அசத்தலான சர்க்கரைப் பொம்மைகள்

அசத்தலான சர்க்கரைப் பொம்மைகள்
Updated on
1 min read

தலைமுறையாகத் தொடரும் பாரம்பரிய பொம்மைகளில் தொடங்கி, பலவித தீம்களில் கலக்கும் புதுமையான பொம்மைகள் வரை கொலுப்படிகளை அலங்கரிக்கும் பொம்மைகள் ஏராளம். “பொம்மைகளை விலை கொடுத்து வாங்குவதைவிட நம் கையாலேயே செய்கிற பொம்மைகளைக் கொலுவில் வைத்தால் புதுமையாகவும் இருக்கும். நாமே செய்தது என்ற மனநிறைவும் கிடைக்கும்” என்கிறார் சென்னை டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன்.

இந்தச் சர்க்கரைப் பொம்மைகள் செய்ய சர்க்கரை, எலுமிச்சம்பழம், சிறிதளவு பால் போதுமானது. சர்க்கரைப் பொம்மைகள் செய்யத் தேவையான மர அச்சுகள் கடைகளில் கிடைக்கும். அவற்றில் நமக்குப் பிடித்த உருவ அச்சுகளை வாங்கிக் கொள்ளலாம். இவற்றின் விலை 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை இருக்கும். பலவித வண்ணங்களில் செய்ய விரும்பினால் அதற்கு ஏற்றாற்போல் பச்சை, சிவப்பு, மஞ்சள் போன்ற நிறப் பொடிகளை (அவை உண்ணத் தகுந்தவையா என விசாரிக்கவும்) வாங்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். அதில் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். கலவை பூத்து வரும்போது இறக்கவும். அதை மூன்று பாகங்களாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நிறத்தைச் சேர்க்கவும். மர அச்சுகளைப் பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். காய்ச்சிய பாகை அச்சுகளில் ஊற்றி, ரப்பர் பேண்ட் போடவும்.

“அச்சுகள் ஒன்றுடன் ஒன்று பொருந்துமாறு ரப்பர் பேண்ட் போட்டால்தான் கிடைக்கிற வடிவம் முழுமையாகவும் அழகாகவும் இருக்கும். பாகு ஊற்றி ஐந்து நிமிடம் கழித்து மர அச்சைப் பிரித்தால் அழகிய சர்க்கரைப் பொம்மை கிடைத்துவிடும்” என்கிறார் லட்சுமி.

இந்த வருட கொலுவைப் பிரமாதப்படுத்த சர்க்கரைப் பொம்மையைச் செய்யத் தயாராகுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in