காந்தி கண்ட கனவு

காந்தி கண்ட கனவு
Updated on
1 min read

ஜனவரி 30: மகாத்மா காந்தி நினைவுநாள்

பெண்களின் அரசியல் பங்கேற்பைப் பிரம்மாண்ட அளவில் நிகழ்த்திக்காட்டியவர் காந்தி. அவரின் பின்னால் லட்சக்கணக்கான பெண்கள் அணிவகுத்துப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றது வரலாறு. பெண்ணுரிமைக்காகவும் பெண் முன்னேற்றத்துக்காகவும் பேசிவந்தவர் காந்தி. பெண்கள் குறித்து காந்தி பேசியவற்றில் சில:

“மனைவி என்பவள் கணவனுக்குப் பொம்மையாக இருக்கக் கூடாது. கணவன்மார்கள் தங்களுடைய மனைவியை எல்லாச் சூழ்நிலைகளிலும் உற்ற தோழமையாக நடத்த வேண்டும். பெண் குறித்து சமுதாயத்தில் நிலவும் பிற்போக்கான கருத்துகள் மோசமானவை. இந்நிலை முற்றிலுமாக மாற வேண்டும்.

சம உரிமை

இந்தச் சமூகத்தில் பின்பற்றப்படும் கலாச்சாரம், சட்ட திட்டங்கள் அனைத்தும் ஆண்களால் உருவாக்கப்பட்டவை. இதில் பெண்களுக்கான எந்தப் பங்களிப்பும் இல்லை. இதனால் அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். இந்தச் சமூகத்தை மாற்ற வேண்டும் என்றால் ஆண்களும் பெண்களும் இணைந்து செயல்பட வேண்டும். ஆண்களுக்குத் தாங்கள் அடிமையென்று பெண்கள் கருதக் கூடாது. ஆண், பெண் இருவருக்கும் சமமான உரிமைகள் இருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

சாதி ஒழிப்பே தீர்வு

வரதட்சிணை என்பது சாதிய அமைப்பு முறையின் அங்கம். சாதி ஒழிப்பே வரதட்சிணை ஒழிப்புக்கு இட்டுச்செல்லும். வரதட்சிணை கேட்கும் ஆண்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட வேண்டும். சாதி அமைப்பு முறையின் அங்கமாக உள்ள வரதட்சிணை முறையை ஒழிக்க சாதி மறுப்புத் திருமணங்கள் அதிக அளவில்  நடைபெற வேண்டும். 

பெண் கல்வி

பெண்களுக்குக் கல்வி வழங்கினாலே அவர்கள் விடுதலையை நோக்கிச் செல்வார்கள். பெண்களுக்கான கல்வி என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமல்லாமல் அவர்களுக்குத் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

நகமே ஆயுதம்

எதிர்பாராத சூழ்நிலையில் பெண்கள் தாக்கப்படும்போது அவர்கள் அகிம்சையைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கத் தேவையில்லை. அதுபோன்ற நேரத்தில் தன்னை எவ்வாறு தற்காத்துக்கொள்வது என்ற வழிமுறையைத்தான் பெண்கள் யோசிக்க வேண்டும். எதிராளியைத் தாக்கக் கையில் எதுவுமில்லை என்றாலும் தன் நகம், பற்களைக்கொண்டு முழு பலத்தைப் பிரயோகிக்க வேண்டும். தன்னுடைய முயற்சியில் அவர்கள் உயிரிழந்தாலும் போராட்டத்திலிருந்து விலகக் கூடாது.

சுய ஒழுக்கம்

இஸ்லாமியச் சமூகத்தில் மட்டுமல்லாமல் வட இந்தியாவில் உள்ள இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் பலரும் முகத்தை மூடிக்கொள்ளும் பர்தாவை அணிகிறார்கள். பர்தா என்ற சுவரால் கற்பு என்ற விஷயத்தைக் காக்க முடியாது. பெண்ணின் கற்பு குறித்து ஏன் இவ்வளவு பதற்றம்? ஆண்களின் கற்பு பற்றிப் பெண்கள் பேச முடியுமா அல்லது தலையிட முடியுமா? பெண்ணின் தூய்மையையோ ஆணின் தூய்மையையோ வெளியிலிருந்து திணிக்க முடியாது. அதை ஒருவரின் சுய ஒழுக்கத் தூய்மைதான் தீர்மானிக்கும்”.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in