போகிற போக்கில்: காகிதத்தில் கலைவண்ணம்!

போகிற போக்கில்: காகிதத்தில் கலைவண்ணம்!
Updated on
2 min read

பிளாஸ்டிக் ஒழிப்புக்குத் தடை விதிக்கப்படுவதற்கு முன்பே இயற்கைக்கு ஊறுவிளைவிக்காத பாதையைத் தேர்ந்தெடுத்தவர் குணவதி. சிவகாசியைச் சேர்ந்த இவர், காகிதங்களில் பலவிதமான ஆபரணங்களைச் செய்து விற்பனை செய்துவருகிறார்.

பத்தாம் வகுப்பு முடித்ததுமே குணவதிக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டனர். மகிழ்ச்சியான குடும்பம், இரண்டு பெண் குழந்தைகள் என்று வாழ்க்கை எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்தது. ஆனால், தனித்து ஏதாவது சாதிக்க வேண்டும், கிராமப்புறத்தில் உள்ள பெண்களின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்ற ஆவல் குணவதிக்கு இருந்தது.

அதைக் கணவரிடமும் தாயிடமும் தெரிவித்தார். அவர்களது வழிகாட்டுதலால் காகிதங்களில் கலைப் பொருட்களையும் ஆபரணங்களையும் வடிக்கத் தொடங்கினார். பிறகு அதைத் தொழிலாக விரிவுபடுத்தினார். தற்போது எட்டுப் பெண்களைப் பணியமர்த்தியிருக்கிறார்.

நீர் உட்புகாத காகிதக் கலைப் பொருட்களுக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால் மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வார்னிஷ்ஷைப் பயன்படுத்துகிறார். வார்னிஷ் தேவைப்படுவோருக்குக் குறைந்த விலையில் விற்பனைசெய்கிறார். மாற்றுத் திறனாளிகளுக்கும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் கட்டணம் இல்லாமல் அவர்கள் இடத்துக்கே சென்று கைவினைக் கலையைக் கற்றுக்கொடுக்கிறார். இவரிடம் பயிற்சிபெற்ற பலர் சொந்தக்காலில் நிற்கின்றனர்.

பெண் முன்னேற்றத்துக்கு உதவி

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தன் வாழ்க்கை அனுபவத்தையும் தான் கடந்துவந்த பாதையையும் சொல்லி, தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் மிளிர்கிறார். கண்காட்சி ஒன்றில் இவரது கலைப் பொருட்களைப் பார்த்த தனியார் கல்லூரியின் தாளாளர், அப்துல் கலாம் உருவத்தைக் காகிதத்தில் செய்துதரச் சொன்னார். குணவதி அதைச் சவாலாக எடுத்துச் செய்யத் தொடங்கினார். பலநாள் உழைப்பைக் கோரிய அந்தப் படைப்பு அதன் தத்ரூபத்துகாகப் பலரது பாராட்டையும் பெற்றது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மலிவாகக் கிடைப்பதால் நம் ஊரில் செய்யப்படும் கைவினைப் பொருட்களை வாங்க மக்கள் தயக்கம்காட்டுவதாக குணவதி சொல்கிறார். பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் உருவாக வேண்டுமென்று துணிப்பை தயாரிக்கும் தொழிலிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.  “பெண்கள் எப்போதும் யாருக்காகவும் எதற்காகவும் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது” என்று சொல்லும் குணவதி, மாற்றுத்திறனாளி. அதை ஒருநாளும் தடையாக உணர்ந்ததில்லை என்று சொல்லிப் புன்னகைக்கிறார் குணவதி.

- மு.கிருத்திகா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in