இணையும் கரங்கள்: மாற்றம் வீட்டிலிருந்து தொடங்கட்டும்

இணையும் கரங்கள்: மாற்றம் வீட்டிலிருந்து தொடங்கட்டும்
Updated on
1 min read

பெண்கள் வெளியே செல்வதால்தான் பாலியல் சீண்டல் உட்படப் பல்வேறுவிதமான பிரச்சினைகள் ஏற்படுவதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2016-ல் வெளியிட்டுள்ள தகவலின்படி பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதற்கு முந்தைய ஆண்டைவிட 82 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

குடும்ப உறுப்பினர்கள், பெற்றோரின் நெருங்கிய நண்பர்கள், அக்கம் பக்கத்து வீட்டார் ஆகியோரால்தான் இந்தக் குற்றங்கள் நிகழ்த்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 76 சதவீத இந்தியப் பெண்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் உடல்சார்ந்த வன்முறையையும் பாலியல் வன்முறையையும் வெளியே செல்வதில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணை உடலாக மட்டும் பார்க்காமல் சகமனுஷியாக நடத்துவதும், பாலினப் பாகுபாடு இல்லாமல் குழந்தைகளை வளர்ப்பதுமே இன்றைய தேவை என வலியுறுத்துகிறார் எழுத்தாளரும் பெண்ணியச் செயற்பாட்டாளருமான பா.ஜீவசுந்தரி. “பெண்கள் மீதான வன்முறையும் பெண் குழந்தைகள் சிதைக்கப்படுவதும் பயங்கரமான மனநிலையின் வெளிப்பாடுகளே.

பெண்ணை நுகர்வுப் பொருளாகப் பார்க்கும் மனப்பான்மை காலம் காலமாக இருந்தாலும் இன்று அது உச்சத்தை அடைந்திருக்கிறது. பாலியல் வன்முறையில் ஈடுபட்டவருக்கு #மீடூ போன்ற பிரச்சாரங்கள் மூலம் தண்டனை பெற்றுத்தர முடியாது என்றபோதும் ‘எனக்கு இப்படி நடந்தது’ என ஒரு பெண் வெளிப்படையாகச் சொல்வதைக்கூட இந்தச் சமூகம் அனுமதிக்காத போக்குதான் நிலவுகிறது.

பெண்களைப் பாதுகாக்க நம் நாட்டில் இயற்றப்படாத சட்டங்களே இல்லை எனலாம். ஆனால், நடைமுறையில் அந்தச் சட்டங்கள் பெண்ணுக்குப் பயன் தருகின்றனவா? வரதட்சணை வாங்குவதும் கொடுப்பது தண்டனைக்குரிய செயல். ஆனால், இந்தக் காலகட்டத்தில் வீடு, வீட்டு உபயோகப் பொருட்கள், பணம் என அனைத்தையும் வரதட்சணையாக வாங்கிறார்கள்; கொடுக்கிறார்கள்.

பெண்கள் அமைப்புகள் தொடர்ந்து பெண்களுக்கான போராட்டங்களை நடத்திவருகின்றன. குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் நாடிவரும் இடமாக இவையே உள்ளன. ஆனால், பெண்களுக்கான மாற்றம் என்பது சமூக மாற்றத்துடன் ஒன்றிணைந்தது. இதை வீடுகளில் இருந்தே தொடங்க வேண்டும்.

முன்பெல்லாம் பெண்கள் அமைப்பினர் எங்கே சென்றாலும் ஏணியை எடுத்துச் செல்வோம். எங்கு ஆபாச போஸ்டர்கள் இருந்தாலும் அவற்றைக் கிழித்தெறிவோம். ஆனால், இன்றைக்கு அப்படியான படங்களை செல்போனிலேயே பார்த்துவிட முடிகிறது. பெண்ணுடலை மர்மமான பொருளாக வைத்திருப்பதே இதற்கெல்லாம் காரணம். பள்ளிகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும்.

பெண்ணுடல் குறித்த புரிதலை அறிவியல் துணையுடன் மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். பாலினப் பேதமற்ற வளர்ப்பு முறை, பாலியல் கல்வி இரண்டையும் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறையிலாவது பெண்களைச் சமமாக நடத்தும் போக்கு அதிகரிக்கும்” என்கிறார் ஜீவசுந்தரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in