வானவில் பெண்கள்: சிற்பம் செதுக்கும் ரீட்டா

வானவில் பெண்கள்: சிற்பம் செதுக்கும் ரீட்டா
Updated on
1 min read

சிற்பி என்ற வார்த்தையைக் கேட்டதுமே பெரும்பாலானோர் மனத்திலும் உளிகொண்டு சிலை செதுக்கும் ஆணின் சித்திரமே தோன்றும். காரணம் அந்தத் துறையில் ஆண்களே அதிகமாக நிறைந்திருக்கின்றனர். செப்புச் சிலை வடிப்பும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், அந்தப் பொதுவிதியை உடைத்து, செப்புத் தகட்டில் சிற்பங்கள் செய்வதில் வல்லவராக இருக்கிறார் ரீட்டா குலோத்துங்கன்.

விழுப்புரம் மாவட்டம் மேற்கு சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் ரீட்டா. அறை முழுதுவம் பளிச்சிடும் கலைப் படைப்புகளுக்கு நடுவே செப்பில் விநாயகர் சிற்பத்தைச் செதுக்கிக் கொண்டிருந்தார் அவர்.  பள்ளிப் பருவத்தில் ஓவியம் தீட்டுவதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். பொழுதுபோக்காகத் தொடங்கியது பின்னாளில் வேகமெடுத்துப் பாயும் என ரீட்டா நினைத்திருக்கவில்லை. திருமணத்துக்குப் பிறகு கணவரின் துணையால் அது நிகழ்ந்ததாக ரீட்டா குறிப்பிடுகிறார்.

 “எனக்கு வரைவதில் ஆர்வம் இருப்பதைத் தெரிந்துகொண்ட என் கணவர், கம்பளி ஆடை பின்னுவதைக் கற்றுக்கொள்ள  சாருமதி கோபால் என்பவரிடம் பயிற்சிக்கு அனுப்பினார். அதன் பிறகு அலுமினியத் தகட்டில் ஓவியம், தஞ்சாவூர் ஓவியம், வாட்டர் கலர் பெயின்டிங், ஆயில் பெயின்டிங், செயற்கை நகைகள் தயாரிப்பது, மெட்டல் வொர்க், எம்ப்ராய்டரி போன்ற கைவினைக் கலைகளைக் கற்றுக்கொண்டேன்” என்கிறார் ரீட்டா.

கலைத் துறையில் ஆர்வத்துடன் செயல்பட்ட ரீட்டா 13 வகையான கைவினைக் கலைகளைக் கற்றுக்கொண்டார். குறிப்பாக மூவாயிரம் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு  ஒன்பது அடி உயரத்தில் இவர் வடிவமைத்த விநாயகர் சிற்பம் அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.  கைவினைக்கலை தவிர  இலக்கியம், இதழியல், யோகா, இந்தி என நான்கு படிப்புகளில் அவர் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

“ஏறக்குறைய 27 வருஷம் இந்த மாதிரியான கலையே என் வாழ்க்கையா மாறிடுச்சு. இதில் எதையாவது சாதிக் கணும்னுதான் செப்புத் தகட்டில் சிற்பங்களை வடிக்கத் தொடங்கினேன். பொதுவா இந்த மாதிரி சிற்பங்களை உருவாக்குவதில் பெண்களோட எண்ணிக்கை குறைவு.  காரணம் இது கொஞ்சம் கஷ்டமான வேலை.  ஒரு சிற்பத்தை உருவாக்க ஆறு மாதம்கூடத் தேவைப்படும்” என்கிறார் ரீட்டா. இவரது இந்தக் கலைப் பணியைப் பாராட்டி, தமிழக அரசு 2011-ம் ஆண்டு  ‘கலைச் சுடர்’ விருது வழங்கிக் கௌரவித்தது.

அதேபோல் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனிலும் இயற்கை ஓவியம், பழைய காகிதங்களைக் கொண்டு கூடை தயாரித்தல், காகிதப் பூக்கள், மூலிகைத் தைலம், மெஹந்தி போடுதல், பாக்கு மட்டையில் ஓவியம், நவதானியங்களில் அலங்காரத் தட்டுகள், அரச இலையில் வாழ்த்துமடல் எனப்  பல்வேறு பயிற்சிகளைக் கட்டணம் இல்லாமல் கற்றுத்தரும் நிகழ்ச்சிகளைத் தருகிறார் இவர். விரைவில் பயிற்சி மையம் தொடங்கும் முனைப்புடன் செயல்பட்டுவருகிறார் ரீட்டா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in