சிறுதுளி: வரலாற்றை எழுதிய பெண்கள்

சிறுதுளி: வரலாற்றை எழுதிய பெண்கள்
Updated on
1 min read

காஷ்மீரையும் அதன் கலாச்சாரத்தையும் வடிவமைப்பதற்குப் பங்காற்றிய பெண்களைக் கவுரப்படுத்தும் விதமாக காஷ்மீரிய பெண்கள் வடிவமைப்புக் கூட்டமைப்பின் (Kashmiri Women’s Design Collective) ஓவியர்கள் 2019-ம் ஆண்டுக்கான காலண்டரை வடிவமைத்திருக்கின்றனர்.

“காஷ்மீர் மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய பெண்களுக்கு இது எங்களின் சிறிய அஞ்சலி. வரலாறு எப்போதும் பெண்களிடம் இரக்கமற்ற முறையில் நடந்துகொண்டிருக்கிறது.

எங்கள் தூரிகையின் கோடுகளால் வரலாற்றுக்கு மறுவிளக்கம் கொடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கின்றனர் காஷ்மீரிய பெண்கள் வடிவமைப்புக் கூட்டமைப்பின் ஓவியர்கள்.

காஷ்மீரை ஆண்ட ராணிகள் தித்தா (கி.பி. 979 – 1003), கோட் ராணி (14-ம் நூற்றாண்டு), கவிஞர்கள் லால் தைத் என்ற பெயரால் அறியப்பட்ட லல்லேஷ்வரி (14-ம் நூற்றாண்டு), ஹப்பா காதூன் (1554 - 1609),  ரூப் பவானி (17-ம் நூற்றாண்டு), அர்ணிமால் (18-ம் நூற்றாண்டு), பெண் கல்வியை முன்னெடுத்த ஆசிரியர் மிஸ் முரியல் மல்லின்சன் (20-ம் நூற்றாண்டு), புகழ்பெற்ற பாடகி ராஜ் பேகம் (20-ம் நூற்றாண்டு), கல்வித் துறையின் ஊழலை எதிர்த்துப் போராடிய அதிகாரி ஹனிஃபா சபு, லால் தைத் பெண்கள் மருத்துவமனை தொடங்கிய மருத்துவர் கிரிஜா தர், காஷ்மீர் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காக மீரஸ் மஹால் என்ற அருங்காட்சியகம் தொடங்கிய அத்திகா பானோ, பிரிவினையின்போது பெண்கள் கல்வி கற்க உதவிய அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் கியானி மோகன் கவுர், எழுபது ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் விவகாரத்தில் பேரிழப்பு, வேதனை, அநீதியை அனுபவித்த ஆயிரக்கணக்கான பெண்கள் ஆகியோரின் ஓவியங்கள் இந்த காலண்டரின் பக்கங்களில் இடம்பிடித்திருக்கின்றன.

ஓவியர் ஒனைஸா த்ராபூ முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சிக்குப் பலதரப்பிலிருந்தும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in