Last Updated : 25 Nov, 2018 10:15 AM

 

Published : 25 Nov 2018 10:15 AM
Last Updated : 25 Nov 2018 10:15 AM

இயற்கைச் சீற்றம்: புயலோடு போராடும் பெண்கள்

அந்தப் பேரழிவு நாளின் காலைப்பொழுது. பட்டுக்கோட்டை அருகே அணைக்காடு கிராமத்தில் ஏழாம் வகுப்புப் பயிலும் மாணவியொருத்தி பூப்படைந்துவிட்டாள். கூரைவீட்டில் வசிக்கும் பெற்றோர், தங்கள் குடும்ப வழக்கப்படி அவளை அருகில் உள்ள குடிசையில் தனியாகத் தங்கவைத்தனர்.

அது தென்னைமரத் தோப்பு. இனம்புரியாத பயத்தில் உறக்கம் வராமல் படுத்துப் புரண்டுகொண்டிருந்தவள், அன்று நள்ளிரவில் புயல் தன் பேயாட்டத்தைக் காட்டத் தொடங்கியபோது பயத்தில் அலறினாள். மகளின் அழுகுரல் காற்றின் கடும் இரைச்சலில் பெற்றோருக்குக் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் தென்னை மரம் ஒன்று  குடிசை மீது விழுந்ததில், பூப்படைந்த அன்றே அவள் மூச்சடங்கிப்போனாள்.

அன்று இரவு தொடங்கி மறுநாள் முழுவதும் தங்களைக் காத்துக்கொள்வதுடன் தங்கள் கால்நடைகளைக் காப்பாற்றுவதுதான் பெண்க ளுக்குக் கடும்சவாலாக இருந்தது. தங்களது வாழ்வாதாரமான, பிள்ளைகளைப் போன்ற அவற்றைப் பாதுகாக்க தீரத்துடன் நின்ற அவர்களின் உறுதி முன்னே சில பகுதிகளில் கஜாவும் அடிபணிந்துபோனது.

பெரும்பாலான ஆடு, மாடுகளைக் காப்பாற்றிக் கரைசேர்த்தனர் எம்பெண்டிர். ஒருபக்கம் அவற்றைப் பார்த்துக்கொண்டு இன்னொரு பக்கம் தங்கள் பிள்ளை குட்டிகளை அரவணைத்துக்கொண்டு உயிர்பிழைக்கப் பட்டபாடு இந்த ஜென்மத்துக்குப் போதும்.

இயற்கை உபாதைக்கும் வழியில்லை

புயலடித்து ஒரு வாரம் கழிந்த பிறகும்  பெண்கள் தங்கள் அவசியமான வேலைகள் எவற்றையும் செய்துகொள்ள முடியவில்லை. அதிகப்படியான குடிசைப் பகுதிகளைக்கொண்ட டெல்டாவில் வயல்வெளிகளிலும் மரக்கூட்டங்களுக்கு இடையிலும்தான் காலைக்கடனைக் கழிப்பார்கள்.

வயல்களில் வெள்ளம் நிறைந்திருக்க, மரங்களும் விழுந்துவிட்ட நிலையில் ஒதுங்க இடமில்லாமல் பகல்முழுவதும் இயற்கை உபாதையை அடக்கிக்கொண்டு இரவுப்பொழுதுக்காகக் காத்திருக்கிறார்கள்.

இரவில் மின்சாரம் இல்லாத நிலையில் இருட்டில் ஆபத்தான முறையில் சென்றுவருகிறார்கள். மாதவிடாய் ஏற்பட்ட பெண்களின் நிலையோ சொல்ல முடியாத துயரம். அனைத்தையும் இழந்துவிட்டு மாற்றுத்துணிக்கே வழியில்லாத நிலையில் மாதவிடாய்த் துணிக்கு எங்கே போவார்கள். நாப்கின்கள் பயன்பாட்டை அறியாத அவர்களுக்குத் தற்போது அதுவும் கிடைக்கவழியில்லை.

வேதாரண்யம், கோடியக்கரை பகுதிகளில் பருவமடைந்த பெண்பிள்ளைகளை வைத்துக்கொண்டு பாதுகாப்பாக இருக்கவும் இடமின்றியும் சாலைகளில் உறங்குகிறார்கள். அதுபற்றியெல்லாம்கூட அவர்கள் கவலைப்படவில்லை. கைக்குழந்தை களுக்குப் பால் கிடைக்காத நிலைதான் அவர்க ளின் மனத்தை வாட்டுகிறது. குடியானவர்கள் கொடுத்த மாட்டுப்பாலைக் காய்ச்சிக்கொடுக்கவும் வழியில்லாமல் தவித்தார்கள்.

பட்டினியோடு புலரும் பொழுது

நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பெண்களுக்கு ஓரளவு உணவு கிடைத்துவிடுகிறது. பாதிப்புக்குள்ளானாலும் தங்கள் வீட்டிலோ வீடு இருக்கும் பகுதியிலோ தங்கியிருக்கும் பெண்களுக்குச் சாப்பாடு என்பது ஒவ்வொருநாளும் சவாலாகவே இருக்கிறது.

வீடில்லை, வீட்டில் அடுப்பில்லை, அடுப்பெரிக்க விறகில்லை, அரிசியில்லை, காய்கறிகளில்லை, பாத்திரங்களில்லை என்ற நிலையில் எப்படிச் சமைப்பது? வேறுவழியின்றிப் பட்டினி கிடக்கிறார்கள். இப்போதுதான் தன்னார்வலர்கள் மூலம் ஓரளவு நிவாரண உதவிகள் வர ஆரம்பித்திருக்கின்றன.

சோத்திரியம் கிராமத்தைச் சேர்ந்த சகுந்தலா, “இந்தப் புயலை வாழ்க்கையில் மறக்க முடியாது. எல்லாத்தையும் இழந்துட்டோம். குடும்பம் நடத்தவே வழியில்லை. இனி எதைவச்சு மேலவரதுன்னு தெரியல. அந்தத் தெய்வம்தான் வழிகாட்டணும்” என்று திக்கற்று நிற்கும் அவர் தெய்வத்தைத் துணைக்கு அழைக்கிறார்.

சிகிச்சைக்கும் வழியில்லை

இழப்பு ஒருபக்கம் என்றால் புயலைத் தொடர்ந்த நாட்களில் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. சிரமேல்குடியைச் சேர்ந்த லீலாவதி, “என் மருமக நிறைமாச கர்ப்பிணி. லேசா வலி ஆரம்பிச்சிடுச்சு. எப்ப வேணாலும் பிரசவம் ஆகலாம்.  பட்டுக்கோட்டை ஆஸ்பத்திரிக்குத்தான் போகணும். ஆனா ரோடு  இன்னும்  கிளியராவல” என்கிறார்.

மாதாந்திர பரிசோதனை, கடும் காய்ச்சல், அவசர அறுவை சிகிச்சை என்று இப்படி எத்தனையோ அவசர, அத்தியாவசிய தேவைகளைப் பார்க்க முடியாமல் தவித்துக் கிடக்கிறார்கள். பல கிராமங்கள் இன்னும் வீழ்ந்த மரங்கள்சூழ் தீவுகளாகத்தான் இருக்கின்றன.

பட்டவெளி கிராமத்தைச் சேர்ந்த புனிதவள்ளி, “எம்மவளைத் திருத்துறைப்பூண்டி பக்கத்துலேர்ந்து போனவாரம் பொண்ணு பார்த்துட்டுப்போனாங்க. நிச்சயதார்த்தத்துக்குத் தேதி பார்த்து சொல்றேன்னு சொன்னவங்க. பொண்ணு பார்த்த நேரம் புயலே வந்துட்டுது; ரொம்ப ராசியான பொண்ணா தெரியுது, பிறகு சொல்றோம்னு சொல்லி அனுப்பியிருக்காங்க. புயலுக்கும் எம் பொண்ணுக்கும் என்னங்க சம்பந்தம்?” என்று கேட்கிறார். புயலினூடாக இப்படி விடையில்லாத கேள்விகள் ஆயிரமாயிரம் அலையடித்துக் கொண்டிருக்கின்றன.

மீளமுடியாத பேரிடி

கோவிலூரைச் சேர்ந்த செல்வ சுந்தரி, “கரண்டு வர எப்படியும் பல நாளாவும். வூட்ல டாய்லெட் போவக்கூடத் தண்ணி இல்லை. புழங்கவும் தண்ணி இல்லை. சுவிட்ச் போட்டா எல்லாம் கிடைக்கும் என்ற வாழ்க்கையை வாழ்ந்துட்ட எங்களுக்கு  இதைக் கடந்துபோக ரொம்பவே மனோ திடம் தேவையாயிருக்கு.  அந்தக் காலப் பெண்கள்போல கிணத்துல தண்ணி எடுக்க பலமைல் தொலைவுக்குப் போய்  தண்ணி சேந்தி வர்றோம். விறகு அடுப்பில் சமைக்கிறோம்” என்கிறார்.

இந்தப் பேரிடரைச் சமாளிக்க வழிதெரியாமல் அரசு தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில்,  அரசுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமே இந்த புயல் பல பாடங்களைக் கற்றுத்தந்துவிட்டுப் போயிருக்கிறது. ஊருக்கெல்லாம் அன்னமிட்ட கைகள், இன்று நிவாரண முகாம்களில் உணவுக்காகக் கையேந்த வேண்டிய நிலை வேதனையைக் கூட்டுகிறது.

முகாமில் தங்கியிருந்த பெண்களில் நால்வர் திருத்துறைப்பூண்டி – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதியதில் வியாழக்கிழமை இரவு பலியாகினர். அந்தப் பெண்களில் ஒருவருடைய மகன் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே அனைத்தையும் இழந்து தவிக்கும் குடும்பங்களை இந்த உயிரிழப்பு மேலும் உலுக்கியிருக்கிறது.

சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் காய்ச்சலால் அவதிப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. தன்னார்வலர்கள்மூலம் நிவாரணப் பொருட்கள் சிறுகச்சிறுகக் கிடைத்தாலும் தங்கள் தலைமீது விழுந்திருக்கும் பேரிடரை மீறி எப்படிக் கடந்து வரப்போகிறோம் என்பதே டெல்டா பகுதியைச் சேர்ந்தவர்களின் பெருங்கவலையாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x