களம் புதிது: வீடு நிறைய விருதுகள்

களம் புதிது: வீடு நிறைய விருதுகள்
Updated on
1 min read

தான் பெற்ற விருதுகளால் வீட்டையே நிறைத்து ஆச்சரியம் தருகிறார் போடியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சொக்கர்மீனா.

சாதிக்கப் பாலினம் தடையல்ல என்பதைத் தங்கள் மகத்தான வெற்றிகளின் மூலம் பெண்கள் நிரூபித்துவருகிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் வானமும் தொடும் தூரம்தான் என்று முழங்கும் பெண்களின் பட்டியலில் தன்னையும் இணைத்துக்கொண்டிருக்கிறார் சொக்கர்மீனா.

தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த இவர் எம்.காம். முடித்து உடற்கல்வியியல் படித்துவருகிறார். படிப்பு மட்டுமின்றி விளையாட்டுத் துறையிலும் தடம்பதித்துவருகிறார். சிலம்பம், கராத்தே, குங்பூ, பளுதூக்குதல் எனப் பல்வேறு கலைகளிலும் முத்திரை பதிக்கிறார்.

சர்வதேசக் கனவு

“என் அப்பா, தாத்தா ரெண்டு பேருமே குஸ்தி, சிலம்ப ஆசிரியர்களாக இருந்திருக்காங்க. எனக்கு மூன்றரை வயதானபோது தாத்தாவிடம் சிலம்பம் பழக ஆரம்பித்தேன். அவர் 101 வயதில் இறந்தார். அதன்பிறகு  என் தந்தையிடம் ஏழு வயதில் பயிற்சியைத் தொடங்கினேன். சிலம்பம்தான் பிற கலைகளுக்கு அடிப்படை. கராத்தே, குங்பூ, களரி, பூமராங் ஆகிய பயிற்சிகளை அடுத்தடுத்து எடுத்தேன்” என்று சொல்லும் சொக்கர்மீனா பள்ளி, கல்லூரி அளவில் பல பரிசுகளை வென்றிருக்கிறார்.

தேசிய அளவிலான சிலம்பம், பளுதூக்குதல் போட்டிகளிலும் பரிசு வென்றிருக்கிறார். தான் படித்த கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்குச் சிலம்பம், கராத்தே பயிற்சியளித்துவருகிறார். மேலும், பள்ளி மாணவிகளுக்குத் தற்காப்புப் பயிற்சியும் அளிக்கிறார்.

ஒரு முறை சர்வதேசப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பும் சொக்கர்மீனாவுக்குக் கிடைத்தது. ஆனால், வீட்டு ஏழ்மை நிலை காரணமாக அவரால் பங்கேற்க முடியவில்லை. “எப்படி இருந்தாலும் சர்வதேசப் போட்டிகளில் வெற்றிபெற்று நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பது என் ஆசை.

மன்னர் காலத்தில் எதிரிகளை வீழ்த்திவிட்டு, நம்மிடமே திரும்பி வரும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்த வளரி பயன்பாடு தற்போது குறைந்துவிட்டது. அடுத்ததாக வளரிப் பயிற்சிக்குத் தயாராகிவருகிறேன். இந்தப் பயிற்சியை நிறைவு செய்து பிறருக்கும் கற்றுத்தருவேன்” என்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in