு பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குள் சென்று வழிபட்டுத் திரும்பியுள்ளனர். இதனால் அங்கு பாஜகவினர் கேரளத்தைக் கலவர பூமியாக மாற்றியுள்ளனர்.

79 பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. காவல் துறையைச் சேர்ந்த 31 பேர் காயமடைந்துள்ளனர். பயணிகள் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள். வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டுள்ளன. ஐயப்பன் கோயில் நடையைச்  சாத்தி, தீட்டு கழிக்கப்பட்டுள்ளது.

பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் செல்லும் உரிமை வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்கள் யார்? ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் பாஜகவினரும்தான். நீதிமன்ற உத்தரவு வந்த பின்பு அதை அமல்படுத்தவிடாமல் மத நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் எனத் தடுப்பது யார்? இதுவும் அவர்களேதான். இம்முடிவு விசித்திரமானதுதானே?

முத்தலாக் முரண்பாடு

சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் ஷயிரா பானு தன்னுடைய கணவர், கடிதம் மூலம் தலாக் சொல்லி விவாகரத்து செய்ததை எதிர்த்து  நீதிமன்றம் சென்றார். இஸ்லாமிய ஆண்கள், தங்கள் மனைவியை விவாகரத்து செய்யப் பயன்படுத்தும் முத்தலாக் முறை அடிப்படை அரசியல் அமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பிரதமர் மோடியோ இது வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு; இஸ்லாமியப் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை, சம வாய்ப்பு எனப் புகழ்ந்தார். அமித்ஷாவோ இது இஸ்லாமியப் பெண்கள் வாழ்வில் புதிய தொடக்கம் என மகிழ்ந்தார்.

அதைத் தொடர்ந்தே முத்தலாக் தடைச் சட்டம் அவசர அவசரமாக பாஜக அரசால் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தைப் பொறுத்தவரை மத நம்பிக்கை வேறு, பெண்களின் அடிப்படை உரிமை வேறு என பாஜக, இந்துத்துவ அமைப்புகள் வாதிடுகின்றன. முத்தலாக் விஷயத்தில் இஸ்லாமியப் பெண்களின் உரிமையில் மத நம்பிக்கை தலையிடக் கூடாது என்று கூறும் பாஜகவினர், அதே மத நம்பிக்கையைக் காரணம்காட்டி ஐயப்பன் கோவிலுக்குள் இந்துப் பெண்கள் செல்லும் அடிப்படை உரிமையை மறுப்பது ஏன்?

மாற்றம் நிச்சயம்

பாஜக மட்டுமல்ல; கேரள காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடும் இதுதான். ஜனவரி 2-ம் தேதி இரண்டு பெண்கள் கோயிலுக்குள் சென்று திரும்பியதைக் கறுப்பு நாளாகக் கேரள காங்கிரஸ் அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் சென்று வழிபடும் மத உரிமையில் நீதிமன்றமோ அரசோ தலையிடக் கூடாது என்ற சொல்லும் கேரள காங்கிரஸ் கட்சிக்கு இஸ்லாமியர்களின் மத நம்பிக்கையான முத்தலாக் விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டதில் என்ன நிலைபாடு?

மதத்தின் பெயரால் அரசியல் நடத்தி எப்படியாவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்பதே இரு கட்சிகளின் நோக்கம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்மூலம் பெண் உரிமையையும் ஆண்-பெண் சமத்துவத்தையும் நிலைநாட்டுவதே கேரள இடதுசாரி அரசின் நோக்கம்.

தலித் மக்கள் கோயில்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டபோது பல இடங்களில் ஆலய நுழைவுப் போராட்டங்கள் நடந்த வரலாறு உண்டு. அன்று நடந்த அந்தப் போராட்டங்களே தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டின. அதேபோல் ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்வதற்கு நடக்கும் இந்தப் போராட்டம் ஒரு நாள் வெல்லும். மாற்றம் ஒன்றே மாறாதது, மாறும் என்பது திண்ணம்.

பி.சுகந்தி, மாநிலப் பொதுச் செயலாளர்,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
தொடர்புக்கு: aidwatn@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in