

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய வகை ஸ்மார்ட் போன் விளம்பரம் ஒன்று என்னை மிகுந்த தாக்கத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.
உயர்பதவியில் இருக்கும் மனைவி (boss ) குறிப்பிட்ட வேலையை இன்றே முடிக்கச்சொல்லி கணவனுக்குப் பொறுப்பு கொடுத்து விட்டு, சற்று நேரத்தில் வீட்டுக்குப்புறப் படுகிறாள். வீட்டுக்குப் போய் சமையலில் ஈடுபடுகிறாள்.
கணவனை அழைத்து, தான் செய்த சமையலைக்காட்டி சீக்கிரம் வீட்டுக்குத் திரும்புமாறு அழைக்கிறாள் . boss கிட்ட நீயே சொல்லு என்று கணவன் சொல்வதுடன் விளம்பரம் முடிகிறது.
மனைவியை நவ நாகரிக கன்ட்ரி -ஹெட் அளவுக்கு உயர்த்தி கணவனுக்கு வேலையைச் செய்ய உத்தரவிடுபவளாகக் காட்டி யிருப்பதெல்லாம் சரிதான்.
ஆனால் இவையெல்லாமே வெறும் மேல்பூச்சுதானோ என்று நினைக்கத் தூண்டுகின்றன அடுத்து நடக்கும் நிகழ்வுகள். அதே பெண்தான் வீட்டுக்குப் போய் கணவனுக்குப் பிடித்த உணவைச் சமைத்து வைத்து, வழிநோக்கும் மனைவியாக இருக்கிறாள்.
ஏன்? இதே விளம்பரத்தில் கன்ட்ரி -ஹெட் மனைவி களைத்து , வீட்டுக்கு வரும்போது மென்பொறியாளனான கணவன் தன் மனைவியிடம் சமையலை நான் செய்து முடித்துவிட்டேன், உனக்காகக் காத்திருக்கிறேன் என்று காதலுடன் பேசக்கூடாதா ?
மறைமுக ஆணாதிக்கச் சிந்தனைகளை மாற்றி யோசிக்கலாமே? எத்தனையோ அனுசரணையான கணவர்களும் இங்கே இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்திய மாதிரியும் இருக்குமல்லவா ?
- மெய்யப்பன் சாந்தா, மதுரை.