Last Updated : 31 Aug, 2014 12:00 AM

 

Published : 31 Aug 2014 12:00 AM
Last Updated : 31 Aug 2014 12:00 AM

பாட்டி தந்த பரிசு

தன் மகளின் முதல் பிறந்தநாளை மறக்க முடியாததாக மாற்ற என்ன பரிசு தரலாம் என்று யோசித்த நளினி ராமனுக்குக் கைவினைக் கலைதான் கைகொடுத்திருக்கிறது. கோயம்புத்தூர் சுந்தராபுரத்தைச் சேர்ந்த இவருக்குக் கைவினைக் கலைகள் மீது ஆர்வம் வருவதற்குக் காரணம் நளினினியின் பாட்டி தேவகி அம்மாள்.

தெருவை அடைத்து விதவிதமாகக் கோலம் போடுவதில் தொடங்கி வீட்டை அலங்கரிக்கும் கலைப்பொருட்கள் செய்வது வரை தேவகி அம்மாளின் ஒவ்வொரு செயலும் நேர்த்தியுடன் இருக்குமாம். சிறு வயது முதலே பாட்டியைப் பார்த்து வளர்ந்த நளினியின் மனதிலும் கைவினைக் கலை மீதான ஆர்வமும் சேர்ந்தே வளர்ந்திருக்கிறது.

ஆனால் அந்தக் கலையார்வம் திருமணத்துக்குப் பிறகு தன் கணவரின் ஊக்குவிப்பால் வெளிப்பட்டது என்கிறார் நளினி. ஒரு முறை தன் ஆடையின் நிறத்துக்கும் வடிவமைப்புக்கும் ஏற்ப அதில் சின்னச் சின்ன அலங்காரங்களைச் செய்து அணிந்திருக்கிறார் நளினி. அதைப் பார்த்தவர்கள் அனைவருமே பாராட்ட, ஆடைகளுக்கு மேட்சிங்கான ஃபேஷன் நகைகள் செய்ய முடிவெடுத்தார்.

தான் செய்த நகைகளை அணிந்துகொண்டு, அதை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அதைப் பார்த்துவிட்டுத் அவருடைய அக்காவின் தோழி ஒருவர் தனக்கும் அதேபோல் செய்துதரச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.

“என் வெற்றிக்கான முதல் அழைப்பு அதுதான். என் அக்காவின் தோழிக்காக நான் செய்துகொடுத்த நகை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருடைய நண்பர்களும் உறவினர்களும் அதைப் புகழ்ந்ததாகச் சொன்னார்.

வெளியில் இருந்து என் திறமைக்குக் கிடைத்த அந்த அங்கீகாரம் நம்பிக்கை தந்தது. இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது” என்று சொல்லும் நளினி பிறகு க்வில்லிங் பேப்பரிலும் சுடுமண்ணிலும் நகைகள் செய்தார்.

புதுப்புது வடிவங்களில் தான் செய்த ஃபேஷன் நகைகளைத் தன் கணவரின் நண்பர்களுக்கும் கல்லூரி மாணவிகளுக்கும் விற்க, அங்கேயும் நளினிக்கு வரவேற்பு கிடைத்தது. செய்தித்தாளில் சுவாமி மாடம், காகித அட்டையில் கோலம், சுவரில் மாட்டுகிற அலங்காரப் பொருட்கள் எனத் தொடர்ந்து பல பொருட்களைச் செய்தார்.

பிறந்தநாள் பரிசு

அந்த நேரத்தில் தன் மகள் ஷானாவின் முதல் பிறந்தநாள் விழா வர, அதையே தன் கலைத் திறமையை வெளிப்படுத்தும் களமாக்கினார் நளினி. பிறந்தநாள் விழாவை மிக்கி மவுஸ், மின்னி மவுஸ் உருவங்களை வைத்து நடத்துவது என முடிவு செய்தார். அலங்காரத்தில் தொடங்கி விழாவில் கலந்துகொள்ளும் குழந்தைகளுக்கான பரிசுப் பொருட்கள் வரை அனைத்திலும் தன் கைவண்ணத்தைக் காட்டினார்.

“பிறந்தநாளுக்கு வந்த ஆண் குழந்தைகளுக்கு க்வில்லிங் பேப்பரில் செய்த பிரேஸ்லெட்டும், பெண் குழந்தைகளுக்கு ஃபேஷன் நகைகளும் பரிசாகக் கொடுத்தேன். வளர்ந்த குழந்தைகளுக்கு இவற்றுடன் புத்தகமும் கொடுத்தேன். பரிசைப் பெற்றுக்கொண்ட அந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தையே இல்லை. அந்த மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்த கைவினைக் கலைக்கு நன்றி” என்கிறார் நளினி.

படங்கள்: ஜெ. மனோகரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x