

சமையலைத் தொழிலாகச் செய்து அதன்மூலம் கிடைக்கும் லாபத்தில் நலத்திட்ட உதவிகளைச் செய்து அசத்துகின்றனர் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள்.
சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் இயங்கிவரும் ஹுன்டாய் நிறுவனம் சார்பில், இருங்காட்டுக்கோட்டை, அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் ‘கனவு கிராமத் திட்ட’த்தின் மூலம் தேர்வுசெய்யப்பட்டன.
அந்தக் கிராமங்களில் வசிக்கும் பெண்களுக்குப் பல்வேறு வகையான திறன் வளர்க்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துதல், பள்ளி, அங்கன்வாடி, பொதுவிநியோகக்கடை உள்ளிட்ட அரசு அலுவலகங்களை மறுசீரமைக்கும் பணிகள் போன்றவை நடைபெறுகின்றன.
உயர்த்திய பயிற்சி
கனவு கிராமத் திட்டத்தின் கீழ் 2016-ல் வல்லக்கோட்டை கிராமம் தேர்வுசெய்யப்பட்டது. பல்வேறு நலத்திட்டப் பணிகள் அங்கு நடந்தன. கூலித் தொழிலில் ஈடுபட்டுவந்த 14 பெண்களுக்கு கேட்டரிங் பயிற்சி அளிக்கப்பட்டது. 13 பேருக்கு அப்பளம் தயாரிக்கும் பயிற்சியும் 84 பேருக்குத் தையல் பயிற்சியும் வழங்கப்பட்டன. பத்துப் பெண்களுக்கு அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்வகையில் கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டன.
கேட்டரிங் பயிற்சி முடித்த பெண்கள், தொழில் முனைவோர் பயிற்சி பெற்று ‘முருகன் கேட்டரிங் சர்வீஸ்’ என்ற பெயரில் குழுவாகச் சேர்ந்து தொழில் தொடங்கினர். உணவுத் தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழைப் பெற்ற இந்த மகளிர் குழுவினர், பொது நிகழ்ச்சிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் உணவு சமைத்து வழங்குகின்றனர்.
பல்வேறு தொழிற்சாலைகளுக்கு இனிப்பு, கார வகைகளை விநியோகிக்கின்றனர். இதில் கிடைக்கும் வருமானத்தைக் குழுவில் உள்ள அனைவரும் சமமாகப் பிரித்துக்கொள்கின்றனர்.
அங்கன்வாடிக்கு அன்பளிப்பு
தொடர்ச்சியான உழைப்பிலிருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வருடத்துக்கு இரண்டு முறை இவர்கள் இன்பச் சுற்றுலா செல்கின்றனர். சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா, பொங்கல் திருவிழா, மகளிர் தினவிழா போன்ற நாட்களில் பள்ளி மாணவர்கள், கிராமத்து இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசுகளையும் வழங்கிவருகின்றனர்.
வல்லக்கோட்டை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள எல்.இ.டி. தொலைக்காட்சிப் பெட்டியை இவர்கள் வழங்கியுள்ளனர். இதனால், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகள் பாடல்களையும் கதைகளையும் காட்சிவடிவில் கண்டு பயில்கின்றனர்.
“கூலித் தொழிலாளர்களாக இருந்த நாங்கள், தற்போது தனியாக கேட்டரிங் நிறுவனம் நடத்திவருகிறோம். இதன்மூலம் எங்களுக்குப் போதுமான வருமானம் கிடைக்கிறது. எங்கள் தேவை போக மீதியாகும் பணத்தில் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறோம். மேலும், அரசு சார்பாக எங்களுக்குத் தனியாகச் சமையல் செய்ய சமையல் கூடம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது” என்கிறார் முருகன் கேட்டரிங் நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான எல்லம்மாள்.