Published : 03 Nov 2018 18:18 pm

Updated : 04 Nov 2018 10:21 am

 

Published : 03 Nov 2018 06:18 PM
Last Updated : 04 Nov 2018 10:21 AM

பாதையற்ற நிலம் 19: ரசனைக்கு உவப்பான எழுத்து

19

தமிழில் உரைநடை இலக்கியம் தோன்றி நூறு வருடங்கள் ஆகிவிட்டன. இதற்கிடையில் பல நாவல்கள், சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. தீவிர/வெகுஜன இலக்கியம் என இருவிதமான போக்குகளும் உருவாகியுள்ளன. இதற்கிடையில் சில நாவல்கள் மட்டுமே எல்லாத் தரப்பின் ரசனைக்கும் உவப்பாகும் விசேஷத்தைக் கொண்டு நிலைத்து நிற்கின்றன. அம்மாதிரியான நாவல்களுள் ஒன்று ‘தரையில் இறங்கும் விமானங்கள்’. அதற்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் இந்துமதி.

தமிழின் நட்சத்திர எழுத்தாளர்களுள் ஒருவர் இந்துமதி. வார, மாத இதழ்களில் வெளிவந்த தன் கதைகள்மூலம் ஒரு காலகட்டத்தின் வாசக மனத்தில் ஆதிக்கம் செலுத்திவந்தவர். ஒழுக்கம், நேர்மை எனப் பலவிதமான நம்பிக்கைகளுடன் இருக்கும் நடுத்தர வாழ்க்கையை அதன் பிரதிநிதிகளைக் கொண்டு சித்தரிப்பது இவரது கதைகளின் மையம்.


இந்த நடுத்தர வாழ்க்கையின் உறவு முறை, சமூக மாற்றத்தால் பாதிப்புக்குள்ளாகும் விதத்தையும் தன் கதைகளின் மூலம் இந்துமதி சித்தரித்தார். அவரது கதைகளில் அதிகம் வாசிக்கப்பட்ட நாவல் என ‘தரையில் இறங்கும் விமானங்க’ளை முன்னிறுத்தலாம்.

‘தரையில் இறங்கும் விமானங்கள்’, ஒரு காலகட்டத்தின் நாவல். இரு தலைமுறையினரால் வாசிக்கப்பட்ட நாவல் எனச் சொல்லலாம். ‘ஆனந்த விகட’னில் தொடராக வெளிவந்த இந்நாவல், தனது விவரிப்பு மொழியால் எல்லாத் தரப்பு வாசகர்களையும் சென்றடைந்தது. தொலைத் தொடர்பு அறிவியலின் பிரம்மாண்ட வளர்ச்சி நம் வாழ்க்கை மீது வியாபகம் கொள்ளாத அந்தக் காலகட்டத்தின் எளிய மனிதர்களை, அவர்களது மனவோட்டத்துடன் இந்துமதி இந்த நாவலில் சித்தரித்திருப்பார்.

ஒரு நடுத்தர பிராமணக் குடும்பத்தின் கதை என்ற விதத்தில் இது எழுத்தாளர் அசோகமித்திரன் கதைகளை நினைவு படுத்துபவை. அவரைப் போலவே இந்துமதியும் இந்த நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மீதும் அளவுவில்லாத அன்பை வெளிப்படுத்தியிருப்பார். எல்லாக் கதாபாத்திரங்களையும் அதன் இயல்பான பலவீனத்துடன் விவரித்திருப்பார்.

சரளமான விவரிப்பு

அன்றைக்கு வெளிவந்த வெகுஜனக் கதைகளிலிருந்து இந்த நாவல் தனித்துவமானது. உரையாடல்களால் நிறைந்த அன்றைய காலகட்டக் கதைகளிலிருந்து விலகி அதிகமாக விவரிப்புமொழியில் இந்த நாவலை நகர்த்தியிருக்கிறார். விவரிப்புமொழியும் பிரயத்தனமின்றிச் சரளமாக வெளிப்பட்டிருக்கும்.

சூழலைச் சித்தரிக்கும் மொழி எங்கும் தயங்குவதே இல்லை. எழுத்தாளரின் குரலில் படர்க்கையில் சொல்லப்பட்டிருக்கும் கதை, கதாபாத்திரங்களை நெருங்கும்போது தன்னிலை விவரிப்பாக மாறிவிடுகிறது. உதாரணமாக கதையின் தொடக்கத்தில் விஸ்வம், உணவு பரிமாறும்போது சேலை மடிப்புக்குக் கீழே வெளிப்படும் தன் மன்னி ருக்குமணியின் வெள்ளை நிறக் கால்களை நினைக்கிறான்.

அத்துடன் தன் தங்கையின் கால்களை, அம்மாவின் கால்களை நினைக்க முயல்கிறான். தன் கால்கள் எப்படி இருக்கும் எனத் தனக்குள்ளே கேட்டுக்கொள்கிறான். அது சூவால் மூடப்பட்டுள்ளது. சூவையும் சாக்ஸையும் அவிழ்த்துப் பார்க்கலாமா, என நினைத்துப் பார்க்கிறான்.

பரசுவின் கதாபாத்திரத்தை நெருங்கும்போது அவன் உயரத்துக்குக் கதை, தலை தாழ்த்திக் கொள்கிறது. பள்ளிப்படிப்பை முடித்து, ‘நான் மேலே படிக்கிறேனேப்பா’ எனத் தந்தையிடம் அனுமதி கேட்டு நிற்கும் ஒரு சிறுவனாகக் கதைக்குள் வருகிறான் பரசு. தனக்கு மறுக்கப்பட்டதெல்லாம் தனக்கு எழுதப்பட்டதல்ல என்னும் நடுத்தர வர்க்க நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறான்.

பரசுவும் அவனுடைய தம்பியான விஸ்வமும் ஒரே வாழ்க்கையின் இருவிதமான முகங்களாகக் கதைக்குள் சொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் ருக்குமணி பரசுவின் மனைவியாக வருகிறாள்.

கதையின் சூழலைச் சித்தரிப்பதில் இந்துமதி மிதமிஞ்சிய ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். கதையின் ஒரு காட்சி நிகழும் இடத்தைச் சொல்லும்போது ஓவியனின் துல்லியத்தை வெளிப்படுத்துகிறார். அந்தச் சித்தரிப்பு கதைக்குத் தேவையானதாகவும் இருக்கிறது. ஒரு காட்சியில் பரசுவின் தந்தை, ஜெகன்நாதன் சுவர் பக்கமாகத் திரும்பிக்கொள்கிறார். அந்தச் சுவரில் சங்கராச்சாரியாரின் படம் மாட்டப்பட்டுள்ளது என்ற விவரிப்பு வருகிறது. இதன் மூலம் அந்தக் குடும்பத்தின் நம்பிக்கைகளை, ஆசாரங்களை வெளிப்படுத்துகிறார் இந்துமதி.

இந்த நாவலில் வெகுஜன நாவல்களில் வாசிக்கக் கிடைக்கும் அதிதீவிரமான கவர்ச்சிக்காக எந்த அம்சத்தையும் இந்துமதி சேர்த்திருக்க மாட்டார். ஒரு கூட்டுக் குடும்ப உறுப்பினர்களைச் சொல்லும் கதை அதில் யாரையும் குற்றவாளியாக்கவில்லை. ஒரு கதாபாத்திரத்தின் நற்பண்புகளுக்காக இன்னொரு கதாபாத்திரத்தைத் தாழ்த்தவில்லை. ரயில்வே ஊழியத்தில் குடும்பத்தை நடத்திக்கொண்டுபோகும் ஒரு நடுத்தரவர்க்கப் பிரதிநிதியின் அத்தனை சிரமங்களையும் ஒரு தாழ்ந்த குரலில் இந்த நாவலில் இந்துமதி சொல்கிறார்.

அதில் துன்பம் இல்லை. இதெல்லாம் இயல்பானதுதான் எனக் கதாபாத்திரங்கள் தமக்குத் தாமே உள்ளுக்குள் சொல்லிக்கொள்வதுபோல கதையைப் பகிர்கிறார். டைப்ரைட்டிங் முடித்தவுடன் அப்பா, பரசுவின் கைப்பிடித்துக்கொண்டு போகிறார். ஒரு வேலையில் சேர்கிறான். ஒரு மாலை நேரம் ஒரு பெரியவரை அறிமுகப்படுத்துகிறார். அந்தப் பெரியவரின் மகளுடன் கல்யாணம் நடக்கிறது. எங்கும் திமிறல் இல்லை.

ஆனால், மனத்தில் புகையும் அந்தக் கதாபாத்திரத்தின் சின்ன திமிறலை ஒரு முருங்கை மரத்தின் இலைகளை மொட்டை மாடியிலிருந்து உதிர்ப்பதைப் போல் இந்துமதி கதைக்குள் உதிர்க்கிறார். விஸ்வத்தின் புரட்சி மனத்தையும் அப்படியே கதைக்குள் விவரிக்கிறார்.

அரூப விதி

விஸ்வம்-ருக்குமணிக்குமான உறவு, சேலை மடிப்பின் கீழ் வெளிப்படும் அவளது தெளிவான கால்களைப் போன்றது; களங்கமின்மையும் வசீகரமும் ஒருசேரக் கொண்டது. அவர்களின் பொதுவான ரசனை, விருப்பங்கள் எல்லாம் ஒரு புள்ளியில் சந்தித்துக்கொள்கின்றன. மாட்டு வண்டிச் சக்கரங்களால் மணல் மிதிபட்டு நொறுங்குவதைக்கூட அவர்களால் கேட்க முடிகிறது. இந்தக் கதைக்குள் கசியும் சுகந்தமாக இந்த உறவை இந்துமதி பேரார்வத்துடன் சிருஷ்டித்திருப்பார்.

அற்புதங்கள் நிகழ்வதற்கு வாய்ப்பற்ற ஒரு நடுத்தர வர்க்க வாழ்க்கையை ஒரு சாரமாக எடுத்துக்கொண்டு தனக்கு நிகழ்வதெல்லாம் தனக்கென விதிக்கப்பட்டவை என அவற்றுடனே வாழ்ந்து மறையும் எளிய மனிதர்களின் கதையை இந்துமதி இதன் மூலம் சொல்லியிருக்கிறார். உலகின் மிகப் பெரிய மிருகமான யானை, சர்க்கஸ் கூடாரத்துக்குள் சிறு தொரட்டிக்கு முன் தலைகவிழ்வதை இந்துமதி ஒரு காட்சியில் சொல்கிறார். அதுபோல் இந்த நாவலில் புத்திசாலித்தனமான மனிதர்களும் அரூபமான விதிக்குத் தலை பணிகிறார்கள்.

இந்துமதி, ஒரு தலைமுறை வாசகர்களின் எழுத்தாளர். பல நூறு கதைகள் எழுதியுள்ளார். அந்தரத்தில் ஒரு ஊஞ்சல், அசோகவனம், நினைவே இல்லையா நித்யா உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார.


(பாதைகள் நீளும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x