

பெண்கள் வன்முறையால் பாதிக்கப்படுவதைவிட இந்தக் குற்றங்கள் குறித்து வெளியே சொல்லவும், உதவியை நாடவும் அவர்களுக்குப் போதுமான வழிகாட்டல் இல்லாதது வேதனை. இந்தியா போன்ற நாடுகளில் பெண்களின் பாதுகாப்புகாகப் பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக, குடும்ப வன்முறைத் தடைச் சட்டம், வரதட்சணை தடைச்சட்டம், பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடைச்சட்டம் போன்ற பல சட்டங்கள் அமலில் உள்ளன.
சட்டங்கள் குறித்துத் தெரிந்துகொள்வதுடன், பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்போது அவற்றைப் பயன்படுத்துவதும் அவசியம் என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் டி.ஆர். தாரா “எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் முதல்கட்டமாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.
ஒருவேளை காவல் நிலையத்துக்குச் செல்ல விரும்பவில்லை என்றால் மாநில அல்லது மாவட்ட மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூகநலத் துறை அலுவலக அதிகாரிகளிடமும் புகார் அளிக்க முடியும். ஒருவேளை இவர்கள் யாரிடமும் பேசுவதற்குத் தயங்கினால் அரசால் அனுமதிக்கப்பட்ட மாதர் சங்கம் போன்ற மகளிர் அமைப்புகளிடமும் தங்களுடைய பிரச்சினைகளைக் கூறி அதன் வழியாகத் தீர்வை நோக்கிச் செல்ல முடியும்” என்கிறார் தாரா.
ஒரு பெண்ணை உடல் - மனரீதியாகத் தாக்குவது, வார்த்தை வன்முறை, வேலைக்குச் செல்லவிடாமல் பொருளாதார ரீதியாக முடக்குவது போன்றவை குடும்ப வன்முறைத் தடைச்சட்டத்தின் கீழ் வரும். இதில் சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாகக் காவல் துறையினரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க முடியும். மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள சட்ட உதவி மையங்களையும் அணுகலாம். வழக்கறிஞரை வைத்து வாதாட முடியாதவர்கள் இதுபோன்ற சட்ட உதவி மையங்கள் மூலம் கட்டணமின்றி வழக்கறிஞர்கள் வைத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
“வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம். வரதட்சணை குறித்து மணப்பெண் அல்லது சம்பந்தப்பட்ட குடும்பத்தில் உள்ள யார் வேண்டுமாலும் புகார் அளிக்கலாம். கணவன் - மனைவிக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாகக் காவல் உதவி எண் 100-க்கு போன் செய்து புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட நபர்மீது நடவடிக்கை எடுப்பார்கள். பாதிக்கப்பட்ட பெண்தான் புகார் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உறவினார்கள், அக்கம் பக்கத்து வீட்டார் என ஆபத்தான நிலையில் உள்ள பெண்ணுக்கு உதவ நினைக்கும் யார் வேண்டும் என்றாலும் அவசர எண்ணை அழைத்துப் புகார் அளிக்க முடியும்” என்கிறார் வழக்கறிஞர் தாரா.
உள்ளகப் புகார் குழு
இந்தியாவில் யுனிசெஃப் நடத்திய ஆய்வில் இந்தியப் பெண்களில் 27 சதவீதத்தினர் 18 வயதுக்குள்ளாகவே திருமணம் செய்துவைக்கப்படுகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. இதில் நகரம் - கிராமம் என்ற வேறுபாடு கிடையாது. குழந்தைத் திருமணத்தைத் தடுக்க, சம்பந்தப்பட்ட குழந்தையோ குழந்தையின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பள்ளி ஆசிரியர் போன்றோரோ காவல் துறைக்கு அவசர உதவி எண் மூலம் புகார் அளிக்கலாம். அதேபோல் அலுவலகங்களில் பெண்கள் புகார் சொல்லும் வகையில் உள்ளகப் புகார் குழு அமைக்க வேண்டும் எனச் சட்டம் உள்ளது. பணியிடங்களில் பாலியல்ரீதியாகப் பாதிக்கப்படும் பெண்கள் தங்களுடைய பிரச்சினையை இந்தக் குழுவில் சொல்லலாம்.