Published : 16 Dec 2018 11:50 am

Updated : 16 Dec 2018 11:50 am

 

Published : 16 Dec 2018 11:50 AM
Last Updated : 16 Dec 2018 11:50 AM

ஆடும் களம் 31: சாகச விளையாட்டின் சாதனை மங்கை

31

ஜிம்னாஸ்டிக்ஸ் என்ற சாகச விளையாட்டு இந்தியாவிலும் இருக்கிறது என்று உலகுக்கு உணர்த்தியவர் அந்தப் பெண். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் பெண் என்ற இமாலய சாதனையைப் படைத்தவர். அவரால் இன்று இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் துளிர்த்து வளரத் தொடங்கியிருக்கிறது. இளம் பெண்களின் புதிய ரோல் மாடலாக உருவெடுத்திருக்கும் அவர், 25 வயதாகும் தீபா கர்மாகர்!

புகழ்பெற்ற வீராங்கனைகளை அள்ளிக்கொடுத்திருக்கும் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவைச் சேர்ந்தவர் இவர். எளிமையான குடும்பத்தில் பிறந்த தீபாவின் அப்பா துலா கர்மாகர், பளு தூக்கும் வீரர். சிறு வயதிலிருந்தே தன்னைப் போலவே மகளையும் விளையாட்டு வீராங்கனையாக்க வேண்டும் என்பது அவரது கனவு. மகளுக்காக ஜிம்னாஸ்டிக்கை அவர் தேர்ந்தெடுத்தார். இந்தியாவில் பெரிய அளவில் வளராத ஜிம்னாஸ்டிக்ஸில் தன் மகளை வீராங்கனையாக்க வேண்டும் என அவர் விரும்பியது ஆச்சரியம்தான்.

வார்க்கப்பட்ட தீபா

தீபாவுக்கு ஆறு வயதானபோதே ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியில் சேர்த்தார் அவருடைய அப்பா. பெற்றோருக்கு இருக்கும் கனவு பிள்ளைக்கும் இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லைதானே? தீபாவுக்கும் அப்படித்தான் இருந்தது. விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும், ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு மீது அவருக்குக் கொஞ்சமும் ஈடுபாடு இல்லை.

அதற்கான காரணத்தை அவருடைய பயிற்சியாளர் சோமா நந்தி கண்டுபிடித்தார். தீபாவின் கால்கள் தட்டையாக இருந்ததால், ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் அவரால் ஈடுபாட்டுடன் விளையாட முடியவில்லை என்பதை அவர் உணர்ந்தார். சாகச விளையாட்டான ஜிம்னாஸ்டிக்ஸின் பலமே கால்கள்தாம்.

கால்கள் வலிமையாகவும் நெகிழும் தன்மையுடனும் சமநிலைத் தன்மையுடனும் இருப்பது அவசியம். தட்டையான பாதங்கள் இருந்தால் ஜிம்னாஸ்டிக்ஸில் ஜொலிக்க முடியாது என்பதால், தீபாவுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கத் தொடங்கினார் பயிற்சியாளர்.

குறிப்பாக கால்களுக்கு மட்டும் தனிப் பயிற்சி அளித்தார். தொடர்ச்சியான பயிற்சியும் எல்லையில்லா முயற்சியும் திருவினையாக்கின. ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாடும் அளவுக்கு தீபாவின் பாதங்கள் நெகிழ்வாயின. இதன் பின்னரே தீபாவுக்கு முறையான ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள் தொடங்கின.

தொடக்கத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் ஈடுபாடு இல்லாவிட்டாலும், தன்னுடைய குறைதான் அதற்குத் தடையாக இருக்கிறது என்பதை உணர்ந்த பிறகு, அதிலிருந்து மீள சிறு வயதில் தீபா கொடுத்த ஒத்துழைப்புதான், அவர் பிற்காலத்தில் சாம்பியனாக மாறத் துணை நின்றது.

அடிப்படை வசதிகள் இல்லை

ஜிம்னாஸ்டிக்ஸில் அவர் உச்சத்தைத் தொடுவதற்கு முன்பு, அந்த விளையாட்டில் பயிற்சியில் ஈடுபட அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு ஒரு பொருட்டே அல்ல என்ற நிலைதான். ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி பெற முறையான உள்கட்டமைப்பு வசதியும் கிடையாது.

அதுவும் பின்தங்கிய மாநிலமான திரிபுராவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.  ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிக் கூடத்தில் எங்கே பார்த்தாலும் எலிகள்தாம் உலாவும். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்றழைக்கும் அளவுக்கு ஆபத்தான இந்தச் சாகச  விளையாட்டில் பயிற்சியில் ஈடுபடும் அளவுக்கு எந்த வசதியும் இல்லாமல்தான் இதில் காலடி வைத்தார் தீபா கர்மாகர். குறைகளையும் நிறைகளாக்கிக்கொள்ளும் மன உறுதி அவரிடம் இருந்ததால், இந்த விளையாட்டில் முன்னேறத் தொடங்கினார்.

அங்கீகாரம் வந்தது

இதன் பின்னர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். 2007-ம்  ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த தேசிய ஜூனியர் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் வென்றதுதான் அவரது முதல் பதக்கம். டெல்லியில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸ் அணியில் தீபாவுக்கும் இடம் கிடைத்தது.

காமன்வெல்த் போட்டியில் தீபா பெரிதாகச் சாதிக்கவில்லையென்றாலும், இந்தியாவின் ஆண்கள் அணியைச் சேர்ந்த ஆசிஷ் குமார் முதன்முறையாக ஜிம்னாஸ்டிக்ஸில் பதக்கம் வென்றார். ஆசிஷ் வென்ற பதக்கம் ஜிம் னாஸ்டிக்ஸில் சர்வதேசப் பதக்கம் வெல்ல தீபாவுக்கு உந்துதலைத் தந்தது.

தொடர்ந்து ஜிம்னாஸ்டிக்ஸில் பல்வேறு வகையான  நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட தீபாவுக்கு 2014-ம் ஆண்டு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இந்த முறையும் அவரது தன்னம்பிக்கையை மட்டுமல்ல, அவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதும் காமன்வெல்த் போட்டிதான்.

2014-ல் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாக வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார் தீபா. ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பையும் சூடிக்கொண்டார்.

இந்த வெற்றிக்குப் பிறகு சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தொடர்ச்சியாகப் பங்கேற்க ஆரம்பித்தார். 2015-ல் ஜப்பான் ஏஆர்டி ஜிம்னாஸ்டிக்ஸ் ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக் பெருமை

2016, தீபாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு. உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பங்கேற்க தீபா தகுதிபெற்றார். இந்தப் பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார். ஒலிம்பிக்கில் 4-வது இடத்தைப் பிடித்து நூலிழையில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பைக் கோட்டைவிட்டார். ஆனால்,  இந்திய வீராங்கனை ஒருவரின் ஜிம்னாஸ்டிக்ஸ் திறமையை  உலகமே திரும்பிப் பார்த்தது.

கடந்த 11 ஆண்டுகளில் மாநிலம், தேசம், சர்வதேசம் எனப் பல பிரிவுகளிலும் 77 பதக்கங்களை வாங்கிக் குவித்திருக்கிறார். இவற்றில் 67 தங்கப் பதக்கங்கள்! தீபாவின் ஜிம்னாஸ்டிக்ஸ் திறமையைக் கண்டு 2016-ம் ஆண்டு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. அதற்கு அடுத்த ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் வழங்கியது.  2017-ம் ஆண்டு 30 வயதுக்குட்பட்ட ஆசியாவின் மிகச் சிறந்த சாதனையாளர்கள் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் தீபா கர்மாகரும் இடம்பிடித்தார்.

ஜிம்னாஸ்டிக்ஸில் மிகவும் ஆபத்தான ‘புரோடுனோவா வால்ட்’டில் பங்கேற்ற ஐந்து சர்வதேச வீராங்கனைகளில் தீபாவும் ஒருவர். இந்தப் பட்டியலில் இடம்பிடித்தவர்களில் தீபா தவிர மற்றவர்கள் ஒலிம்பிக்கிலும் தடம்பதித்தவர்கள். தீபாவுக்கும் அந்தத் தருணம் ஒரு நாள் நிச்சயம் அமையும். அப்போதுதான் அவரது அந்தரச் சாகசம் முழுமைபெறும்.

(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in


You May Like

More From This Category

More From this Author