விவாதம்: பெண்ணைப் புரிந்துகொள்வது எப்போது?

விவாதம்: பெண்ணைப் புரிந்துகொள்வது எப்போது?
Updated on
1 min read

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை பிறக்காத காரணத்தால் வயிற்றில் தலையணையைக் கட்டிக்கொண்டு கர்ப்பமாக இருப்பதாகக் கணவரிடம் தெரிவித்துள்ளார்.  பிரசவ நாள் நெருங்க மருத்துவமனையில் அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டார். செய்வதறியாமல் தவித்தவர், அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறினார். தானும் குழந்தையும் கடத்தப்பட்டுவிட்டதாகக் கணவருக்குத் தெரிவித்துள்ளார். பின்னர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் அவரைக் கண்டுபிடித்து விசாரனை நடத்தினர். விசாரணையில் அவருக்கு தைராய்டு பிரச்சினை இருப்பதும் அதனால் கருவுற முடியாததால் இப்படிச் செய்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார். அவருக்கு போலீசார்  மனநல ஆலோசனை வழங்கி வீட்டுக்கு அனுப்பினார்கள். 

திருமணமாகிவிட்டாலே ஒவ்வொரு பெண்ணிடமும் கேட்கப்படும் முதல் கேள்வி, “வீட்ல ஏதாவது விசேஷசமா?” என்பதுதான். ஆறு மாதத்துக்குள் அந்தப் பெண் கருவுறவில்லையென்றால் கோயில், பூஜை, பரிகாரங்கள் போன்றவற்றைப் பரிந்துரைப்பார்கள். இன்னும் சிலர் செயற்கைக் கருவூட்டல் மையங்களுக்குப் போகச் சொல்வார்கள்.  திருமணம் ஆனதுமே ஒரு பெண் தாயாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இந்தச் சமூகத்தால் திணிக்கப்படுகிறது. இல்லையென்றால் அந்தப் பெண்ணை வசைபாடத் தொடங்கிவிடுவார்கள். திருமணமாகி ஆறு ஆண்டுகள் குழந்தையில்லாமல் தவித்த அந்தப் பெண், இந்தச் சமூகத்தின் கோரப் பார்வையில் இருந்து தப்பிக்க நினைத்தே இதுபோல் செய்துள்ளார்.

ஆனால், அவரது வேதனையைப் புரிந்துகொள்ளாமல் ‘தலையணையை வயிற்றில்கட்டிக்கொண்டு நாடகமாடிய பெண்’, ‘கணவரை ஏமாற்றிய பெண்’, ‘கடத்தல் நாடகமாடியவர்’ என்றெல்லாம் பகிரப்படும் செய்திகள் சமூகத்தின் முதிர்ச்சியற்ற தன்மையையே வெளிப் படுத்துகின்றன. தனக்கு தைராய்டு பிரச்சினை இருப்பதால் கருவுறுவதில் சிக்கல் இருக்கிறது என்பதைக்கூடக் கணவனிடம் வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில்தான் அப்பெண் இருந்துள்ளார். இத்தனைக்கும் அம்மாவின் தம்பியைத்தான் அந்தப் பெண் மணந்திருக்கிறார். நெருங்கிய உறவில் திருமணம் செய்துகொண்ட போதும் தன்னுடைய பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலையோ வாய்ப்போ அப்பெண்ணுக்குக் கிடைக்க வில்லை.

நீங்க என்ன சொல்றீங்க?

யாராவது ஒருவராவது அந்தப் பெண்ணின் மனக்குமுறலைக் கேட்டிருந்தால் அவர் இப்படிச் செய்திருக்க மாட்டார். எல்லா நிலையிலும் பெண்கள் மீது இந்தச் சமூகம் நிர்ப்பந்தங்களை விதித்தபடி இருக்கிறது. 23 வயதாகியும் திருமணமாகாத பெண்களைப் பார்த்து ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதில் தொடங்கி, திருமணம் ஆனதும் ஏன் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை, ஏன் ஒரு குழந்தையோடு நிறுத்திவிட்டீர்கள் எனப் பல வகையிலும் கேள்விகள் நீண்டவண்ணம் இருக்கின்றன. இதில் பெண்ணுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குச் சிறிதும் இடமில்லை. அவளது உடல்/மன நிலை குறித்து எந்தக் கவலையும் பலருக்கும் இருப்பதில்லை. இந்தப் பெண்ணின் செயலும் அதைத்தான் உணர்த்துகிறது.

வாசகிகளே, சமூகத்தின் இந்த மனநிலையை எப்படி எதிர்கொள்வது அல்லது மாற்றுவது? இந்தப் பிரச்சினையில் உங்கள் கருத்து என்ன, அனுபவம் என்ன? எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in