

அமெரிக்க ஓவியக் கலைஞர் ஆலிசன் ஆடம்ஸ், தன் கணவரின் மரணம் அளித்த துயரத்திலிருந்து மீள்வதற்காக வரலாற்றில் என்றென்றும் வாழும் முன்னோடிப் பெண்களின் ஓவியங்களை ‘முன்னோடிப் பெண்கள்’ (Groundbreaking Girls) என்ற தலைப்பிலேயே வரைய ஆரம்பித்திருக்கிறார். அப்படி வரைவதற்காக முன்னோடிப் பெண்களின் வாழ்க்கை வரலாறைப் படித்ததால் கிடைத்த வலிமையால், தன் தனிப்பட்ட வாழ்க்கைத் துயரத்திலிருந்து மீண்டதாகச் சொல்கிறார் ஆலிசன்.
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த இவர், பல்வேறு துறைகளில் முன்னோடிகளாகத் திகழ்ந்த 200 பெண்களின் உருவத்தை வரைந்திருக்கிறார். இதில், வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 40 பெண்களின் சித்திரத்தைத் தேர்ந்தெடுத்து, கலிஃபோர்னியா பெண்கள் அருங்காட்சியகத்தில் (Women’s Museum of California) பிப்ரவரி 1 அன்று நடக்கும் ஓவியக் காட்சியில் காட்சிப்படுத்தவிருக்கிறார்.
“என் கணவர் 2016-ல் கார் விபத்தில் இறந்துவிட்டார். அப்போது என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். என்னால், தனியாகக் குழந்தையை வளர்க்க முடியாது, என்னால் ஓவியராக இருக்க முடியாது, என்னால் எதுவும் செய்ய முடியாது என்று அப்போது நினைத்துக்கொண்டிருந்தேன். எனக்கான ஊக்கத்தை வெளியிலிருந்து தேடிக்கொண்டிருந்த அந்த நேரத்தில், இந்தப் பெண்களின் கதைகளே என்னை மீட்டெடுத்தன” என்று சொல்கிறார் ஆலிசன்.
இவர் எலினார் ரூஸ்வெல்ட்டின் வாழ்க்கை வரலாறைப் படித்தபிறகு, அவரின் உருவத்தைத்தான் முதலில் வரைந்திருக்கிறார். அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்த ரூஸ்வெல்ட், 1948-ல் கொண்டுவந்த ‘உலகளாவிய மனித உரிமைகள் பிரகடன’த்தில் பெரும்பங்காற்றியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, தங்கள் வாழ்க்கையில் பெரும் சவால்களையும் துயரங்களையும் கடந்து சாதித்த பெண்களின் கதைகளைத் தேடித்தேடிப் படித்து அவர்களை ஓவியங்களாகத் தீட்டியிருக்கிறார்.
அமெரிக்காவில் அப்போது நிலவிவந்த அடிமை முறையிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடிமைத் தொழிலாளிகளை மீட்ட ஆப்பிரிக்க - அமெரிக்கப் பெண் ஹேரியட் டப்மேன், ஆப்பிரிக்க - அமெரிக்கக் குடிமக்களின் உரிமைகளுக்காகப் போராடிய இடா பி.வெல்ஸ், 18-ம் நூற்றாண்டு செரோக்கீ பழங்குடியின அரசியல் தலைவர் நான்சி வார்ட், ஓவியர் ஜார்ஜ் ஒ’கேஃபே, 20-ம் நூற்றாண்டுப் பெண்ணியக் கலைஞர் லீ க்ராஸ்னெர் உள்ளிட்டோரை இவர் ஓவியங்களாகப் படைத்திருக்கிறார்.