Published : 29 Oct 2018 11:39 am

Updated : 05 Jan 2019 17:51 pm

 

Published : 29 Oct 2018 11:39 AM
Last Updated : 05 Jan 2019 05:51 PM

பாதையற்ற நிலம் 18: எதிர்ச் செயல்பாட்டுக் கவிதைகள்

18

உலக அளவில் தொடக்ககால நவீனக் கவிதை தனிமனித வெளிப்பாடு சார்ந்தே இருந்தது. கவிஞர்களின் தனித்துவமான மனமும் சமூக மனமும் விலகிக்கொள்ளும் புள்ளியிருந்துதான் கவிதைகள் முளைத்து எழுந்தன. தமிழின் தொடக்க கால நவீன கவிதைகளிலும் இந்த அம்சத்தைப் பார்க்க முடியும். உலகமயமாக்கல், முறையற்ற பொருளாதார வளர்ச்சி போன்ற 21-ம் நூற்றாண்டின் சிக்கல்களால் கவிஞர்களின் தனி மனம் மேலும் சிக்கலுக்குள்ளானது. இது கவிதையிலும் பாதிப்பை விளைவித்தது. அதிலும் பெண் மனம் மேலும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டது. இந்தப் புள்ளியில் இருந்து கவிதைகள் எழுத வந்தவர் கவிஞர் லீனா மணிமேகலை.

இந்தியா உலகமயமாக்கலுக்குள் நுழைந்த முதல் பத்தாண்டுக்குள் கவிதை உலகுக்குள் நுழைந்தார் லீனா. பொருளாதார நலன்களை முன்வைத்து இந்திய வாழ்க்கையின் புதிய பயணம் அப்போது தொடங்கியது. அதுபோல் நம் வீட்டுக்குள் ஆச்சாரமான குடும்ப அமைப்பின் விழுமியங்கள் இற்று உதிரத் தொடங்கின.


இந்த இரண்டாலும் லீனா பாதிக்கப்பட்டுள்ளார். பரபரப்பான ‘டிராஃபிக்கின் காத்திருப்புகளில்’ என நவீன வாழ்க்கையைச் சித்திரிக்கும் லீனாவின் இந்த வரி, அதனுடன் ஒன்றிப்போக முடியாத மன அவஸ்தையைச் சொல்கிறது. பிறர் மீதான அவநம்பிக்கையின் வெளிப்பாடாகவும் அவர் கவிதையில் வெளிப்படும் தன்னுடனான நேசிப்பைப் புரிந்துகொள்ளலாம். ‘தலைகளை மிதித்துக்கொண்டே/ எடுத்துவைக்கிறேன் அடுத்த அடிகளை’ என்ற அவரது வரிகள் குடும்ப அமைப்பின் மீதான விமர்சனங்களை முன்வைக்கின்றன. லீனாவின் தொடக்க காலக் கவிதைகள் இந்த இரு பின்புலங்களில் இயங்கின.

குடும்ப உறவின் துயரம்

இந்த முரண்களின் அடிப்படையில்தான் லீனாவின் கவிதைகள் மனித உறவுகளை மதிப்பிடுகின்றன. சமூகச் சிக்கல்களால் ஊறுபடத்தக்கதாக இருக்கும் ஆண்-பெண் உறவை லீனாவின் கவிதைகள், திரும்பத் திரும்பப் பதிவுசெய்கின்றன. அதன் இடுக்குகளுக்குள்ளிருந்து கசியும் அன்பின் சுகந்தமும் லீனாவின் கவிதைகளில் வியாபித்திருக்கிறது. பொருளாதாரத் தேவைகளுக்காகக் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கும்போகும் இன்றைய காலகட்டத்தில் ஒரு தம்பதியரை உதாரணமாகக் கொண்டு லீனாவின் கவிதைகள் இந்தக் காலகட்டத்தின் குடும்ப உறவின் துயரத்தை வேதனையுடன் சொல்கின்றன.

அவரது அடுத்தடுத்த தொகுப்புகளில் லீனா, தனிமனித வெளிப்பாட்டுக் கவிதைகளிலிருந்து விலகி வருகிறார். அவரது கவிதைகள் பெண்ணுடலை நோக்கி உள்ளே குவிகின்றன. பெண் எனும் பிறவியை ஆராதிக்கும் இந்தக் கவிதைகள் மொழியளவிலும் இறுக்கமும் கவித்துவமும் பெறுகின்றன. முதல் தொகுப்பு, பெண்ணுடல், அதன் இயல்பால் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் முக்கியத்துவம் மிக்கதாக ஆகிறது. உலக அளவில் முன்னெடுக்கப்பட்ட உடல் அரசியல் கவிதைப் போக்குடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியவை இவை. பல்லாண்டுக் காலமாக அமிழ்த்திவைக்கப்பட்ட ஒரு இனத்தின் புரட்சி என்றும் இந்தக் கவிதைகளை வரையறுக்கலாம்.

நிலா தேய்ந்து வளர்வதற்கும் பெண்ணுடலுக்குமான உறவை லீனாவின் வரிகள் கவித்துவம் ஆக்குகின்றன. அந்த நிகழ்வுக்கு ‘தூம கிரஹணம்’ என்று பெயரிடுகிறார் லீனா. இந்தக் கவிதைகள் பெண்ணின் எந்தெந்த இயல்புகள், உடல் உறுப்புகள் பண்பாட்டின் பெயரால் விலக்கிவைக்கப் படுகின்றனவோ அவற்றைக் கொண்டாடுகின்றன. ஒரு பொதுச் செயல்பாட்டுக்கு எதிர்ச் செயல்பாடு என்ற விதத்தில் இவற்றை லீனா உருவாக்கியுள்ளார்.

அரசியல் பேசும் கவிதைகள்

லீனா தனது அடுத்த தொகுப்பில் இன்னும் புதிய வடிவத்துக்கு நகர்ந்திருக்கிறார். அதுவரை தான் கைக்கொண்ட கவிதைக்கான வெளிப்பாட்டு மொழியையும்கூட மாற்றியிருக்கிறார். ஒரு காலனிய நாட்டின் பிரஜை என்ற நிலையிலும் லீனா தன் கவிதைச் செயல்பாட்டைத் தொடங்கினார். இந்தக் கவிதைகள் பெண் நிலை என்பதுடன், தீவிரமான உலக அரசியலையும் பேசின. இந்தத் தொகுப்பில் அவர் தன் கவிதையை ஒரு நிகழ்த்துதலாக மாற்றிக்கொண்டுவிட்டார்.

உலக அளவில் சிறுகதைகளில் நிகழ்ந்த மாற்றத்துக்கு எதிரானது இது. அவை உரையாடல்களிலிருந்து விவரிப்பு மொழிக்குப் பெயர்ந்ததைப் போல், கவிதை உரையாடலுக்கு நகர்ந்துள்ளது.

ஒருவிதத்தில் பார்த்தால் லீனாவின் இந்தக் கவிதைகள் அதன் காலத்தைப் பிரதிபலிப்பவை எனலாம். இந்தக் கவிதைகளில் இலங்கைப் போர் திரும்பத் திரும்பச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்முறைக்குப் பின் கொல்லப்பட்ட புலிகளின் தொகுப்பாளர் இசைப்பிரியா, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன், கொரிய இயக்குநர் கிம் கி டுக், பிரெஞ்சு இயக்குநர் காதரீன் பிரேயிலி எனப் பலரும் இந்தக் கவிதைக்குள் வருகிறார்கள். துயரமும் அவல நகைச்சுவையுமாக இந்தக் கவிதைகள்

உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளன. இதன் மூலம் ஒவ்வொரு தொகுப்பிலும் புதிய பொருளையும் மொழியையும் லீனாவின் கவிதைகள் சுவீகரித்துக்கொண்டுள்ளன எனலாம்.

அவரது சமீபத்திய தொகுப்பான ‘சிச்சிலி’ நூறு காதல் கவிதைகளின் தொகுப்பு. ஆங்கில/மலையாளக் கவி கமலா தாஸுடன் ஒப்பிடத்தக்க கவிதைகளை இந்தத் தொகுப்பு கொண்டுள்ளது. பரபரப்பான வாழ்க்கையால் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்ட காதலைப் பிரயாசையுடன் லீனா இந்தக் கவிதைகளுக்குள் சித்தரிக்கிறார். ஆனால், இந்தக் காதல் கவிதைகளும் ஒரு எதிர்ச் செயல்பாடுதான். காதல் மீது ஏற்றப்பட்டுள்ள நூற்றாண்டுகள் பழமையான புனிதத்துவத்தைச் சிதறடிக்கிறார் லீனா.

லீனா மணிமேகலையின் கவிதைகள், நவீனத்தைப் பேச விரும்புபவை. மொழியிலும் பொருளிலும் அவை நரையேறிய பழமைவாதத்துக்கு எதிராகப் பேசுபவை. தனி மனுஷி, பெண் என்ற நிலைகளிலும் லீனாவின் கவிதைகள் இந்தச் செயல்பாட்டில் உரத்து நிற்பவை. இவற்றிலிருந்து அவரது கவிதைகளை எதிர்ச் செயல்பாடு என வரையறுக்கலாம்.
 

அபராதம்

இறுதியில்

காவல் அதிகாரி

என் கவிதையைப் பிடித்துக் கொண்டு சென்றார்

விசாரணையின் போது அவர்

கண்களைக் கட்டிக் கொண்டிருந்தார்

ஆடையில்லாத என் கவிதையைக் காண

அவருக்கு அச்சமாக இருந்ததாம்.

குற்றங்கள் விளைவிப்பதே

தன் தலையாயப் பணி என்பதை

என் கவிதை ஒத்துக் கொண்டதால்

அபராதம் அல்லது சிறைத்தண்டனை,

பிணை இல்லையென்று ஆணையிட்ட நீதிபதி

தன் கண்களோடு காதுகளையும் பொத்திக் கொண்டிருந்தார்

என் கவிதை பேசிய சொற்களின் புதிய அர்த்தங்கள்

அவரை திடுக்கிடச் செய்தனவாம்

அபராதம் கட்டப் பணம் இல்லாததால்

சிறையிலடைக்கப்பட்ட என் கவிதை

கம்பிகளை மீட்டிக்கொண்டு

சதா பாடல்களை இசைத்தபடியிருந்தது

நாளடைவில் மற்ற கைதிகளும்

ஆடைகளை களைந்தனர்

அவர்கள் பேசத் தொடங்கிய புதிய மொழியால்

அதிகாரிகள் மனம் பிறழ்ந்தனர்

சிறைச்சாலைக்குப் பிடித்த பைத்தியம்

மெல்ல நகரமெங்கும் பரவியது

நிர்வாணம் பெற்ற அந்த நகரத்தில்

அதன்பிறகு

அரசும் இல்லை

குடும்பமும் இல்லை

கலாசாரமும் இல்லை

நாணயங்களும் இல்லை

விற்பனையும் இல்லை

குற்றமும் இல்லை

தண்டனையும் இல்லை


 

லீனா மணிமேகலை, உலக அளவில் கவனம் பெற்ற ஆவணப்பட இயக்குநர். ‘செங்கடல்’ என்னும் முழுநீளப் படத்தையும் இயக்கியுள்ளார். பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார். ஒற்றையிலையென (கிழக்குப் பதிப்பகம்), சிச்சிலி (நற்றினைப் பதிப்பகம்) உலகின் அழகிய முதல் பெண், பரத்தையருள் ராணி, அந்தரக்கன்னி (கனவுப்பட்டறை) ஆகிய தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் மலையாளம், இந்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.


(பாதைகள் நீளும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.inSign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x