Published : 20 Jan 2019 10:18 am

Updated : 20 Jan 2019 10:18 am

 

Published : 20 Jan 2019 10:18 AM
Last Updated : 20 Jan 2019 10:18 AM

பாதையற்ற நிலம் 22: பெண் எனும் தன்னிலையின் கவிதைகள்

22

தமிழ்க் கவிதைகளில் பெண் உலகு பலவிதமாகச் சொல்லப்பட்டுள்ளது. தொண்ணூறுகளுக்குப் பிறகு அவர்களது பிரச்சினைகள் கவிதைகளில் திடமாகத் தொழிற்பட்டன. ஆனால், அவை பெண்ணினத்தைப் பொதுவில்கொண்டு ரெளத்திரமாகப் பாடப்பட்டவை. இதற்கு அப்பாற்பட்டு பெண் என்ற தன்னிலையில் நின்று இந்தப் பிரச்சினைகளைக் கவிதைக்குள் சொன்னவர்கள் சிலரே. அப்படியான விசேஷமிக்க கவிஞர்களுள் ஒருவர் அ.வெண்ணிலா.

வெண்ணிலாவின் கவிதைகள், சமூ கத்தைப் பெண் என்ற தன்னிலையில் நின்று எதிர்கொள்பவை. இந்தத் தன்னிலையால் பெண் அடையும் சிக்கல்களுக்குத் தன்னையே உதாரணமாக ஆக்குகின்றன இந்தக் கவிதைகள். இதனால் நூற்றாண்டுகளாகத் தொடரும் சமூகச் சிக்கலின் தீவிரத்தை வாசகரால் நெருக்கத்துடன் உணரும் சாத்தியத்தை இந்தக் கவிதைகள் உருவாக்குகின்றன. பெண் என்ற அடையாளத்தால் எழும் முரண்களைச் சொல்லும்போது கவிதைகள் தன்னையே முன்னிறுத்துவதால் பொதுப்படையாகப் பெண் பிரச்சினைகளைச் சொல்லும்போது எழும் ஓர் உரத்த த்வனி வெண்ணிலாவின் கவிதைகளுக்கு இல்லை.


வாழ்வின் ஒரு துண்டு

பெண் என்ற தன்னிலையில் வெண்ணிலாவின் கவிதைகள் முன்னிறுத்துவது பல விதமான பெண்களின் ஒரு துண்டு வாழ்க்கையை. அவர்கள் அனைவரும் எளிய நம்பிக்கையுடன் வாழ்பவர்கள். அவர்கள் இந்த அடையாளச் சிக்கலுக்கு எதிராகப் புரட்சிசெய்பவர்களும் அல்ல. தங்கள் அன்றாடத்துக்குள் நடக்கும் இந்தப் பிரச்சினையைப் பகிர்கிறார்கள். இந்தத் த்வனிதான் வெண்ணிலாவின் கவிதையின் பலம். உதாரணமாக வீடு திரும்பும் ஒரு பெண்ணின் மன அவஸ்தையை ஒரு கவிதையில் சொல்லியிருக்கிறார்.

அவள் அன்றாடம் வீடு திரும்பிக் கொண்டிருப்பவள்போல. களைத்துச் சலித்து வீடு திரும்புகிறாள். இதில் ‘சலித்து’ என்ற சொல் கவிதை சந்தத்துக்கானது அல்ல. வேலையிலிருந்து வீடு திரும்பும் பெண்களின் விடுபட முடியாத அயற்சியைச் சொல்கிறது கவிதை. ‘ஆடை மாற்றுகையில்/ கழன்று விழுகின்றன/ உடல் முழுவதும் பதிந்திருந்த/பார்வைகள்/ தீண்டல்கள்/தொடுதல்கள்/உரசல்கள்’ என்கிறது கவிதை. ஆனால், அவை எல்லாம் உதிரவில்லை; இரவு தன் கைகளில் வைத்துள்ளதாகக் கவிதையை முடிக்கிறார் வெண்ணிலா.

பெண்களின் அவஸ்தை

தாய்ப்பால் கொடுத்துவரும் ஒரு பெண் னின் மன அவஸ்தை வெண்ணிலாவின் இன்னொரு கவிதையில் வெளிப்படுகிறது. உடலின் செயற்கை வாசத்தைத் தாண்டி, தாய்ப்பாலின் வாசம் இறங்குகிறது என்கிறது கவிதை. கவிதை தாய்ப்பாலின் வாசத்தைத் தாயின் வாசம் என்கிறது. இந்தக் கவிதை அலுவலகம் சென்று திரும்பும் ஒரு பெண்ணைச் சாரமாகக் கொண்டது. இப்படி உதிரியான பெண்களின் அவஸ்தைகளைப் பதமாக எடுத்து நம் சமூக நிலையைத் துலக்கிக் காட்டுபவை வெண்ணிலாவின் கவிதைகள்.

வெண்ணிலாவின் கவிதைகள் எளிமை யும் கவித்துவமும் ஒருங்கே பெற்றவை. ஏற்றப்பட்ட சம்பவத்தைச் சாரமாக எடுத்துக் கட்டப்படுபவை. அதனால், அதற்கேயான எளிமை வெண்ணிலாவின் கவிதைகளுக்கு உண்டு. வெண்ணிலாவின் கவிதைகள் பெரும்பாலும் உவமைப் பொருள் அற்றவை. இந்தப் பண்புகளால் அலங்காரங்களைக் களைந்த நவீனமான கவிதை என அவற்றைச் சொல்லலாம். ‘ஓய்வே பொழுதாய் மலரும்/மாயக்கிழவி ஒருத்தி/தன் சேமிப்புகளின்/சிமிழ் திறந்து பார்ப்பதைப் போல்/ உறக்கம்/தன் கனவு வெளியைத்/திறக்கிறது’ என்பது போன்ற பிற்காலத்திய கவிதைகள் மொழியளவில் செறிவடைந்ததற்கான உதாரணம்.

‘பெரிய மனுஷி’யான சிறுமி

வெண்ணிலா, கவிதைக்கு இணை யாகச் சிறுகதை இலக்கியத்தில் செயல்பட்டுவருபவர். அவரது கவிதைகளுக்கும் சிறுகதைத் தன்மை உண்டு. அவரது சிறுகதைகளையும் கவிதைகளின் தொடர்ச்சி எனலாம். ஒரு சிறு பெண்ணைச் சாரமாக எடுத்து நம் சமூகத்தின் பிரச்சினைகளை ஒரு கதையில் சொல்லியிருப்பார். கதையின் தலைப்பு ‘பட்டுப் பூச்சிகளைத் தொலைத்த ஒரு பொழுதில்’.

‘பெரிய மனுஷி’ ஆகிவிட்ட அந்தச் சிறுமி, தனக்கு வரும் மாதச் சுழற்சியை எதிர்கொள்ள பட்ட பாடுதான் மையம். ‘தேதி மாறாமல்/ திட்டமிட்டதைப் போல்/மாதா மாதம்/நிகழ்கிறது/எனக்கான சுழற்சி என்றாலும்/நிகழும் முதல் கணம்/விபத்தொன்றை/சந்தித்ததுபோல்/அதிர்கிறது மனசு’ என்ற கவிதையையும் வெண்ணிலா எழுதியிருக்கிறார். துள்ளி ஆடிக்கொண்டிருந்த அவள் ஒருநாள் ‘பெரிய மனுஷி’ ஆகிவிடுகிறாள். மாதா மாதம் சுழற்சி முறை வருகிறது. அதற்காக நாப்கின் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

அதைவிட முக்கியமாக அதை யாரும் காணாதபடி அப்புறப்படுத்த வேண்டியிருக்கிறது. அந்தச் சிறுமி, கழிவறைக் கோப்பைக்குள் நாப்கின்களைப் போட்டு தண்ணீர் ஊற்றி அமிழ்த்திவிடுகிறாள். இது தொடர்கிறது. ஒருநாள் கழிவறை அடைத்துக்கொள்கிறது. அடைப்பகற்றத் தொழிலாளர்கள் வருகிறார்கள். நாப்கின் கழிவு மலையளவு குவிகிறது. இன்னொரு கதை பெண்கள் தண்ணீருக்காகப் படும்பாட்டைச் சொல்கிறது. ஒரு குடும்பப் பெண் தன் வீட்டுக்குள்ளே தண்ணீர் வரப்போவதைக் கொண்டாட்டம் ஆக்குவதைச் சித்தரிக்கிறது.

சிறுகதை, கவிதை இருவடிவத்திலும் வெண்ணிலாவின் கவிதைகள் சித்தரிப்பது வெளிப்படையான வறட்டுப் புரட்சியை அல்ல. குடும்ப அமைப்புக்குள் இருக்கும் எளிய பெண்களின் உலகைத்தான். இந்த உலகைத் திட்டமாகச் சித்தரிப்பதன் வழி அவை புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கத் தன்னளவில் விரும்புகின்றன.

சுக இருப்புக்காக

கால் மேல் உள்ள காலைக் கண்களால்

நெருடிப்போகாத

பார்வையைச் சந்தித்தவுடன்

சரியாய் இருக்கும்

முந்தானையைக்கூட

இழுத்துவிட்டுக்கொள்ளவைக்காத

குழந்தைக்குப் பாலூட்டும்

வினாடிகளில்...

தரைபிளந்து உள் நுழையும்

அரைப்பார்வை வீசாத

காற்றில் ஆடை விலகும்

நேரங்களில்

கைக்குட்டை எடுத்து

முகம் துடைத்துக்கொள்ளாத

ஆண்களுக்கு

நண்பர்கள் என்று பெயர்.


(பாதைகள் நீளும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x