இணையும் கரங்கள்: பெண்கள் மீதான வன்முறையை ஒழிப்போம்

இணையும் கரங்கள்: பெண்கள் மீதான வன்முறையை ஒழிப்போம்
Updated on
2 min read

உலகம் முழுவதும் பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் நிகழ்த்தப்படும் வன்முறைகளே பெண் இனத்தின் அவல நிலையைச் சொல்லிவிடும். தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வொன்றில், பெண்கள் வாழ ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது. நிகழ்வு நடப்புகளும் பெண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்குப் பெரும் அச்சத்தையே தருகின்றன.

இந்நிலையில் ஐ.நா. பெண்கள் கூட்டமைப்பு சார்பில் ‘உலகம் ஆரஞ்சுமய மாகட்டும்’ என்ற தலைப்பில் 1999 முதல்  ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 25 அன்று ‘பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான  நாளா’கக்   கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.  அன்று தொடங்கி மனித உரிமை நாளான டிசம்பர் 10 வரை 16 நாட்கள் இது கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் கரு: ‘உலகை ஆரஞ்சுமயமாக்குவோம்; ‘#மீடூ’களைக் காதுகொடுத்துக் கேட்போம்’. இந்த நாட்களில் ஐ.நா. அமைப்பு உட்பட நாட்டிலுள்ள அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கல்விக் கூடங்கள், விளையாட்டு அமைப்புகள் எனப் பெண்கள் அங்கமாக உள்ள அனைத்துத் துறைகளும் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகத் துணை நிற்க வலியுறுத்தப்படுகிறது.

அதேநேரம் ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பும் பெண்கள் கீழ்மையானவர்கள் என்ற எண்ணமும்தான் பெண்கள் மீதான வெறுப்பு அரசியலுக்கு முதன்மைக் காரணங்கள். பெண்கள் மீதான வன்முறை என்பது ஒட்டுமொத்த மனித சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் நடைபெற்றுவருவதை கவனிக்க வேண்டியது அவசியம்.

உலகில் மூவரில் ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. பெண்களைப் பாதுகாக்க வரதட்சிணைக் கொடுமைத் தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறைச் சட்டம், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டம், பணியிடங்களில் பெண்களுக்குப் பணியிடப் பாதுகாப்புச் சட்டம் எனப் பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.
 

un-womenjpg

பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் பெரும்பாலும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாலேயே நடக்கின்றன. பாலியல் தொழிலுக்காக மட்டும் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான பெண்கள் கடத்தப்படுகிறார்கள்.  பெண்கள் மீதான கொடுமைகளை எதிர்த்து மகளிர் அமைப்புகளின் சார்பில் ஆயிரக்கணக்கான போராட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெற்றுவருகின்றன.

குறிப்பாக இந்த ஆண்டு #மீடூ, டைம்ஸ் அப், நோ ஒன்மோர் டைம் போன்ற பெயர்களில் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகத் தொடங்கப்பட்ட பிரச்சார இயக்கங்கள் கவனிக்கத்தக்கவை. இதுபோன்ற இயக்கங்களால் தங்களுக்கு எதிரான கொடுமைகளிலிருந்து பெண்கள் ஓரளவாவது விடுபட முடியும்.

இந்தத் தலைப்பின்கீழ் ஐ.நா. பெண்கள் அமைப்பு பல்வேறு மகளிர் அமைப்புகள், அரசு, பொதுமக்கள் ஆகியோருடன் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

மனித இனத்தின் வழிகாட்டியாகப் பெண்கள் இருந்த நிலைமாறி, இன்றைக்குப் பெண்ணை சகமனுஷியாகக்கூட கருதாத சமூகத்தில் நாம் வாழ்கிறோம். பெண்கள் எவ்வளவு சாதனைகளைப் புரிந்தாலும் அவர்களை அழகுப்பதுமையாக, அடிமையாக, நுகர்வுப் பொருளாகவே பார்க்கும் போக்கு ஆபத்தானது. இந்நிலை மாற வேண்டும் என்றால் சமூக மாற்றத்தினூடே தனிநபரின் மனமாற்றமும் முக்கியம்.

இதற்கான விழிப்புணர்வு இயக்கத்தை ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழும் ஐ.நா. பெண்கள் அமைப்பும் ஒன்றிணைந்து முன்னெடுக்கின்றன. இதன் தொடர்ச்சியாக அடுத்துவரும் இதழ்களில் இது தொடர்பான கட்டுரைகள் வெளியாகும். தமிழக நகரங்களில் நடத்தப்படவிருக்கும் மகளிர் திருவிழாக்களிலும் பெண்கள் மீதான வன்முறை குறித்து விவாதிக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in