

உச்ச நீதிமன்றம்தான் பல்வேறு விஷயங்களில் நடக்கும் சட்டப் போராட்டங்களின் இறுதி முடிவைத் தரும் அமைப்பு. ஷயரா பானு என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், ‘ஒரேமுறை ‘தலாக் தலாக் தலாக்’ என்று முஸ்லிம் கணவர் தன் மனைவியிடம் தெரிவித்தால் அத்துடன் அவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வரும் வழக்கமான இஸ்லாமிய நடைமுறை பெண்களின் அரசியல் சாசன அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது’ என்று 2017-ல் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் இதற்கான சட்டம் உருவாக்கப்பட்டு, பாதிக்கப்படும் இஸ்லாமியப் பெண்களின் உரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இத்தீர்ப்புக்கு முன்னர், இவ்வழக்கில் ஒரு எதிர் மனுதாரரான ஏ.ஐ.எம்.பி.எல்.பி. என்ற ‘அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்’ அமைப்பு, ‘இஸ்லாமிய மத தனிநபர் சட்டத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடுவது மத நம்பிக்கைகளைப் பாதுகாக்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது’ எனவும், நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்குத் தாங்களே ‘முத்தலாக்’ நடைமுறையைப் பின்பற்ற வேண்டாம் என்று அறிவுறுத்துவதாகவும் தெரிவித்தது.
ஆனால், இதற்குப் பின்னரும் நூற்றுக் கணக்கான இஸ்லாமியப் பெண்கள் நொடியில் தமது திருமண வாழ்க்கையை இழப்பதும் அடிப்படை வாழ்வாதாரத்தைத் தொலைப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீண்டும் மனுதாரர் உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார்.
அந்தத் தருணத்தில்தான் இதற்கான சட்டம் இயற்றுமாறும் இத்தகைய பாதிப்புகளிலிருந்து இஸ்லாமியப் பெண்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் 2017 ஆகஸ்டு மாதம் தன் தீர்ப்பில் தெரிவித்தது. எனவே, டிசம்பர் 2017-ல் மத்திய அரசு ஒரு சட்ட மசோதாவை - இஸ்லாமியப் பெண்கள் பாதுகாப்பு மசோதாவை முன்மொழிந்தது. அந்த மசோதா திரும்பப் பெற்றுக்கொள்ளப்படவிருக்கிறது.
புதிய சட்ட வரைவு
டிசம்பர் 17, 2018-ல் முத்தலாக் என்னும் தலாக்-இ-பித்தத் என்று சொல்லக்கூடிய நடைமுறையைச் சட்டப்படி செல்லத்தக்க தல்ல என்றும் சட்டத்துக்கு முரணானது என்றும் அவ்வாறு முத்தலாக் செய்யும் நபர்கள் பிணையில் விடமுடியாத, கைது செய்யப்படக்கூடிய குற்றம் புரிந்தவர்கள் ஆவர் என்றும் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை வழங்கக்கூடிய குற்றம் என்றும் புதிய சட்ட வரைவை முன்வைத்துள்ளது.
அவ்வாறு தலாக் மூலம் உடனடியாகத் திருமண வாழ்க்கையை இழந்தவர்களுக்கு அடிப்படை வாழ்வாதார நிவாரணம் தரப்பட வேண்டும், அந்தத் திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகளைப் பெண்ணின் பாதுகாப்பில் வைத்திருக்க அந்தப் பெண்ணுக்கு உரிமை உள்ளது என்பது போன்ற அம்சங்கள் அதில் உள்ளன.
வாய்மொழியாகவோ எழுத்துப்பூர்வ மாகவோ மின்னணு வடிவிலாகவோ எந்த வடிவில் சொல்வதையும் தலாக் சொல்வதாகவே கருத வேண்டும் என்ற விளக்கமும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் நோக்கம் ஒருபுறம் இருக்க, அதனுடைய உட்பொருளும் விளை வும் மறுபுறம் உள்ளன. ஒரு விஷயத்தை யார் சொன்னாலும் அதன் நோக்கமும் பொருளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்தானே?
மசோதாவின் கரிசனம்?
இஸ்லாமியப் பெண்களைச் சக மனிதராகக் கருதாமல், அவர்களுக்குப் பேச வாய்ப்பளிக்காமல் கணவன் வாயிலிருந்து வரும் மூன்று வார்த்தைகளால் திருமணம் நிறைவுற்று, விவாகரத்து தரப்படுவது ஏற்றுக்கொள்ள இயலாதது. இந்த விவாகரத்து நடைமுறை இல்லாத பிற மதத்தைச் சேர்ந்த பெண்கள் அவர்கள் எவ்வளவுதான் ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தாலும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஒரு பெண் அல்லது ஆண் தானே விரும்பி மனமுவந்து ஏற்பதாக இல்லாமல் பிறப்பால், பெற்றோரால் கையளிக்கப்படும் மதம் ஒரு பெண்ணின் வாழ்வை மதத்தின் பெயரால் நிலைகுலையச் செய்வதற்கு அதிகாரம் இல்லை. இது பெண்ணுரிமைப் பார்வையில் பார்க்கப்பட வேண்டிய விஷயம்.
தலாக் மூலம் விவாகரத்து தரப்பட்டு பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்குப் பொருளாதார நிவாரணமும் குழந்தைகளின் பாதுகாவலும் (கஸ்டடி) தரப்பட வேண்டும் என்பதும் நியாயமானதே. ஆனால், தங்கள் மதச் சட்டம் தரும் விவாகரத்து உரிமையைப் பயன்படுத்தினால், “நீ குற்றவாளி. உன்னைக் கைதுசெய்யலாம்” என்பதாக இந்த மசோதா காட்டும் அதீத கரிசனம்தான் மசோதாவின் நோக்கத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
பிற மதத்தவர் செய்தால் குற்றமில்லையா?
முத்தலாக் என்று சொல்லி, பெண்ணின் திருமண வாழ்வை நொடியில் முடித்துவிடுவது கிரிமினல் குற்றம் என்றால், விவாகரத்து செய்யாமலேயே ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்துவிட்டுச் செல்லும் இந்து, கிறிஸ்தவ, பார்சி கணவன்மார்களும் குற்றவாளிகள்தானே? ஒரு மனிதனைக் கைதுசெய்யும் அதிகாரம் என்பது குற்றவியல் சட்டப்படி கடுமையான குற்றச் செயல்களைச் செய்பவர்களுக்கு எதிராகப் பயன்படக்கூடியது.
ஆனால், விவாகரத்து, கைவிட்டுவிடுதல், விவாகரத்து வாங்காமல் பிரிந்து வாழ்தல் ஆகிய உரிமையியல் தவறுகளுக்குக் கைதுசெய்யும் சட்டம் இந்தியாவில் 89 சதவீதத்தினருக்கான தனிநபர் சட்டங்களில் இல்லாமல் 11 சதவீதத்தினரான இஸ்லாமியர்கள் பின்பற்றும் சட்டத்தில் மட்டும் மசோதா மூலம் மாற்றம் கொண்டுவருவது எதனால்?
சிறுபான்மை மதவெறுப்பு நல்லதல்ல
முத்தலாக் சொன்னால் கைது என்ற மசோதா, மதவெறுப்பு, காழ்ப்புணர்வு, ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மீது குற்றவாளி முத்திரை குத்துதல் போன்ற சிறுபான்மையினர் மீதான வெறுப்பையும் வன்முறையையும் வளர்ப்பதற்கான கருவிதானே? அதை மக்களும் உணர்ந்திருக்கிறார்கள் என்பதற்கான சாட்சிதான் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட முடியாமல் போனது.
கல்வி, பொருளாதாரம், சமூக அந்தஸ்து ஆகியவற்றில் மிகவும் பின்தங்கியுள்ள இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த நீதிபதி சச்சார் முன்மொழிந்த பரிந்துரைகளை இம்மியளவும் மத்திய அரசு கருத்தில்கொள்ளவில்லை என்பதையும் இந்த மசோதா உணர்த்துகிறது. சிறுபான்மையினர் மீது வெறுப்பையும் வன்மத்தையும் செயல்படுத்தினால் என்ன நடக்கும் என்பதை மத்தியில் ஆளும் கட்சியின் செயல்பாடுகளுக்கு மக்களிடம் இருந்து வெளிப்படும் ஒன்றுபட்ட எதிர்வினைகளே சாட்சி.
இந்தியாவின் நெடிய ஜனநாயக விழுமியங்கள் மீது மக்கள் இன்னும் நம்பிக்கை வைத்திருப்பதன் வெளிப்பாடுதான் மக்களின் எதிர்ப்புகளும் போராட்டங்களும். சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பை உண்டாக்கும் பாசிசக் கண்ணோட்டம் ஓட்டு வங்கிக்கு நல்லதல்ல என்பதை மக்களின் எதிர்வினைகள் வழியாகப் பிற அரசியல் கட்சிகள் உணர்ந்து கொண்டிருக்கின்றன.
அதனால்தான் அவை மத்தியில் ஆளும் கட்சியைப் போல் பாசிசச் செயல்பாடுகளை நேரடியாகச் செயல்படுத்தத் தயங்குகின்றன. ஜனநாயக விழுமியங்களைக் கைவிட்டுவிட்டால் மக்கள் தங்களைக் கைவிட்டுவிடுவார்கள் என்பதைப் புரிந்து நடந்துகொள்வது எதிர்க்கட்சிகளுக்குக் காலத்தின் கட்டாயம். ஆனால், அது ஆறுதலான விஷயமும்கூட!
- ப.சு.அஜிதா
கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com