பட்டம்மாள் 100: அன்பின் திருவுரு பட்டம்மாள்! - நித்யஸ்ரீ மகாதேவன்

பட்டம்மாள் 100: அன்பின் திருவுரு பட்டம்மாள்! - நித்யஸ்ரீ மகாதேவன்
Updated on
2 min read

மேடையில் பெண்கள் பாடுவதற்கே வழியில்லாமல் இருந்த காலத்தில், கர்னாடக இசையை மேடையில் ஒப்புக்குப் பாடுவதாக இல்லாமல், இசையின் மேன்மையாக மதிக்கப்படும் பல்லவி பாடுவதுடன் ராகம், தானம், பல்லவி ஆகியவற்றைத் தமது நிகழ்ச்சிகளில் விஸ்தாரமாக நிகழ்த்தியவர் பட்டம்மாள்.

முத்துசாமி தீட்சிதரின் பாடல்களைப் பெரிதும் நிகழ்ச்சிகளில் பாடி, கர்னாடக இசை உலகில் ‘தீட்சிதர் - பட்டம்மாள் கிருதி’ என்றே பல கிருதிகளை உண்டாக்கிய பெருமைக்கு உரியவர் பட்டம்மாள். அவருடைய இசைத் திறமையைச் சொல்வதற்குத் தனி நூலே எழுதலாம்.

இசைக் கலைஞராகப் பரவலாக எல்லோருக்கும் தெரிந்த அவரது ஆளுமையைத் தவிர, வீட்டில் அவருடைய இன்னொரு பரிமாணத்தை நெருங்கி தரிசித்திருப்பவர் பட்டம்மாளின் பேத்தியான பாடகி நித்யஸ்ரீ மகாதேவன். தன்னுடைய பாட்டி தொடர்பான நினைவுகளை அவர் பகிர்ந்துகொள்கிறார்:

கனத்த சாரீரத்தில் வெளிப்படும் இனிமை

பட்டம்மாள் பாட்டியோடு நான் இருந்தவை தான் என் வாழ்வின் சிறப்பான தருணங்கள். அவர் ஒரு இசைப் பேரரசி. அவரைப் போன்ற ஒரு குடும்பத் தலைவியை, மனுஷியை இதுவரை நான் பார்த்ததில்லை. அவரது இசையைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. கரும்பு இனிக்கும், தேன் இனிக்கும் என்பது மாதிரித்தான் அவரது இசையையும் வர்ணிக்க வேண்டியிருக்கும்.

அவரது குரல், சராசரியான - மென்மையான - இனிமையான பெண்ணின் குரல் கிடையாது. அந்தக் குரலில் அசாத்தியமான ஒரு ‘பேஸ்’ இருக்கும். அது வெண்கல மணியைப் போல் ஒலிக்கும். ஸ்ருதி சுத்தம், தாள சுத்தம் கச்சிதமாக இருக்கும். பிசிறே இருக்காது. கம்பீரமான குரலில் இனிமையையும் நளினத்தையும் கொண்டுவருவது, அவரின் தனிச் சிறப்பு.

கேட்கும்போது மிகவும் சாதாரணமாக ஒலிப்பதுபோல் இருந்தாலும், அந்தக் குரலைப் பிரதிபலிப்பது நடக்காத விஷயம். ஒரு பாடலை அரங்கேற்றுவதற்கு முன்பாக 100 முறையாவது அதைப் பாடிப் பார்த்துவிடுவார்.

விநோதக் கலவை

தன்னம்பிக்கை, தன்னடக்கம், உறுதி, பொறுமை இப்படிப் பல்வேறு சிறந்த குணாம்சங்களுடன் கூடிய ஒரு பெண்ணைக் கற்பனை செய்து பார்த்திருக்கலாம். நிஜத்தில் அந்தக் கற்பனைக்கு உயிர் கொடுக்கும் உருவமாக, நம் முன் இருந்தவர் பட்டம்மாள். அன்பின் வடிவம் என்றால் அவர்தான்.

மிகவும் அரிதானதொரு சேர்மானம் அவர். பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருக்கும் அவர் மேடையில் அமர்ந்துவிட்டால், ‘இவரா இப்படிப் பாடுகிறார்’ எனத் தோன்றும் அளவுக்கு அவருடைய சாரீரம் வெளிப்படும். அவருக்கு இருந்த பாடாந்தர பலத்தால் பாடல்களை எழுதிவைத்து அவர் பாடியதே இல்லை.

புகழால் கனக்காத தலை

சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவரையும் அப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கும் ஒரு ரசிகரையும் ஒருங்கே மதிக்கும் பண்பை வேறு யாரிடமும் பார்க்க முடியாது. புகழைத் தலையில் அவர் ஏற்றிக்கொள்ளவில்லை என்பதே இதற்கு அர்த்தம். அவருடன் ஒரு நாள் பழகினாலே, பல நாட்கள் அவருடன் இருந்தது போன்ற பாசத்தை வெளிப்படுத்திவிடுவார். நேர்மறையான சிந்தனை கொண்டவர்.

வீட்டுப் பற்றோடு நாட்டுப் பற்று

80 ஆண்டுகளுக்கு முன்பு ஆசாரமான குடும்பப் பின்னணியில் இருந்து, மேடையில் ஏறி கச்சேரி செய்வது கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாதது. அதோடு தனது கச்சேரிகளில் சுதந்திர வேட்கையைத் தொடர்ந்து வெளிப்படுத்தியவர் அவர். பிரிட்டிஷ் அரசு, பல இடங்களில் அவரைக் கைதுசெய்யவும் முயன்றது. தேச பக்தி அவரது ரத்தத்தில் ஊறிய ஒன்றாக இருந்தது. அவருடைய இயல்பான தோற்றத்தையும் அதேநேரம் தேசப் பக்தி பாடல்களை பாடும்போது உணர்ச்சிப் பிழம்பாக அவர் மாறுவதையும் இந்த நாடு கண்டிருக்கிறது.

மேடையில் தொழில் பக்தி

எந்த மொழியில் பாடுவதாக இருந்தாலும் அந்த மொழி நிபுணரிடம் பாடலின் அர்த்தத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டுதான் பாடுவார். உச்சரிப்பு அவ்வளவு சுத்தமாக இருக்கும். மேடையில் ஒரு பங்கமும் வராத அளவுக்கு நடந்துகொள்வார்.

அவ்வளவு தொழில் பக்தி. டெல்லியில் அவருடைய கச்சேரி ஒரு முறை நடந்துகொண்டிருந்தபோது, பூகம்பம் ஏற்பட்டிருக்கிறது. ரசிகர்கள், மேடையில் இருந்த கலைஞர்கள் எனப் பலரும் எழுந்து சென்றுவிட, 25 - 30 நொடிகள் நீடித்த அந்தப் பூகம்பத்திலும் அவர் மேடையில் பாடிக்கொண்டுதான் இருந்தார்.

pongal-malarjpg‘இந்து தமிழ்' பொங்கல் மலர் 2019-ல் இன்னும் பல சுவாரசியமான கட்டுரைகளை விரிவாக வாசிக்கலாம். விலை ரூ.120/-right

தனது கச்சேரி, தனது மரியாதை எதையும் விட்டுக் கொடுக்காமல் வீட்டை நிர்வகித்த, தன்னைச் சேர்ந்தவர்களையும் உயர்த்திய பெண்மணி அவர்.

வேரும் விழுதும்

யாரையும் உதாசீனப்படுத்தவே மாட்டார்.  யார் வந்தாலும் உணவு கொடுத்து உபசரிப்பார். என் அம்மா லலிதா சிவக்குமார், நான், என் சகோதரி மகள் லாவண்யா, பாட்டிம்மாவுடன் இணைந்து ஒரே மேடையில் ஒரு கச்சேரி செய்தோம்.

என் அப்பாதான் அந்தக் கச்சேரியில் மிருதங்கம் வாசித்தார். நான்கு தலைமுறைகள் ஒரே மேடையில் நிகழ்த்திய அரிய கச்சேரி அது. ரசிகர்களுக்கு மட்டுமல்ல; எனக்கே அது மறக்க முடியாத இனிய அனுபவம். எங்களின் கலைக்கு ஆலமரமாக நின்றவர் பட்டம்மாள். அவரின் நினைவைத் தாங்கி நிற்கும் விழுதுகளாய் எங்களைக் கருதுகிறோம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in