

நம்பிக்கை நாயகி
ஹாலிவுட்டின் படைப்புத்திறன் உச்சத்தில் இருந்த 1930-களில் கொடிகட்டிப் பறந்த நாயகி மெர்லின் டயட்ரிச் (Marlene Dietrich). 1901-ல் பெர்லினில் பிறந்தார். 1930-ல் வெளிவந்த ஜெர்மனியின் முதல் பேசும் படமான Der Blaue Engel-ல் நாயகியாக நடித்தார். அந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்த லோலா-லோலா எனும் பாடகி வேடம் அவரைப் புகழின் உச்சியில் ஏற்றியது. அந்தத் திரைப்படம் ‘தி புளு ஏஞ்சல்’ எனும் பெயரில் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டபோதும் அவரே நாயகியாக நடித்தார். அந்தப் படத்தை இயக்கிய ஜோசஃப் ஸ்டெம்பெர்க்கின் படங்களில் மெர்லின் தொடர்ந்து நடித்தார்.
‘மொரொக்கோ’, ‘ஷாங்காய் எக்ஸ்பிரஸ்’, ‘தி டெவில் இஸ் ஏ வுமன்’ போன்ற படங்கள் மெர்லினை ஹாலிவுட் திரையுலகின் முகமாக்கின. அவரது நடிப்பைப் போலவே குரலும் உடல்மொழியும் தனித்துவமானவை. நடிப்பில் அவர் சுயம்பு. புற அழுத்தங்களைப் புறந்தள்ளி, தனது பாணியிலேயே இறுதிவரை நடித்தார். மயங்கவைக்கும் அழகும் கம்பீர ஆளுமையும் கொண்ட மெர்லின் ஏற்று நடித்த பாத்திரங்கள் அனைத்தும் பெண்களுக்கு உத்வேகமும் நம்பிக்கையும் அளிப்பவையாக இன்றும் உள்ளன. அவரது 116-வது பிறந்த நாளையொட்டி கடந்த வியாழன் அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.
ஆணும் பெண்ணும் சமம்
மசூதிகளில் ஆண்கள் மட்டுமே இமாம்களாக நியமிக்கப்படுவது இஸ்லாம் மதத்தில் வழக்கமாக இருந்தது. இந்த நிலையில், கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜமிதா என்ற பெண் தற்போது இமாமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்தான் இந்தியாவிலேயே முதல் பெண் இமாம். புனித குர் ஆன் நூலை நன்கு கற்றுத் தேர்ந்துள்ள ஜமிதா, குர் ஆன் சுன்னத் சமூகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர்.
மசூதிகளில் குர் ஆன் நூலைக் கற்றுக்கொடுக்கும் இவர் தற்போது இமாமாகப் பொறுப்பேற்றுத் தொழுகையையும் நடத்துகிறார். “ஆண்களும் பெண்களும் சமம்; இருவருக்கும் இடையே வேறுபாடு காட்டக் கூடாது; சம உரிமை கொடுக்கப்பட வேண்டும் என புனித குர் ஆன் நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது” என்று ஜமிதா இதுகுறித்து அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
முடிவுற்ற முத்தலாக்
முத்தலாக் மூலம் விவாகரத்து அளிக்கும் நடைமுறை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று 2017-ல் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குறுஞ்செய்திகள், மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகள் போன்றவை மூலம் விவாகரத்து செய்ய முடியாது என்பதை அது உறுதிப்படுத்தியது. நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும் வகையில் முத்தலாக் முறையில் விவகாரத்து பெறுவதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா கடந்த வியாழன் அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராகப் போராடும் பாஜக, முத்தலாக்கில் மட்டும் பெண்களுக்கு ஆதரவாகப் பேசுவது ஏன் என்று எதிர்க்கட்சிகள் வாதம்செய்தன. இந்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்களை அரசு முற்றிலும் நிராகரித்தது. இறுதியில், அதற்கு ஆதரவாக 245 பேரும் எதிராக 11 பேரும் வாக்களித்ததால் முத்தலாக் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
தொடரும் எதிர்ப்பு
சென்னையைச் சேர்ந்த ‘மனிதி’ அமைப்பிலிருந்து 11 பெண்கள் கடந்த திங்கள் அன்று சபரிமலைக்குச் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மீது கல்வீச்சுத் தாக்குதலும் நிகழ்த்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். சன்னிதானம் செல்லும் பெண் பக்தர்களுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
பக்தர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, கோயிலுக்குச் செல்லும் முடிவைக் கைவிடுமாறு போலீசார் அவர்களைக் கேட்டுக்கொண்டனர். வேறு வழியின்றி அந்தக் கோரிக்கையை ‘மனிதி’ அமைப்பினர் ஏற்றுக்கொண்டனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும் பெண்கள் அங்கு நுழைய முடியாத நிலை தொடர்கிறது.
அலட்சியத்தின் விலை எய்ட்ஸ்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் மனைவி ஒன்பது மாத கர்ப்பிணி. உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்டதால், அவர் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளானார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்ப்பிணிக்கு நேர்ந்த இந்தக் கொடுமை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, உடனடியாகப் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.