

நமது உணர்வுகள் அனைத்தும் ரத்தத்துடன் தொடர்பு கொண்டவையே. அதனால்தான் யாராவது ஏதாவது ஒரு தவறு செய்தால் உனக்கு நல்ல ரத்தமே ஓடலையா என்று சாதாரணமாகக் கேட்கிறோம். ரத்தம் சுத்தமாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். நமது உடம்பிலுள்ள திசுக்களுக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜனைக் கொண்டுபோய்ச் சேர்ப்பவை ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின்களே. இரும்புச் சத்தால் ஆன இவை, ரத்தத்தின் சிவப்பு அணுக்களில் அதிக அளவில் காணப்படும்.
இவை குறையும்போது உடம்புக்குத் தேவையான ஆக்ஸிஜனை ஒழுங்காகக் கொண்டுசேர்க்க முடியாது. உடம்பு சோர்வையும் களைப்பையும் உணரும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதை ரத்தசோகை என்கிறோம். இது ஒரு சத்துக் குறைபாடே. குறிப்பாகப் பெண்கள் இந்தக் குறைபாட்டால் அதிகப் பாதிப்படைகிறார்கள்.
இந்திய மக்கள்தொகையில் 80 சதவீதம் பேருக்கு ரத்தசோகை உள்ளது. இரும்பு சத்துக் குறைபாடால் உருவாகும் ரத்தசோகை தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் உருவாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக மும்பையில் நடந்த விழிப்புணர்வு விழாவில் நடிகை சமீரா ரெட்டி கலந்துகொண்டார்.
சமீரா ரெட்டி பேசும்போது, “ரத்தசோகையைப் பெண்கள் மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதனால் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். ரத்தசோகை என்னும் குறைபாட்டைத் துடைத்தெறிய இந்த ஆய்வு நல்லதொரு தொடக்கமாக இருக்கும்” என்றார்.
மக்களிடம் ரத்தசோகை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மும்பையில் லெட்ஸ் பீ வெல் ரெட் (Let's Be Well Red) என்னும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அமெரிக்க தேசிய உடல்நல மையம் இந்த ஆய்வை நடத்துகிறது. அமெரிக்க டியூக் பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள் இதில் கலந்துகொண்டு ஆய்வை நடத்துகிறார்கள். மார்ச் 2014 முதல் மே 2014 வரை இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது.
மும்பை குடிசைப் பகுதிகளில் உள்ள 18 முதல் 35 வயது வரையுள்ள பெண்களிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சோதிக்கப்பட உள்ளது. பெண்களுக்கு இரும்புச் சத்து அதிகம் உள்ள கட்டியை சாப்பிடக் கொடுத்து இந்தச் சோதனையை நடத்துகிறார்கள். ரத்தசோகையைக் களைய மேற்கொள்ளப்படும் முயற்சியில் இதுவும் ஒன்று.
ரத்தசோகையை விரட்ட
த்தசோகையைக் கட்டுக்குள் கொண்டுவருவது நம் கைகளில்தான் இருக்கிறது. சீரான உணவுப் பழக்கம் ரத்தசோகையைத் தவிர்க்கும். வைட்டமின் பி 12, வைட்டமின் சி, போலிக் அமிலம் போன்றவை நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் ஆகியவை நிறைந்த கீரை வகைகளைத் தினமும் சாப்பிடலாம்.
அரை கப் வேகவைத்த கீரையில் ஒரு பெண்ணின் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தில் 20 சதவீதம் இருக்கிறதாம். ரத்தசோகையைப் போக்குவதில் பீட்ரூட்டுக்கும் பெரும்பங்கு உண்டு. சமையலில் பீட்ரூட்டைச் சேர்த்துக் கொள்ள விரும்பாதவர்கள், பீட்ரூட்டைச் சாறு எடுத்து குடிக்கலாம். இல்லையெனில் கேரட், குடமிளகாய், தக்காளி ஆகியவற்றுடன் சேர்த்து சாலடாகவும் சாப்பிடலாம்.
தக்காளி, முட்டை, மாதுளை, சோயாபீன்ஸ் போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தானிய உணவுகள், பேரீச்சை, உலர்பழங்கள், தேன் ஆகியவற்றையும் தேவையான அளவு எடுத்துக்கொள்ளலாம்.