வானவில் பெண்கள்: சாதிக்கவைத்த இயற்கை விவசாயம்!

வானவில் பெண்கள்: சாதிக்கவைத்த இயற்கை விவசாயம்!
Updated on
1 min read

இயற்கை விவசாயம், ரசாயனக் கலப்பில்லாத உணவு வகைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துவரும் வேளையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் புதிய பாதையை அமைத்திருக்கிறார்கள். இயற்கை முறையில் கத்தரி, புடலை, பாகற்காய், சுரைக்காய், அவரை போன்றவற்றைச் சாகுபடி செய்து குறைந்த செலவில் அதிக மகசூல் பெற்றுவருகின்றனர்.

அரசடிக்குப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட  ஏ.புதூர், அரசடிக்குப்பம், சிறுதொண்டமாதேவி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 25 மகளிர் சுய உதவி குழுக்களைச்  சேர்ந்த பெண்கள்தான் அந்தப் பெருமைக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள். ‘ரியல்’ என்னும் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வதற்கான பயிற்சி இவர்களுக்கு அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற கையுடன் களத்தில் இறங்கிவிட்டனர்.

அரசடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ‘ஜெயம் ரியல் மகளிர் சுய உதவிக்குழு’வைச் சேர்ந்த குணசுந்தரி, “நானும் என் கணவரும் விவசாயக் கூலி வேலைக்குப் போயிட்டு இருந்தோம். குடும்பத்தை நடத்துறதே ரொம்ப சிரமமா இருந்துச்சு. அப்போதான் எங்க கிராமத்துல தொடங்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவுல உறுப்பினரா சேர்ந்தேன்” என்கிறார். இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் பயிற்சியில் இவரும் கலந்துகொண்டார்.

“எனக்குச் சொந்தமா நிலம் இல்லை. இருந்தாலும் 50 சென்ட் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தேன். ஆரம்பத்துல புடலை, அவரை, பாகற்காய் எல்லாம் பயிரிட்டோம். இப்போ கத்திரி போட்டிருக்கோம்” என்று சொல்லும் குணசுந்தரி, இயற்கை சாகுபடி முறைக்குத் தேவையான பஞ்சகவ்யம், மண்புழு உரம், அமிர்தக் கரைசல்களை வேளாண் ஆலோசகர் ஆலோசனையின்படி இவரே தயாரித்துவிடுகிறார். இயற்கை முறையில் பயிர்செய்தால் விளைச்சல் அதிகமாக இருக்காது என்ற கற்பிதத்தைக் கத்தரி சாகுபடியில் அதிக மகசூல் பெற்றதன் மூலம் இவர் தகர்த்திருக்கிறார்.

“கத்தரி சாகுபடியில்  15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவு செய்திருக்கோம்.  இரண்டரையிலிருந்து மூணு டன்வரை கத்தரி அறுவடை செய்து விற்பனை செய்திருக்கோம். சராசரியாக 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல வருமானம் கிடைச்சுது. செலவு போக 45 ஆயிரம் ரூபாய் கையில நின்னுது” என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார் குணசுந்தரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in