வானவில் பெண்கள்: பெரியம்மா டீச்சர்

வானவில் பெண்கள்: பெரியம்மா டீச்சர்
Updated on
2 min read

திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர், அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பெரியம்மா டீச்சரைத் தெரியாதவர்கள் குறைவு. தூய வெள்ளை உடை, செயலில் விவேகம், சொல்லில் அன்பு, பார்வையில் கருணை ஒளி இவையே அவரது அடையாளங்கள். கடமை  உணர்வுக்கு இலக்கணமாகச் சொல்லும் அளவுக்குத் திறம்படச் செயல்படும்  பெரியம்மா டீச்சரின் இயற்பெயர் சு.செல்லம்மாள்.

1928-ல் கரிசலூர் கிராமத்தில் பிறந்தவர். எட்டாம் வகுப்பு முடித்ததும் இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சியை முடித்தார். பிறகு 16 வயதிலேயே கீழப்பாவூரில் செயல்பட்ட நாடார் இந்து தொடக்கப் பள்ளியில் 1944-ல் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

கீழப்பாவூரைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி ப.ஆறுமுகநயினார் 1939-ல் அரசு உதவிபெறும் நாடார் இந்து தொடக்கப் பள்ளியைத் தோற்றுவித்தார். பின்னாளில் பள்ளி நிர்வாகி ஆறுமுகநயினாரைத் திருமணம் செய்துகொண்டு, அவருடன் இணைந்து கல்விப் பணியைத் தொடர்ந்தார் செல்லம்மாள். இவர்களது சீரிய முயற்சியால் 1950-ம் ஆண்டு இந்தப் பள்ளி நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்ந்தது. ஆசிரியர் பொறுப்புடன் பள்ளி நிர்வாகப் பொறுப்பையும் செல்லம்மாள் கவனித்துவந்தார்.

உடல்நலக் குறைவால் கணவர் 1961-ல் இறந்தபோது செல்லம்மாளுக்கு 33 வயது. அன்றுமுதல் பள்ளியைத் தனியொரு பெண்ணாக நிர்வாகம் செய்யத் தொடங்கினார். செல்லம்மாளின் அயராத உழைப்பாலும் துடிப்பாலும் இந்தப் பள்ளி 1990-91 கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்ந்தது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி பலமுறை 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளது.

நிர்வாகப் பொறுப்பில் செல்லம்மாள் அமர்ந்தபோது பள்ளியின் இடம் கால் ஏக்கர் பரப்பாக இருந்தது. அதில் ஓடு வேய்ந்த கட்டிடங்கள் மட்டுமே இருந்தன. பின்னர், இவரது உழைப்பால் விளையாட்டு மைதானம் உட்பட பள்ளிக்கான இடம் ஒன்றே முக்கால் ஏக்கராக விரிவடைந்தது. ஓட்டுக் கட்டிடங்களாக இருந்த வகுப்பறைகளை கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றினார்.

சோர்வில்லாத பணி

இப்பள்ளியில் கீழப்பாவூர் மட்டுமின்றி சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 850 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள் உட்பட 33 பேர் பணியாற்றுகின்றனர். ஆசிரியராகப் பணியில் சேர்ந்தது முதல் 74 ஆண்டுகளாகக் கல்விப் பணியைத் தொய்வின்றிச் செய்துவருகிறார். மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது பள்ளியின் செயலாளராக இருக்கிறார். இந்த வயதிலும் தினமும் பள்ளிக்கு வந்து, நிர்வாகப் பணிகளைக் கவனித்துவருகிறார்.

தற்போது 91 வயதாகும் செல்லம்மாள்,  காலையில் எழுந்ததும் வீட்டு வேலைகளைச் செய்து முடித்துவிட்டு, வயலுக்குச் சென்று விவசாயப் பணிகளைக் கவனிக்கிறார். பின்னர் கொஞ்சமும் சோர்வின்றிப் பள்ளிக்குச் சென்று நிர்வாகப் பணிகளைக் கவனிப்பது எனச் சுறுசுறுப்புடன் செயல்பட்டுவருகிறார்.

“நம்ம வேலையை நாமதான் பார்க்கணும். இதையெல்லாம் அடுத்தவங்க பார்த்துப்பாங்கன்னு இருக்கக் கூடாது. பள்ளியில் எங்காவது குப்பை கிடந்தாலும் எடுத்துப் போட்டுச் சுத்தப்படுத்துவேன். அப்போதான் அதைப் பார்க்கும் குழந்தைகளுக்கும் பொறுப்பு வரும். அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்கள் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். ஆனால், இப்போது நிலைமை மாறிடுச்சு.

நான் வேலைக்குச் சேர்ந்தப்ப பள்ளியில் முதல் பெண் ஆசிரியர் நான்தான். அதனால் எல்லோரும் என்னைப் பெரியம்மா டீச்சர்னு சொன்னாங்க. அந்தப் பேரே நிலைச்சுடுச்சு” என்று புன்னகைக்கிறார் செல்லம்மாள் டீச்சர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in