

எல்லாம் இழந்து நிற்கும் மக்கள்
வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையைக் கடந்தபோது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அதிராமப்பட்டினத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் குழந்தை பலியானாள். கடலூரில் சுவர் இடிந்து பெண் ஒருவர் பலியானார். செய்யார் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி ப்ரியாமணி பலியானார். சிவகங்கையில் மரம் விழுந்து எலிசபெத் ராணி என்ற பெண் பலியானார். புதுக்கோட்டையில் வெவ்வேறு இடங்களில் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு பெண்கள் பலியாகி உள்ளனர்.
அதில் ஒருவர் சிறுமி. தஞ்சாவூரில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் பலியாகி உள்ளனர். சுற்றத்தையும் உடமையையும் வாழ்வாதாரத்தை அங்குள்ள மக்கள் இழந்து நிற்கின்றனர். மீட்புப் பணிகள் மந்தமாக இருப்பதால், அவர்களைப் பார்க்க வந்த ஒ.எஸ். மணியன் உள்ளிட்ட சில அமைச்சர்களுக்கும் ஆளுங்கட்சியின் தலைவர்களுக்கும் அவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களோடு மக்களாக நிற்க வேண்டிய முதல்வரும் துணை முதல்வரும் ஹெலிகாப்டரில் கள ஆய்வு செய்து திரும்பியதும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
புயலில் பிறந்த குழந்தை
எஸ்.விக்டர் ஜான்பால் (33) நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் ஓட்டுநர். புயல் அன்று, நெடுங்காடு சுகாதார நிலையத்துக்கு அருகில் உள்ள கர்ப்பிணியைக் காரைக்கால் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவிட்டுத் திரும்பினார். திரும்பிய உடனே, நெடுங்காடு குரும்பகரம் மத்தளங்குடி பகுதியில் வலியால் துடிக்கும் ஒரு கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அழைப்பு வந்தது.
கர்ப்பிணியை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டதுடன், அவரது உறவினர்கள் இருவரைத் தனது வாகனத்தின் பின்னால் வருமாறு சமயோசிதமாகக் கூறியுள்ளார். உடன் வந்த உறவினர்கள் ஆங்காங்கே கிடந்த மரங்களை அகற்றி பாதை அமைத்துக் கொடுத்தனர். ஒரு வழியாக, அந்தக் கர்ப்பிணியை மருத்துவமனையில் விக்டர் சேர்த்துவிட்டார். தான் மருத்துவமனையில் கொண்டுசேர்த்த பெண்கள் இருவருக்கும் நல்லபடியாகக் குழந்தை பிறந்த தகவலைக் கேட்டதும், தான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறந்துபோனதாக ஜான் விக்டர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
முறிந்த கிளையால் பிரிந்த உயிர்
சுனாமியின்போது தன்னுடைய பெற்றோரை இழந்தவர் பாத்திமா. நாகப்பட்டினத்தில் காவலாளியாகப் பணிபுரியும் நேபாளத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவரைக் காதலித்து மணந்துகொண்டார். இருவரும் நாகையிலேயே தங்களது வாழ்வைத் தொடர்ந்துள்ளனர். ஒரு மகளையும் மூன்று மகன்களையும் வளர்க்க வருமானம் போதவில்லை. இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்னர் கருவாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தென்னந்தோப்பில் வேலைக்குச் சேர்ந்தனர்.
கஜா புயல் குறித்த செய்தி வந்ததும் முன்னெச்சரிக்கையாகப் புயலுக்கு முந்தைய நாள் மாலையிலேயே, தங்களுடைய குழந்தைகளுடன் தோப்பிலிருந்து வெளியேறி அருகில் உள்ள நடராஜன் என்பவர் வீட்டில் தங்கினர். அன்று இரவு 12 மணியளவில் அவர்களுடைய இரண்டாவது மகன் கணேசன் சிறுநீர் கழிக்க வெளியே சென்றான். அப்போது அவன்மீது வாசலில் இருந்த மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் சிறுவனின் உயிர் பிரிந்தது.
வாழ்வாதாரத்தை இழந்த பெண்கள்
வேதாரண்யம் வட்டம் தகட்டூர், அரைக்கால்கரை, பெத்தாச்சிக்காடு உள்ளடக்கிய பதினெட்டுப்பட்டி கிராமங்களில் உள்ள மக்கள் அதிக அளவில் ஆடுகளையும் மாடுகளையும் நாட்டுக் கோழிகளையும் வளர்த்துவந்தனர். கஜா புயலால் அந்தப் பகுதிகளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மாடுகளும் 250-க்கும் மேற்பட்ட ஆடுகளும் கோழிகளும் இறந்துவிட்டன என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். “நள்ளிரவு ஏற்பட்ட திடீர் புயல் காற்றால் மாட்டுப் பட்டி திடீரென இடிந்து விழுந்தது.
அதில் கட்டியிருந்த மாடுகள் அனைத்தும் இறந்துவிட்டன. காற்றில் தூக்கிச் செல்லப்பட்ட கோழிகள் எங்கே சென்றன என்று தெரியவில்லை. இவற்றை எங்கள் வீட்டில் ஒரு நபராக வளர்த்தோம். ஒரே நேரத்தில் இவை அனைத்தும் இறந்தது மனதுக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அந்த மாடுகளிடம் பால் கறந்து விற்றுதான் நாங்கள் வாழ்ந்துவநதோம். திடீரென ஏற்பட்ட புயலால் அனைத்து மாடுகளையும் இழந்து விட்டுத் தற்போது அடுத்த வேளைச் சாப்பாட்டுக்குக்கூட வழி இல்லாமல் நிற்கிறோம்” என அங்குள்ள பெண்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.