சிறுதுளி: தற்காப்பும் பெண்காப்பே

சிறுதுளி: தற்காப்பும் பெண்காப்பே
Updated on
1 min read

டெல்லியில் கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட நிர்பயாவின் மரணத்துக்குப் பின் நாடெங்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை அரசும் தன்னார்வ அமைப்புகளும் எடுத்தன. பொது இடங்கள், பஸ், ரயில் பயணங்களின்போது சீண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகும் பெண்களைக் காப்பாற்ற 2017 ஏப்ரலில் பெண்களுக்குத் தற்காப்புக் கலையைக் கற்றுத்தரத் தொடங்கியது கோட்டயம், கங்கழா கிராமத்தின் பஞ்சாயத்து.

கேரளக் காவல் துறையைச் சேர்ந்த ஐந்து முதன்மைப் பயிற்சியாளர்கள் ஒரு துணைக் குழுவுக்குப் பயிற்சியளித்தனர். அந்தக் குழுவினர், கிராமத்திலிருக்கும் பெண்களுக்குப் பயிற்சியளிக்கும் வகையில் இந்தத் தற்காப்புப் பயிற்சித் திட்டத்தை வடிவமைத்தனர்.

குடும்பங்களில், பொது இடங்களில், அலுவலகங்களில் எனப் பல இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களும் வன்முறைகளும் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன. தவறான நோக்கத்துடன் நெருங்குபவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்வது, தேவைப்பட்டால் தாக்குவது போன்றவற்றுடன் சட்டரீதியான விழிப்புணர்வு போன்ற பிற விஷயங்களையும் இந்தப் பயிற்சியில் பெண்களுக்குச் சொல்லித் தந்திருக்கிறோம் என்கிறார் வைக்கம் காவல் நிலையத்தின்  போலீஸ் அதிகாரியும் பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சியளிக்கும் திட்ட ஒருங்கிணைப்பாளருமான ஹேமா சுபாஷ்.

"இந்தத் தற்காப்புப் பயிற்சிகளால் எங்களுக்குத் தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது. சாலைகளிலோ அலுவலகங்களிலோ எந்த மாதிரியான மிரட்டல்களையும் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் எதிர்க்கும் துணிவை இந்தப் பயிற்சியால் நான் பெற்றிருக்கிறேன். இந்தப் பயிற்சியை முடித்த பிறகு, எங்கள் ஊரில் இருப்பவர்கள் எங்களை கங்கழாவின் பெண் புலிகள்னுதான் கூப்பிடுறாங்க" என்கிறார் இரண்டு குழந்தைகளின் தாயான ஜெய.

பத்து வயதிலிருந்து அறுபது வயது வரையுள்ள ஏறக்குறைய 10 ஆயிரம் பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சியளிக்கும் இலக்கோடு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் தற்போது 7,800 பெண்கள் பயிற்சியை முடித்திருக்கின்றனர். டிசம்பர் மாதத்துக்குள் அந்தப் பஞ்சாயத்தின்கீழ் இருக்கும் 2000 பெண்களுக்கும் தற்காப்புப் பயிற்சி அளிக்கவிருக்கிறோம் என்கிறார் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஹேமா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in